கோமாரிக்கல்

கால்நடைகளுக்கு, குறிப்பாகப் பால் வளம் மிகுந்த மாடுகளைத் தாக்கிப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய கொடிய நோயான 'கோமாரி' யிலிருந்து அவற்றைக் காப்பதற்காக, நாட்டுப்புற மக்களால் வழிபடப்பட்ட ஒரு பாரம்பரிய முறையே 'கோமாரிக் கல்' ஆகும்.
கோமாரிக்கல்
கோமாரிக்கல்
Published on
Updated on
2 min read

மணிசேஷன்

கால்நடைகளுக்கு, குறிப்பாகப் பால் வளம் மிகுந்த மாடுகளைத் தாக்கிப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய கொடிய நோயான 'கோமாரி' யிலிருந்து அவற்றைக் காப்பதற்காக, நாட்டுப்புற மக்களால் வழிபடப்பட்ட ஒரு பாரம்பரிய முறையே 'கோமாரிக் கல்' ஆகும்.

பழங்காலத்தில், கோமாரி நோய்க்குத் தடுப்பூசிகள் போன்ற நவீன மருத்துவ முறைகள் இல்லாதபோது, கால்நடைகள் இந்த நோயால் இறப்பது சாதாரணமாக இருந்தது. அதனால், தங்கள் வாழ்வாதாரமான கால்நடைகளைக் காக்க, கிராம மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை நம்பினர். அதன் விளைவாகவே, நோய் நீக்கும் சக்தியைக் கொண்டதாகக் கருதப்பட்ட ஒரு கல்லை ஊரின் பொது இடத்தில் நிறுவி, அதை வழிபடத் தொடங்கினர். இதுவே 'கோமாரிக் கல்' என்று அறியப்பட்டது.

கோமாரிக் கல் என்பது ஒரு நிலையான வடிவம் கொண்டதல்ல; இது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். இது ஒரு பலகைக் கல்லாகவோ, சிறிய தூண் அல்லது உருவமற்ற குறியீட்டு வடிவிலான கற்சிலையாகக்கூட இருக்கலாம். இதன் முதன்மையான நோக்கம் நோயைத் தடுப்பதே என்பதால், கல்லின் வடிவம் இரண்டாம்பட்சமாக இருந்தது. மாறாக, மக்கள் அதன் மீது வைத்த நம்பிக்கையே பிரதானமாகப் பார்க்கப்பட்டது.

பெரும்பாலான கற்கள் சிக்கலான செதுக்குதல் வேலைகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், சிலவற்றில் கிராமத் தெய்வத்தின் பெயர், கால்நடை ஒன்றின் புடைப்புச் சிற்பம் அல்லது மந்திர எழுத்துகள் போன்ற எளிய அடையாளங்கள் இருந்தன. இந்தக் கற்கள் நாட்டுப்புற மக்களின் வழிபாட்டுப் பொருள்களாக இருந்ததால், இவற்றில் செதுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பற்றி உறுதியாகக் கூறமுடியவில்லை.

இந்த வழிபாட்டுக் கல்லை நிறுவும் பொறுப்பு பெரும்பாலும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள், பூசாரிகள் அல்லது மூத்த கால்நடை வளர்ப்போரையே சாரும். கால்நடைகளுக்கு நோய் வந்தாலோ அல்லது நோய் பரவும் அச்சம் இருந்தாலோ, இந்தக் கல்லைத் தேர்ந்தெடுத்து, புனிதப்படுத்தி, ஊரின் மையத்தில் அல்லது கால்நடைகள் மேயும் இடத்தில் நிறுவி வழிபடத் தொடங்குவர்.

மாடுகளுக்கு நோய் வந்து குணமடைந்தாலோ அல்லது நோய் வராமல் தடுத்தாலோ, நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தக் கல்லுக்குப் படையலிடுதல், பொங்கலிடுதல் அல்லது சிறிய காணிக்கைச் செலுத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செய்வார்கள்.

விநோதமான நடைமுறைகளாக, நோயுண்ட கால்நடைகளை இந்தக் கல்லைக் கழுவிய நீரினைத் தாண்டச் செய்தல் மற்றும் நோய் குணப்படுத்தும் மூலிகைகளைக் கல்லில் பூசி, அதனைப் பிரசாதமாக மாடுகளுக்கு அளிப்பது போன்ற சடங்குகளும் நடந்துள்ளது.

இன்று, கோமாரி நோய் தடுப்பூசிகளும், நவீன கால்நடை மருத்துவமும் பரவலாகக் கிடைப்பதால், கோமாரிக் கல்லை மையப்படுத்திய வழிபாடும் சடங்குகளும் வெகுவாகக் குறைந்துவிட்டன.

இருப்பினும், 'சன்னாசிக் கல்', 'மந்திரக் கல்', 'மந்தைக்கல்', 'கோவுக்கல்' மற்றும் 'சிலைக்கல்' போன்ற பல பிராந்தியப் பெயர்களாலும் அறியப்படும் இந்தக் கல், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மேற்கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக இன்றும் சில கிராமங்களில் ஒரு சின்னமாக இருந்து வருகிறது.

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கொளத்தூரில், மாட்டுப்பொங்கலன்று ஊர் கால்நடைகளை இந்தக் கல் இருக்கும் இடத்தில் வைத்து வழிபடும் வழக்கம் இன்றும் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com