கல்லணை உருவானது எப்படி ?

'கட்டுமானத்தில் உறுதி, கம்பீரத்தில் மிடுக்கு, அணைகளுக்குக் கிரீடம் உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்டு, தமிழர்களின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் வகையில் கல்லணை அமைந்திருக்கிறது.
கல்லணை உருவானது எப்படி ?
Ashwin Kumar
Published on
Updated on
4 min read

தமிழானவன்

'கட்டுமானத்தில் உறுதி, கம்பீரத்தில் மிடுக்கு, அணைகளுக்குக் கிரீடம் உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்டு, தமிழர்களின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் வகையில் கல்லணை அமைந்திருக்கிறது. கரிகால்சோழன் வடிவமைத்த கல்லணையைக் காட்டிலும், உலகத்தில் சிறந்த நீரியல் கட்டுமானம் இதுவரை எதுவும் இல்லை'' என்கிறார் யுனெஸ்கோ கட்டடக் கலை பாதுகாப்பு ஆலோசகரும் பேராசிரியருமான கோ. தெய்வநாயகம் .

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலைத் துறையை நிறுவிய இவர், புலமுதன்மையாளராகப் பணியாற்றியர். 'தமிழ் வரலாறு, இலக்கியம், தொல்லியல், கட்டடக் கலை உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்' என்பதோடு, நீரியல் கட்டுமானம் குறித்து ஆய்வு நடத்தியவர்.

கடலில் மூழ்கிய பூம்புகாரையும் சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகி கோட்டத்தையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்த பேராசிரியர் சி. கோவிந்தராசனின் மகன்.

எழுபத்து மூன்று வயதிலும் நீரியல் விழிப்புணர்வில் ஈடுபட்டு வரும் தெய்வநாயகத்துடன் ஒரு சந்திப்பு:

தமிழர்களிடம் நீரியல் அறிவு இருந்ததா? அது எந்த அளவுக்கு இருந்தது ?

'நீரின்றி அமையாது உலகு' என்ற போதனையைக் கூறியது திருக்குறள்.

தொல்காப்பியம் மரபியலில், ஓரறிவு உயிர்கள் முதலாகப் பட்டியலைத் தருகிறார் தொல்காப்பியர். புல், நெல் போன்ற ஓரறிவு உயிர்கள் சூரிய வெளிச்சத்தில் வளர்ந்தாலும் வானுலகத்தில் இருந்து வரும் அமிழ்தமான மழையை நம்பியிருந்தன. 'மாமழை போற்றுதும்' என்று கூறும் சிலப்

பதிகாரமும், 'மழைநீர் சுரத்தல்' என்ற சொல்லாடலையும் அளித்துள்ளது.

அந்தக் காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில் 'வாவி' என்ற நீர்நிலை இருந்ததை புறநானூறு சுட்டிக் காட்டுகிறது. இதுதான் பின்னர் கேணியாக மாறியது.

மழையைப் போற்றத் தெரிந்த தமிழர்கள் அதுவே வெள்ளமாகப் பெருக்கெடுக்கும்போது, அதைப் பாதுகாத்துப் பயன்கொள்ளும் அறிவும் இருந்தது.

தமிழர்களின் புழக்கத்தில் இருந்த நீர்நிலைகள் என்னென்ன ?

தமிழர்கள் உண்ணும் நீருக்கு முக்கியத்துவம் அளித்தனர். 'உண்ணும் நீர்' என்பது அமிழ்தமான மழைநீர்தான். இந்த மழைநீரைத் தேக்கி வைக்கவும், பகிர்ந்து அளிக்கவும் வடிகாலாக வெளியேற்றவும் உருவாக்கினார்கள். கேணி, குளம், குட்டை, ஏரி, தாங்கல், ஏந்தல், அருவிகள், ஆறுகள், கண்மாய்கள், பேராறுகள், சிற்றாறுகள், பெருவாய்க்கால், சிறுவாய்க்கால், ஓடைகள், கண்ணிகள் என்ற பெயர்களில் அவை விளங்கின.

ஆறுகள் மீதான தமிழர்களின் பார்வை எப்படி இருந்தது ?

நிலப் பகுதியை அறுத்துக் கொண்டு ஓடுவதால், அது 'ஆறு' என்று பெயர் பெற்றது. சில இடங்களில் ஆறு காட்டாறாக ஓடும். பாய்ந்து ஓடும். சீறி ஓடும். குதித்து ஓடும். நடந்து ஓடும். இதுதான் ஆறுகளின் இயல்பு. ஆறுகளின் நீர் கடலில் கலப்பதைத் தடுத்து நீர் சேமிப்புக்கு வழிவகுத்ததுதான் தமிழர்களின் பார்வையாக இருந்தது.

கல்லணையை ஏன் கட்டினான் கரிகாலன் ?

குடகு மலையில் உருவாகும் காவிரி, தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. காவிரியின் வெள்ளப் பெருக்கு வீணாகக் கடலில் கலக்கவிடாமல், சேமிக்க வேண்டும் என்ற நீரியல் அறிவின் காரணமாகத்தான் கரிகால் சோழன் கல்லணையைக் கட்டினார். கல்லணை கட்டிய காலத்தில் கர்நாடகத்தில் இப்போது உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்ட எந்த அணைகளும் இல்லை. இப்போது அங்கிருந்து ஒழுகும் நீரும், மழைக்காலத்தில் வடிகாலாகப் பயன்படுத்தும் நீரும்தான் நமக்கு வந்து சேருகிறது.

கல்லணை கட்டுமானத்தில் உலகின் பார்வை எப்படி இருக்கிறது ?

எகிப்தில் ஓடும் நைல் நதியின் பணியில் இருந்த சர் ஆர்தர் காட்டன், நீரியல் பொறியியல் துறையில் இங்கிலாந்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவர் கல்லணையில் இரண்டரை ஆண்டுகள் தங்கி ஆய்வு செய்து, 1860-இல் அளித்த அறிக்கையில், 'உலகத்தில் மிகச் சிறந்த நீரியல் கட்டுமானம் இதுதான்' என்று கூறியிருந்தார். இதுவே கல்லணையின் கட்டுமான அறிவியல், நீரியல் தொழில்நுட்பச் சிறப்புகளை உலகுக்கு உணர்த்தியது.

கல்லணை நீர் கட்டுமானத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மேல் ஒழுங்குப் பணிகளை மேற்கொண்டு, அஸ்திவாரத்தை வலுப்படுத்தினார்கள்.

உறுதியாக இருக்க அப்படி எந்தெந்தக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தி கல்லணை கட்டப்பட்டுள்ளது ?

முயன்று தவறி கற்றல் முறைதான் கல்லணை கட்டுமானப் பணிக்கு உதவி செய்துள்ளது. இதற்கு முன்பாக ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தும் எந்த நீரியல் கட்டுமானமும் தமிழர்களிடம் இல்லை. காவிரி இரண்டு நீர் சுழற்சிகளாக ஓடி வருகிறது. ஒன்று 12 அடி கீழாகவும், மற்றொன்று மேலாகவும் இருக்கிறது. இரண்டு பகுதிகளையும் இணைத்துதான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

எளிய, கிடைக்கும் பொருள்களைக் கொண்டே கல்லணை கட்டப்பட்டுள்ளது. கச்சமங்கலம் என்ற பகுதியில் முதன்முதலில் படுகை அணைதான் கட்டப்பட்டது. அதன்பிறகுதான் கல்லணை. இந்தப் பகுதியில் அதிகமான கல் திரடுகள், அதாவது கல்வேர் இருப்பதை கரிகால சோழன் கண்டறிந்தார். கல் திரடுகள் என்பது கத்தி போன்று கூர்மையாக முளைத்து வருவது போன்றிருக்கும். சுற்றிலும் குன்றுகள், மலைகள் இருந்ததால் இந்தப் பகுதியில் இயல்பாக இப்படி அமைந்துள்ளது.

காவிரியில் கல்லணை கட்டப்பட்டுள்ள அடிப்பகுதி முழுவதும் கல்வேர் சூழ்ந்த பகுதி. இந்தப் புவியியல் அறிவைக் கொண்டு கரிகாலன் விளங்கினார். இந்தக் கல்வேர்களின் மீதுதான் கல்லணை அமைந்துள்ளது. கல்லணைக்காக 10 அடி நீளம், 8 அடி அகலம், 4 அடி தடிமன் கொண்ட ஆயிரக்கணக்கான கற்கள் சுமார் 50 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டுவரப்பட்டன. இந்தக் கருங்கற்களை ஆற்றில் அப்படியே போட்டுவிட்டால், அணை உருவாகிவிடாது. அதுதான் கரிகாலன் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிய கல்லணை.

கல்லணையின் அஸ்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கல் வேர்கள் அமைந்துள்ள பகுதியைக் கண்டறிந்து ஆழமாகப் பள்ளம் எடுத்து அதில் கற்களை அடுக்கி கட்டுமானத்தைச் செய்தார் கரிகாலன். கற்களை அடுக்குவதற்காக ஒரு கல்லை ஆற்றில் விடும்போது அதைப் பிடித்துத் தூக்கிப் பொருத்துவதற்காக ஒரு கவ்வியைப் பயன்படுத்தியுள்ளனர். அப்படிப் பயன்படுத்தும்போது ஆற்றில் நீருடன் ஓடிக் கொண்டிருக்கும் மணலும் அந்தக் கல்லுக்குக் கீழும் மேலும் ஓர் அடுக்காகப் படிந்து விடுகிறது. அதற்கு மேல் கல்லணையின் கல். இப்படியாகக் கட்டப்பட்டதுதான் கல்லணை.

மணல் உறுதித்தன்மை நல்கும். திருமணத்துக்காகப் பந்தல்கால் நடும்போதுகூட இரண்டு கைப்பிடி மணல் இருந்தால் பள்ளத்தில் கொட்டிவார்கள். பிறகு அந்தக் காலை உருவுவது மிகவும் சிரமம். அப்படித்தான் கல்லணையில் மணல் அடுக்குகளாகப் படிந்து உறுதிக்கு உரம் கொடுத்துள்ளது. அதனால் கல்லணையின் உறுதிக்கு மணலும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தெய்வநாயகம்
தெய்வநாயகம்

இதைத் தவிர எந்த ஒரு நீர் கட்டுமானத்தையும் 8 அடிக்கு மேல் கட்டுவதாக இருந்தால் நீர் ஒழுக்கு அளிக்க வேண்டும். அதாவது நீர் கட்டுமானத்தில் சிறிது சிறிதாகத் துவாரங்கள் அமைத்து சிறிய அளவில் நீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். அந்தக் கட்டுமான உத்தியும் கல்லணையில் இருக்கிறது. இந்த அடிப்படை அறிவு இல்லாமல்தான் இப்போது கடலில் கட்டப்படும் தூண்டில் முள் வளைவு அமைக்கப்படுகிறது.

இதைத் தவிர கல்லணை பகுதியில் பாய்ந்து வரும் காவிரி இரண்டு நீர் சுழற்சிகளையும் இணைக்கும் வகையில் கல் குவியல் ஓர் அடுக்காகக் கொட்டப்பட்டுள்ளது. இதைத்தான் 'கல்லலை' என்று புறநானூறு கூறுகிறது. கல்குவியல் மேல் மணல் படர்ந்துள்ளது. பிறகு தாவரக் கழிவுகள் ஓர் அடுக்காகக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போதுதான் அமெரிக்காவில் கழிவுகளைக் கொட்டி நிரப்பும் முறையைக் கண்டறிந்துள்ளார்கள். அதனால் கரிகாலன் காலத்திலேயே கல்லணை நீர் கட்டுமானத்தில் தமிழர்களின் இந்தப் பண்டைய நீரியல் தொழில்நுட்ப அறிவு உலகுக்கு வழி காட்டியுள்ளது.

அந்தக் காலத்தில் கல்லும், மணல் மட்டும்தான் தமிழர்களின் கட்டுமானப் பொருள்களாக இருந்தனவா ?

இந்த இரண்டு மட்டுமல்ல. தமிழர்களின் கட்டுமானத்தில் முக்கியமான பங்கு வகித்தது மண். அதாவது, மென் களிமண்ணைப் புளிக்க வைத்து நொதிக்க வைத்துக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தினார்கள். கூடவே காற்றாழை நாரைச் சேர்த்து மிதிப்பார்கள். இதற்கு 'படையெடுத்தல்' என்று பெயர். பக்குவத்துக்கு வந்ததும் உருண்டையாக உருட்டி சுவர் எழுப்பினார்கள். அதற்குப் பிறகுதான் கடுக்காயும் சுண்ணாம்பும் சேர்ந்து கொண்டன. இப்போது பயன்படுத்தும் சிமென்டின் ஆயுள்காலம் 20 ஆண்டுகள்தான்.

படம்: கி.ரமேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com