சமூக ஊடகங்களில் பயணிப்போரே உஷார்...

'செல்போன் இல்லாதவர்கள் செல்லாதவர்கள்; இணையவசதி இல்லாதவர்கள் இவ்வுலகில் இல்லை' என்பது புதுக்குறளாகிவிட்டது.
சமூக ஊடகங்களில் பயணிப்போரே உஷார்...
Published on
Updated on
3 min read

'செல்போன் இல்லாதவர்கள் செல்லாதவர்கள்; இணையவசதி இல்லாதவர்கள் இவ்வுலகில் இல்லை' என்பது புதுக்குறளாகிவிட்டது. அந்த வகையில் எல்லோரும் சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் இயங்கிவருகிறோம்.

இந்த நிலையில், பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி, இணையக் குற்றங்களில் வாயிலாக 'ஹாக்கர்கள்' பணம் பறிப்பது அதிகரித்துவிட்டது. 'இதை எவ்வாறு எதிர்கொள்வது?' என்பது குறித்து பெங்களூரைச் சேர்ந்த இணையக் குற்றங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் முனைவர் ஹர்ஷா இ.தென்னரசுவிடம் பேசியபோது:

'முக்கியப் பிரமுகர்களைக் குறிவைத்து, அவர்களின் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளைத் தொடங்குதல், அவர்களின் கணக்குகளை 'ஹாக்' செய்து பணம் பறித்தல் தொடர்கதையாகிவிட்டது. சமூக ஊடகங்களில் தனிப்பட்ட தகவல்களை யாரும் அதிகம் பதிவேற்றம் செய்ய வேண்டாம். முகம் தெரியாத நபர்களின் நட்பை ஏற்க வேண்டாம். அவர்கள் பேச்சுக் கொடுத்தால், பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

பிரபலங்களின் சமூக ஊடகக் கணக்கை மர்ம நபர்கள் 'ஹாக்' செய்வார்கள். இல்லையெனில், அவர்களது பெயர்களில் போலியான கணக்குகளைத் தொடங்குவார்கள். பின்னர், பிரபலங்களின் நட்பு வட்டத்தில் இருப்போருக்கு தங்களுக்கு அவசரமாகப் பணம் தேவை என்றும் குறிப்பிட்ட எண்ணுக்குப் பணம் அனுப்புமாறும் தகவல் அனுப்புவார்கள்.

இதுபோன்ற நேரத்தில் உரியவர்களைத் தொடர்பு கொண்டு, அது உண்மையா? என்பதை அறிய வேண்டும். அவர்களுக்கு எச்சரிக்கைத்தர வேண்டும். அவரிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்றும் அவசரப்பட்டு ஏமாறுவோர் அதிகம் உள்ளனர். தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், உரியவரிடம் பேசிவிட்டே பணம் அனுப்ப வேண்டும். சமூக ஊடகத்தில் வரும் தகவலை நம்பி யாரும் பணம் அனுப்பிவிடக் கூடாது.

ஒருவேளை இணையக் குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால், 1930 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். பணம் இழந்தவராக இருந்தால், 1945 என்ற எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம். இவ்விரு தொலைபேசி எண்களில் புகார் அளிப்பதன் மூலம், பாதிக்கப்பட்டோர் ஏமாற்றப்பட்டது குறித்து சைபர் கிரைம் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.

சைபர் கிரைமில் புகார் அளித்துவிட்டால் ரசீது கொடுப்பார்கள். பணம் வரவில்லையென்றால், அவ்வளவுதானா? என்று கவலைப்பட வேண்டாம். இதற்கும் ஒரு வழி உண்டு. 'இணையக் குற்றம் வாயிலாகப் பணத்தை இழந்தால் அதற்கு வாடிக்கையாளர் காரணம் அல்ல; வங்கி நிர்வாகமே பொறுப்பு' என்று கேரள உயர்நீதிமன்றம் 2023-இல் அளித்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, வழக்குரைஞர் வாயிலாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். நீதிமன்ற உத்தரவின்படி, வங்கி நிர்வாகத்திடம் வட்டியுடன் பணத்தைப் பெற முடியும்.

சமூக ஊடகங்களின் பாஸ்வேர்டை எளிமையான முறையில் பெயரோடு சில எண்களையும், பிறந்தத் தேதியையும் சேர்த்து வைக்கக் கூடாது. 12 எழுத்துகள் கொண்டதாக நீளமாக இருக்க வேண்டும். அதில், எண்கள், சிறிய-பெரிய ஆங்கில எழுத்துகள், சிறப்பு கேரக்டர்கள், சிறப்பு எழுத்துகள் என்று எவராலும் கணிக்க முடியாத வகையில் இருக்க வேண்டும்.

தேவையில்லாத 'ஆப்'புகளை பதிவேற்றம் செய்துவைக்க வேண்டாம். எந்தவொரு 'ஆப்' பதிவேற்றம் செய்வதாக இருந்தாலும், அதுகுறித்து 'கூகுள்' இணையத்துக்குச் சென்று, அதற்கான 'ரேட்டிங்' பார்க்க வேண்டும். அதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்து, இதைப் பதிவேற்றம் செய்தால் ஆபத்து ஏற்படுமா? என்பதை முழுவதும் அறிந்த பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கைப்பேசியைப் பயன்படுத்துவோரைத் தவிர, வேறு யாரேனும் 'ஆப்'புகளைப் பதிவேற்றம் செய்யாதவாறு 'பாஸ்வேர்டு' பதிவு செய்துவைக்க வேண்டும். உறவினர்களோ அல்லது இணையவழியில் வேறு யாரேனும் நமது கைப்பேசியில் பதிவேற்றம் செய்யாதவாறு கவனிக்க வேண்டும். அப்படி ஏதேனும் 'ஆப்'கள் பதிவேற்றம் ஆகியிருந்தால் உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

'ஆன்டி வைரஸ்' எனும் அப்ளிகேஷனை வாடிக்கையாளர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டும். இது ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் போல இருக்கும். இலவசமாகக் கிடைக்கும் 'ஆன்டி வைரஸ்' பயன்படுத்துவதைவிட, கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் 'ஆன்டி வைரஸ்' பயன்படுத்துவது நல்லது. பல்லாயிரம் ரூபாய் செலவழித்து கைப்பேசியை வாங்கும் நிலையில், சில நூறு ரூபாய் 'ஆன்டி வைரஸ்'-க்குச் செலவழிப்பதில் தவறு இல்லையே?

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களைச் சேகரித்து, வட மாநிலத்தில் 'ஹாக்கர்கள்' இயங்கி, லட்சம் ரூபாய் வரையில் குறிவைத்து, சிறுக, சிறுகப் பணத்தைப் பறிக்கின்றனர். உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், பண மோசடி செய்யப்பட்டதைவிட விசாரணை நடத்த அங்குச் செல்லவே அதிகப் பணமாகும் என்பதால் இந்தக் குற்றங்களின் மீது விசாரணைகள் பெருமளவு நடத்தப்படவில்லை. காவல் துறையினர் குற்றவாளிகளை நினைத்தால் பிடித்துவிடலாம்.

மர்ம நபர்கள் கைப்பேசியில் அழைத்து, 'உங்களுக்கு கொரியரில் போதைப்பொருள் வந்துள்ளது. நாங்கள் காவல் துறையில் இருந்து பேசுகிறோம்'' என்று கூறுகின்றனர். இதை நம்பி ஏமாறுவோரிடம், பணத்தைப் பறிக்கின்றனர். இவர்கள் போலியாகத் தயாரித்த அடையாள அட்டைகளையும் தொடர்பு கொண்டவர்களுக்கு அனுப்புகின்றனர்.

மர்ம நபர்கள் தங்களது பின்புலத்தில் காவல் நிலையம் இயங்குவதுபோன்ற தோரணையையும் போலியாகத் தயாரித்து, அதற்கான ஒலிகளையும் இயங்கச் செய்வர். இவ்வாறு மர்ம நபர்கள் மிரட்டினால், அச்சப்பட வேண்டாம். 'உள்ளூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு வாருங்கள். அவர்கள் வழியாக விசாரணை நடத்துங்கள்' என்று கூறுங்கள். நீங்கள் அச்சப்படுவதே அவர்களுக்கான பலம்.

சிலரிடம், 'நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது எப்படி? பெரிய தொகை உங்களுக்கு வந்துள்ளது.. இது எப்படி?'' என்றெல்லாம் பேசுவார்கள். வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதாக இருந்தால், வங்கியின் தரைவழித் தொலைபேசி எண்ணில் இருந்தோ அல்லது இ.மெயில் முகவரியில் இருந்தோ அழைப்பார்கள். கைப்பேசியில் அழைக்க மாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்கிறார் ஹர்ஷா இ.தென்னரசு.

வங்கியின் பெயரைச் சொல்லி மோசடி என்றால்....

'வங்கியின் பெயரைச் சொல்லி, அதன் இணையத்தையும், சர்வரையும் பயன்படுத்தி பண மோசடி செய்யப்பட்டால் வங்கி நிர்வாகத்தின் வாயிலாகத் திரும்பப் பெறலாம்'' என்கிறார் மூத்த வழக்குரைஞர் கே.எம்.பூபதி. இணையத்தில் பண மோசடி தொடர்பாக, அவரிடம் பேசியபோது:

'வங்கிகளின் சர்வரை ஹாக் செய்து, வங்கியின் பெயரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் ஓ.டி.பி. பெற்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் மோசடி செய்யப்பட்டால் அதைத் திரும்பப் பெற சட்டத்தில் வழிவகை உண்டு. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க வேண்டியது வங்கி நிர்வாகத்தின் கடமை. ஆகவே, வங்கியின் சர்வரை ஹாக் செய்து, வாடிக்கையாளர்களின் பண மோசடிக்கு வங்கி நிர்வாகமே பொறுப்பு.

கேரள உயர்நீதிமன்றம் 2023-இல் அளித்தத் தீர்ப்பின்படி, வாடிக்கையாளர்கள் வழக்குரைஞர்கள் வாயிலாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் வட்டியுடன் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

ஜிபே, போன்பே, யூபிஐ போன்ற பணப்பரிவர்த்தனைகளில் மோசடி செய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள்தான் பொறுப்பு. அவர்கள் தன்னிச்சையாகவே விருப்பத்தின்பேரில் பணத்தை அனுப்புகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில் சைபர் கிரைம் காவல் துறையினரையே நாட வேண்டும். அவர்கள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இணைய மோசடி செய்வோர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் அளிக்கும் பரிந்துரையின்படி வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதில் மோசடியாளர்கள் எங்காவது பொருள்கள் வாங்கினாலோ, அவர் வியாபார நிமித்தமாக பணம் அனுப்பும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் வியாபாரமும், தொழில் துறையும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே சைபர் கிரைம் போலீஸாரும் உரிய விசாரணை நடத்தியே வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்.

ஆதார் அட்டைகளை ஜெராக்ஸ் எடுக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். இதன் நகலை யாரிடமும் தரக்கூடாது. ஆதார் நகலைச் சேகரிக்கும் மர்ம நபர்கள் அவர்களுடைய பெயரில் ஜி.எஸ்.டி. கணக்கைத் தொடங்கி, வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துகின்றனர். உரியவருக்குத் தெரியாமலேயே அவருடைய பெயரில் வணிகமோ, தொழிலோ நடைபெறுகின்றன. லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை வரி செலுத்துமாறு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் கிடைக்கிறது.

ஜி.எஸ்.டி. சான்றிதழ் கோரி விண்ணப்பங்கள் வரும்போது, உரிய விசாரணை நடத்தி சான்றிதழை அரசு வழங்குவதே இதற்குத் தீர்வாகும்.

பரிசு, பொருள் எனப் பல்வேறு வகைகளில் நடைபெறும் இணைய மோசடிகளைக் கண்டறிந்து விசாரிக்க வட மாநிலங்களில் செயல்படும் வகையில் தனிக் காவல் பிரிவை நிரந்தரமாக அரசு அமைப்பதே தீர்வு. 'ஏமாற்றாதே.... ஏமாறாதே....' என்ற மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பாடலை மனதில் கொள்வதே இணைய மோசடிக்கான நிரந்தரமான தீர்வாகும்'' என்கிறார் கே.எம்.பூபதி.

-கே.நடராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com