மலையேற்றத்தில் மகத்தான சாதனை!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலைச் சேர்ந்த 36 வயதான மலையேறுபவரான பரத் தம்மினேனி, உலகின் ஆறாவது உயர்ந்த சிகரமான 'மவுண்ட் சோ ஓயு'வை அக்டோபர் 14- ல் வெற்றிகரமாக ஏறியுள்ளார்.
மலையேற்றத்தில் மகத்தான சாதனை!
Published on
Updated on
2 min read

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலைச் சேர்ந்த 36 வயதான மலையேறுபவரான பரத் தம்மினேனி, உலகின் ஆறாவது உயர்ந்த சிகரமான 'மவுண்ட் சோ ஓயு'வை (தரைமட்டத்திலிருந்து 8,188 மீ உயரம்) அக்டோபர் 14- ல் வெற்றிகரமாக ஏறியுள்ளார். இந்தச் சிகரம் தொட்டதினால் 'உலகின் உயரமான 14 சிகரங்களில் 9 சிகரங்களையும் ஏறிய முதல் இந்தியர்' என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பரத் தம்மினேனி சொல்வதாவது:

'மே 2017-இல் எவரெஸ்ட் சிகரத்தையும், செப்டம்பர் 2018-இல் மனாஸ்லு சிகரத்தையும், மே 2019-இல் லோட்சே சிகரத்தையும், மார்ச் 2022 -இல் அன்னபூர்ணா சிகரத்தையும், ஏப்ரல் 2022-இல் கஞ்சன்ஜங்கா சிகரத்தையும், மே 2023-இல் மகாலு சிகரத்தையும், அக்டோபர் 2024 -இல் ஷிஷாபங்மா சிகரத்தையும், ஏப்ரல் 2025-இல் தெளலகிரி சிகரத்தையும் தொட்டேன்.

இந்தச் சிகரங்கள் அனைத்தும் 8,000 மீட்டருக்கும் மேல் உயரமான சிகரங்கள். மீதமுள்ள ஐந்து சிகரங்களான 'மவுண்ட் கே 2', 'நங்கா பர்பத்', 'காஷெர்ப்ரம்ன் 1', 'காஷெர்ப்ரம்ன் 2', பிராட் சிகரம் பாகிஸ்தானில் இருப்பதால், தற்போது இந்தியாவைச் சேர்ந்த மலையேறுபவர்கள் இந்த மலைகளில் ஏற முடியாது.

செப்டம்பர் 30 அன்று சீனாவில் உள்ள 'சோ ஓயு' அடிப்படை முகாமை அடைந்தேன். மோசமான வானிலை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மலை ஏறுவதற்கான ஆரம்ப முயற்சிகளைக் கைவிட வேண்டியிருந்தது. அதனால் அடிப்படை முகாமிலேயே தங்கி இருக்க வேண்டியிருந்தது.

நானும் மலை ஏறும் மற்றவரும் அக்டோபர் 12 வரை அடிப்படை முகாமில் தங்கியிருந்தோம் . மலையேறத் தகுந்த சூழல் ஏற்பட்டதும் மலை ஏறத் தொடங்கினோம். அக்டோபர் 14-இல் சிகரத்தில் கால் பதித்தோம். பிறகு பத்திரமாக இறங்கி அடி முகாமை அடைந்தோம். மலையேற உதவும் ஷெர்பா என்னும் வழிகாட்டி இல்லாமல் மலை உச்சிக்குச் சென்று வந்தோம்.

அதிக உயரமான சிகரங்களில் கால் பதிக்கும் மலை ஏறுபவர்களில் முக்கியமானவராக நான் அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். கடந்த பத்தாண்டுகளில், நான் ஆறு கண்டங்களில் உள்ள மலை ஏறும் பயணக் குழுக்களை வழிநடத்தியுள்ளேன். புதிய தலைமுறை மலை ஏறுபவர்களை ஊக்கப்படுத்திவருகிறேன்.

எனது தலைமையின் கீழ், இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த சோன்சின் அங்மோ, உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்த 'முதல் பார்வையற்ற பெண்மணி' என்ற பெருமைக்கு உரியவர் ஆனார். 16 வயதான விஸ்வநாத் கார்த்திகே, ஏழு சிகரங்களில் கால் பதிக்கும் சவாலை வெற்றிகரமாக முடித்த இளைய இந்தியர் ஆனார். இவரது மலை ஏற்றங்கள் எனது கண்காணிப்பில் நடந்தவை. எனது சாதனைகள் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல... இந்திய மலை ஏறும் சாகச திறனுக்கான அங்கீகாரமும் கூட!

மலை ஏறும்போது மலையை மதிக்க வேண்டும். மலை ஏற்றத்திற்கு விடாமுயற்சி, பொறுமை தேவை. அன்று 'சோ ஓயு'வின் உச்சியில் நின்ற நான், எனக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி பூரித்தேன். மலையில் நானும் எனது குழுவினரும் பாதுகாப்பாக ஏறி இறங்க மலை மனது வைத்ததே என்று மலைக்கு மனதார நன்றி சொன்னேன். 8 ஆண்டுகளாக மலைச் சிகரங்களில் கால் பதிக்கும் பயணத்தை ஒரு யாகமாக நடத்திவருகிறேன். எனது மலை ஏற்றங்கள் இளைய தலைமுறையை மலை சிகரங்களைத் தொட்டு சாதனை புரிய ஊக்குவிக்கும் என நம்புகிறேன்' என்கிறார் பரத் தம்மினேனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com