

உடல் வலி நீங்க பல ஸ்பா மையங்களுக்குச் சென்று மசாஜ் செய்து கொண்டேன். ஆனாலும், எனது தசை, எலும்பு, நரம்பு வலி எதுவுமே குறையவில்லை. பணம்தான் விரையம் ஆயிற்று. இதற்கு என்ன காரணம்?
-வடமலை, சென்னை.
மசாஜ் சென்டரில் நுழைந்தவுடன் ரிசப்ஷனிஸ்ட் உங்களை அன்புடன் வரவேற்று, ஓர் அட்டையை நீட்டி, விலைப்பட்டியலைக் காண்பிப்பார். அவருடைய பேச்சில் மயங்கி, மசாஜ் செய்து கொள்வதற்குத் தயாராகி விடுவோம்.
இப்போது ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு காட்சியை மாற்றுவோம். உங்களை அன்போடு வரவேற்றபின், ரிசப்ஷனிஸ்ட் உங்களுடைய பிரச்னைகளைக் கேட்டறிந்த பின், மருத்துவரைச் சந்திக்குமாறு ஆலோசனைக் கூறுவார். மருத்துவரும் உங்கள் உடல் தன்மையை நன்கு ஆராய்ந்த பிறகே, மசாஜ் செய்யலாமா, வேண்டாமா என்று தீர்மானம் செய்வார்.
மசாஜ் சென்டரில் அவர்களுக்குத் தேவை வருமானமே. ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் உங்கள் உடல் நலம் கருதி பல விஷயங்களைக் கேட்டறிந்த பிறகே, மருத்துவம் தீர்மானிக்கப்படுகிறது.
அன்றாட வாழ்வியல் பரிந்துரையில் ஆயில் மசாஜை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆனால், 'அத ஜாத அன்ன பான இச்ச' என்ற பதத்தை வாக்படர் பயன்படுத்துகிறார். அதற்கு, 'பசி, தண்ணீர் தாகம் ஏற்பட்ட நிலையில்' என அர்த்தம் கூறலாம்.
இந்த நிலையில், பகல் வேளையில் மட்டுமே 'ஆயில் மசாஜ்' செய்யப்பட வேண்டும் என்ற ஆயுர்வேத ஆலோசனையை நாம் ஏற்கத்தான் வேண்டும். மசாஜ் சென்டரில் கேட்கப்படாத இந்தக் கேள்வியை ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் நிச்சயம் கேட்டறிவார்கள்.
தோலில் 'ப்ராஜகம்' எனும் பித்தம், தைலத்தில் அடங்கியுள்ள மூலிகைகளின் வீரியத்தை தன்னுள் வாங்கிக் கொண்டவுடன், வீரியமானது அதில் உள்ள குணங்களைத் தோலிலும், தோலின் அடிப்பகுதிகளிலும் சீராகப் பரப்புகிறது.
இதற்கு ப்ராஜக பித்தத்தின் சூடானது, வயிற்றில் உள்ள 'பாசக பித்தம்' எனும் உணவைச் செரிக்க வைக்கும் பித்தத்தின் மூலமாகத் தான் பெற முடியும். உணவு வயிற்றில் இருக்கும் போது, செரிமானத்திற்காக சூட்டைச் செலவிடும் 'பாசக பித்தம்', தோலில் உள்ள ப்ராஜக பித்தத்திற்கு அனுகூலமாகச் செயல்பட முடியாது. அதுபோன்ற நிலையில், தோலில் தேய்க்கப்பட்ட தைலமானது உள்வாங்கப்
படாமல் வீணாகிறது. அதனால் ஸ்பா சென்டரில் அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மற்றும் தேய்ப்பினால் தற்காலிக சுகத்தை மட்டுமே பெறுகிறோம். எதைக் குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்துச் செல்கிறோமோ, அதற்கான தீர்வைப் பெற முடியாமல் அங்கு ஏற்பட்ட அழுத்த சுகத்தை நினைத்து மறுபடியும் அவர்களை நாடுகிறோம்.
தசை வலி, மூட்டு வலி, நரம்பு வலி, முதுகுத் தண்டுவட வலி ஆகியவற்றில் ஆயுர்வேதம் மூலிகைப் பொடிகளையும், மூலிகைப் பற்றுகளையும் தான் ஆரம்ப சிகிச்சையாகப் பரிந்துரைக்கிறது.
பொடி ஒத்தடம், பற்றிடுதல் போன்றவை சூடாக உடலெங்கும் அல்லது தேவையான பகுதிகளில் மட்டுமே செய்யப்படும்போது, அங்கு தங்கியுள்ள நீர்க் கட்டுதல் போன்றவை தளர்வடைந்து மெதுவாக வெளியேறுகின்றன. முழுவதுமாக அவை வெளியேறிய பிறகே, தைலத் தேய்ப்பு முறை, மூலிகை இலை ஒத்தடம், நீராவிக் குளியல் போன்ற யோசனைகளை முன் வைக்க வேண்டும்.
தைலம் தேய்த்தல், நீராவிக் குளியல் போன்றவை தசைகளிலும், மூட்டுகளிலும், எலும்புகளிலும் அடங்கிக் கிடந்த அழுக்குகளையும், வலி ஏற்படுத்திய குணங்களையும் குடலுக்கு நெகிழ வைத்துக்கொண்டு வந்தவுடன், அருகிலுள்ள பாதை வழியாக வெளியேற்ற வேண்டிய அவசியமும் இருக்கிறது.
வயிற்றுக்கு வந்து சேர்ந்தால் 'வாந்தி', சிறுகுடலுக்கு வந்திருந்தால் 'பேதி', பெருங்குடலுக்கு வந்தால் 'வஸ்தி' எனும் எனிமா, தலையில் வந்து சேர்ந்தால் மூக்கினுள் மருந்துவிட்டு சுத்தம் செய்யும் முறையான 'நஸ்யம்', தோலுக்கு வந்து சேர்ந்தால் 'சிராவ்யதம்' எனும் ரத்தக் குழாயைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளியேற்றல் என்னும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை, ஸ்பா சென்டரில் செய்வார்களா? அதனால் நீங்கள் மலைக்கும் - மடுவுக்கும் முடிச்சுப் போடாதீர்கள்!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.