

சின்ன அண்ணாமலை
1920 ஜூன் 18-இல் உய்யக்கொண்டான் சிறுவயலில் நாச்சியப்ப செட்டியாருக்கும் மீனாட்சி ஆச்சிக்கும் மகனாகப் பிறந்தவர் நாகப்பன். இவர் சுவீகார மகனாகத் தேவகோட்டைகோவிலூரார் வீட்டிற்கு வந்தார். அப்போது இவருக்கு வைத்த பெயர் அண்ணாமலை.
செட்டிநாட்டுக்கு மகாத்மா காந்தி வந்த போது, அவர் அனுமதியில்லாமல் அவரைக் கட்டி அணைத்தார். காந்தி இவரின் அன்பை ரசித்து ஓர் ஆப்பிளைக் கொடுத்தார்.
1942-இல் நடந்த போராட்டத்தில் திருவாடானை சிறையில் அடைக்கப்பட்ட இவர் அதை உடைத்துக் கொண்டு தப்பி வந்து மீண்டும் தண்டனை பெற்றார்.
சுதந்திர தாகத்தில் மனைவியின் நகைகளை எல்லாம் விற்ற போது இவருக்கு ராஜாஜி அறிவுரை கூறினார். அப்போது ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இவருக்குச் சின்ன அண்ணாமலை என்று பெயர் சூட்டினார்.
தி. நகரில் 'தமிழ்ப் பண்ணை' என்று புத்தக வெளியீட்டு நிலையத்தை உருவாக்கினார். அதை கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றித் தொடங்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் எழுதிய 'மலைக்கள்ளன்' நாவலை வெளியீட்டு, ஆறு மொழிகளில் அது திரைப்படமாக வெளிவரக் காரணமாக இருந்தார்.
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளைக்கு பண முடிப்புக் கொடுத்ததைப் பார்த்த அண்ணா, பாரதிதாசனுக்கும் இதேபோன்று கொடுக்கச் செய்தார். திரு.வி.க.வுக்கு மணி விழா நடத்தினார். கவிஞர் கண்ணதாசனுக்கு முதல் விழா எடுத்தார்.
பனகல் பார்க் பிளாட்பாரத்தில் காய்கறி, பழங்கள் விற்ற வியாபாரிகள் போலீஸாரால் விரட்டப்படுவதை அறிந்து காமராஜரைச் சந்தித்து அவர்களுக்கு நிரந்தரமாக பனகல் பார்க் மார்க்கெட்டை பத்திரிகை ஆசிரியர் சாவியுடன் சேர்ந்து உருவாக்கித் தந்தார்.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலிருந்த அலுவலகத்தில் இவர் 'சிவாஜி ரசிகன்' என்ற பத்திரிகையை நடத்தினார். சிவாஜி
தேசபக்தி பாடல்களிலும், பக்திப் பாடல்களிலும் நடித்துப் பேரும் புகழும் பெறத் தூண்டுகோலாக இருந்தார்.
இவர் 'தங்கமலை ரகசியம்' படத்தின் கதை, வசனகர்த்தாவாக இருந்து 'ஆயிரம் ரூபாய்', 'கடவுளின் குழந்தை' போன்ற படங்களைத் தயாரித்தார்.
சரித்திரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை 'திருடாதே' என்ற சமூக படத்தில் நடிக்க வைத்து சரோஜாதேவியின் வரவுக்கு முக்கிய காரணமாக இருந்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக எம்.ஜி.ஆர். யோசனைப்படி 'திருடாதே' படத்தை பிரபலத் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.சிடம் ஒப்படைத்தார்.
சிரிக்கச் சிரிக்கப் பேசும் சின்ன அண்ணாமலை என்னை வரச் சொல்லி 'சிவாஜி ரசிகன்' இதழுக்காகப் பேட்டி எடுத்தார். சிவாஜியைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். சிவாஜிதான் எனக்கு முதன் முதலில் 'அச்சாணி' நாடகத்தின் நூறாவது நாளில் விருது கொடுத்துக் கௌரவித்தார். நான் பள்ளியில் படித்த காலம் முதல் அவரது தீவிர ரசிகன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அத்தனைக்கும் அவர் மட்டுமே நடிப்பின் அவதாரம். நிரந்தர அடையாளம் என்று கூறினேன்.
உங்கள் 'சொந்தம்' படத்தைப் பார்த்தேன். சிறுவயதில் அருமையாக வசனம் எழுதி இருக்கிறீர்கள். சிவாஜி நீங்கள் எழுதிய படத்தைப் பார்த்துப் பாராட்டினாரா என்று சின்ன அண்ணாமலை கேட்டார்.
என் 'தீர்க்க சுமங்கலி' படத்தைப் பார்த்து விட்டு என்னையும் ஏ.சி. திருலோகசந்தரையும் கூப்பிட்டு, இப்படி ஒரு கதை இருக்கிறது என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று உரிமையுடன் கோபப்பட்டார் என்று கூறினேன்.
என் பேட்டியை எடுத்து முடித்த பின் அவர் என்னிடம் கதை, வசனத்தோடு நின்று போய்விடாதீர்கள். பீம்சிங்கிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்து சீக்கிரம் இயக்குநராக முயற்சி செய்யுங்கள். கதை, வசனத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணனைப் போலவும், டைரக்ஷனில் ஸ்ரீதர் போலவும் வந்து விரைவில் சிவாஜிக்குக் கதை, வசனம் எழுதி புகழடையுங்கள் என்று வாழ்த்தியபடி - நான் இயக்குநராகித் தயாரிப்பாளரான போது அவர் மணி விழாவில் 1980 ஜூன் 18-இல் காலமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.