

அருள்செல்வன்
மனிதர்களுக்கு நோயைப் போலவே முதுமையும் அச்சமூட்டும் ஒன்றாக இருக்கிறது. 'திரையுலக மார்க்கண்டேயன்' என்று அழைக்கப்படும் சிவகுமார் 83-ஆவது வயதிலும் உடலாலும் மனதாலும் இளமையாக இருக்கிறார். முதுமையை எதிர்கொள்வது, வெல்வது குறித்து அவர் சொல்கிறார்:
'மனித வாழ்க்கையில் நான்கு நிலைகள் உள்ளன. சிறுவர் பருவம், வளர் இளம் பருவம், பிரம்மச்சாரி அல்லது குடும்பஸ்தன். நான்காவது நிலையைக் கடந்தவர்கள் முதியோர் என்ற வரிசையில் சேருகின்றனர். முதுமையில் தவிர்க்க முடியாதது நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு ஆகியவை.
நவீன அறிவியலும் மருத்துவமும் அசுர வளர்ச்சி அடைந்ததால் இக்காலகட்டத்தில் மனிதர்களின் ஆயுள்காலம் கூடியுள்ளது. இப்போது ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 67 என்றும், பெண்களுக்கு 69 என்றும் உயர்ந்துள்ளது. உடல் நலனும் மன அமைதியும் பெரும்பாலான முதியவர்களுக்குக் கிடைப்பதில்லை. வயோதிகத்தைத் தள்ளிப்போடுவது குறித்து நவீன விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
சித்த மருத்துவம் விஞ்ஞானத்திற்கு முந்தையது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 'காயகல்பம்' என்ற மருத்துவச் சிகிச்சை முறையில் உடலை அழியாமல் காக்கும் மருத்துவ முறைகளைச் சித்தர்கள் கையாண்டு வந்திருக்கிறார்கள்.
நெல்லிக்கனி, வயது மூப்பினைத் தடுக்கக் கூடியது. முதிய பருவத்தில் சருமப் பிரச்னைகள், வயிறு குடல் சார்ந்த பல்வேறு நோய் நிலைகள், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தேய்மானத்தால் உண்டாகும் எலும்பு மூட்டு சார்ந்த நோய்கள் ஏற்படலாம்.
நரம்பு மண்டல தேய்மானத்தால் ஏற்படும் நோய்கள், தூக்கமின்மை, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை சார்ந்த தொந்தரவுகள் அதிகமாகிப் புற்றுநோயும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் என்ற நோயும் ஏற்படலாம். பெண்களின் கருப்பை சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு, பாரம்பரிய உணவு முறைகளுடன் சித்த மருத்துவம் காட்டும் தீர்வு முறைகளையும் இவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் நோய்களைத் தடுத்து முதுமையை வெல்வதற்கு வழிகளையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
அண்மையில் 'நலமொடு வாழ' என்று ஒரு புத்தகம் படித்தேன். அந்தப் புத்தகத்தில் மருத்துவர் சோ.தில்லைவாணன் இது பற்றி எல்லாம் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.
முதுமையில் நலம் பயக்கும் உணவுகள், மூட்டு வலியும் தீர்வுகளும், முதுகுத்தண்டு வலிக்கான தீர்வுகள், மாரடைப்பைத் தடுக்கும் வழிமுறைகள், சீரண மண்டல தொந்தரவுகளும் தீர்வுகளும், மலச்சிக்கல்களும் தீர்வுகளும், கல்லீரல் நோய்களும் தீர்வுகளும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வழிகள், புற்றுநோய், சிறுநீரக நோய் தீர்வுகள், முதுமையில் பக்கவாதம் என்று உடம்பில் தோன்றும் அத்தனை வியாதிகளில் இருந்தும் மீள வழி சொல்கிறது இந்நூல்.
சரி, புத்தகம் ஒன்றே தீர்வாகிவிட முடியுமா? ஏனென்றால், ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் நூல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றை வாங்கிப் படித்து அதில் கூறியுள்ளவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.
வயோதிகத்துக்கு மட்டுமல்ல வாழும் மனிதர்கள் அனைவருமே சில நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தால் உடல் நலத்துக்கு உதவும் என்ற வகையில் சிலவற்றைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அறிவுரை போல கசப்பான விஷயம் எதுவும் கிடையாது. என் பிள்ளைகளுக்கு நான் அறிவுரை ஒருபோதும் சொல்வதில்லை. காபி, டீ, மது அருந்தும் பழக்கம் எனக்கு இல்லை. அதைப் பார்த்து 40 வயது தாண்டியும் என் பிள்ளைகள் அவற்றைத் தொடுவதில்லை. புகைப்பழக்கமும் அப்படித்தான்.
படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது மட்டும் சிகரெட் பிடிப்பதாக நடித்தேன். நம் கண் முன்னே ஒருவர் வாழ்ந்து காட்டினால் அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே நமக்கு ஏற்படும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
எனக்கு 80 வயது தாண்டியும் பிடிவாதமாக நான் கடைப்பிடிப்பவைகளை இங்கே குறிப்பிடுவது சரி என்று நினைக்கிறேன்.
அத்தியாவசியமான மூன்று:
மனிதன் உயிர் வாழ அத்தியாவசியமானவை மூன்று. 1. காற்று, 2. தண்ணீர், 3. உணவு.
மகாத்மா காந்தி 21 நாள்கள் எந்த உணவும் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்திருக்கிறார். தண்ணீர் அருந்தாமல் இரண்டு நாள்கள் தாக்குப் பிடிக்கலாம். சுவாசிக்காமல் இரண்டு நிமிடம் கூட இருக்க முடியாது.
மனிதன் தாயின் கருவில் உருவாகி, அந்த சிசுவின் இருதயம் வேலை செய்ய ஆரம்பிக்கும் போதே ரத்த ஓட்டம் உடம்பெங்கும் பாய்கிறது. அப்போதே நமது உடம்பு ஒரு தொழிற்சாலை ஆகிவிடுகிறது. தொழிற்சாலை என்றாலே உற்பத்தி போலவே கழிவும் உண்டாகி வெளியாகும். நம் உடம்பில் பாயும் ரத்தத்தில் அசுத்தமான கார்பன் டை ஆக்சைடு - கரியமிலவாயு உற்பத்தி ஆகிறது. கரியமில வாயுவை வெளியேற்றி ஆக்சிஜன் என்கிற பிராணவாயு உடலுக்குள் செலுத்த நாம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு நடைப்பயிற்சி செய்தால் பிராணவாயு அதிகம் கிடைக்கும். வாரத்தில் ஐந்து நாட்களாவது குறைந்தது 40 நிமிடம் நடைப் பயிற்சி செய்ய வேண்டும். கடற்கரை எல்லா ஊரிலும் இருக்காது. திறந்தவெளியில் பூங்காக்களில் நடைப் பயிற்சி செய்யலாம்.
காலையில் நீர் அருந்துவது:
ரத்தத்தில் உள்ள அழுக்கை சிறுநீர் வடிவமாக்கி உப்பு வெளியேற நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடம்பு என்கிற தொழிற்சாலையில் கழிவுகளை வெளியேற்ற நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியம். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் உடம்பு பளபளப்பாக இருக்கும். ரத்தம் சுத்தமாகும். ரத்தம் சுத்தமாக உடம்பில் ஓடும் போது வியாதிகள் உள்ளே வரத் தயங்கும். தேவையான தண்ணீர் குடிக்காததால் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. நானே அந்தப் பிரச்னைக்கு ஆளாகி சிரமப்பட்டு இருக்கிறேன். எனவேதான் இதை வலியுறுத்திச் சொல்கிறேன்.
நாற்பதுக்கு மேல் சைவம்:
உணவுகளில் சைவம், அசைவம் இரண்டு வகை உள்ளது. 40 வயது வரை அளவான அசைவம் சேர்ப்பது தவறில்லை. புரதச்சத்து அசைவ உணவுகளில் அதிகம் உள்ளது.
40 வயதுக்கு மேல் மனிதனின் ஜீரண சக்தி குறைந்துவிடும். எனவே உடலின் நிலமைக்கு ஏற்றபடி அப்போது ஆடு, மாடு, கோழி போன்ற அசைவத்தைத் தவிர்ப்பது நல்லது.
சைவ உணவில் காய்கறிகள், கீரை வகைகள், சாலட், பாதாம், பிஸ்தா போன்றவை சாப்பிடலாம். சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ள வேண்டும். தோசைக்கல் சூடாக இருக்கும் போது மாவு ஊற்றினால் தான் அது வேகும். ஆறிப்போன தோசைக்கல் மீது மாவு ஊற்றுவது போன்றது பசி நேரம் கடந்து உண்பது . எவ்வளவு உண்கிறோம் என்பதை விட எந்த நேரத்தில் உண்கிறோம் என்பது முக்கியம். சரியான நேரத்தில் உண்பதை அலட்சியப்படுத்தக் கூடாது.
நேரத்துக்கு உண்ணவேண்டும்:
காலையில் எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் காலை உணவு, பகல் உணவு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி, இரவு உணவு ஏழு மணி முதல் எட்டு மணி என்று திட்டமிட்டால் அந்த நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். இந்த கால அட்டவணையை மாற்றினால் உடலின் சமநிலை மாறிவிடும்.
ஒரு நாள் காலை 7 மணிக்கு சிற்றுண்டி, அடுத்த நாள் 11 மணிக்குச் சாப்பிடுவது, பகல் உணவை மாலை 4 மணிக்குச் சாப்பிடுவது, இரவு உணவை நடுநிசியில் 12 மணிக்குச் சாப்பிடுவது எல்லாம் நாமே நோயை சிவப்புக் கம்பளம் விரித்து வரவழைத்துக் கொள்கிறோம் என்று அர்த்தம். காலையில் சாஃப்ட்வேர் பணிக்குச் செல்லும் இளைஞர்கள் சிலர் தண்ணீர் கூட அருந்துவதில்லை. அது தவறு. பழைய சாதத்தில் வடிகட்டிய தண்ணீர் 2 டம்ளர் குடித்து விட்டுப் போகலாம்.
காலையில் பழையது - மதியத்தில் ஒரு கரண்டி சாதம்:
என்னைப் பொருத்தவரை எனது உணவுப் பழக்கம் இப்படி இருக்கும். நான் அதிகாலை ஒரு கைப்பிடி பழைய சாதம், நீர்மோர் இரண்டு டம்ளர் மிக்ஸியில் அடித்தது, சின்ன வெங்காயம் நான்கு துண்டுகள் சாப்பிடுகிறேன். அதோடு பப்பாளி, ஆப்பிள், பேரிக்காய் ஐந்தாறு துண்டுகள். இதுதான் என் காலை உணவு.
பகல் உணவு என்றால் ஒரு கரண்டி சாதம், காய்கறிகள் கூட்டு, பொரியல் , மோர் ஒரு டம்ளர் இவ்வளவுதான்.
மாலை அரிசிப் பொரி அல்லது சுண்டல் கொஞ்சம். இரவு ஏழரைக்கு ஒரு இட்லி, ஒரு தோசை அவ்வளவுதான் என் உணவு.
இரவுத் தூக்கம்:
தூக்கம் என்பது சுவாசத்துக்கு இணையான ஒன்று. உலகத்தில் உள்ள சகலவிதமான ஜீவராசிகளும் இரவில் தூங்குகின்றன. ஆந்தையைத் தவிர புல், பூண்டு தாவர இனங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என எல்லாமே இரவில் தூங்குகின்றன. மனித இனத்தில் மட்டும்தான் விரைவில் வேலை பார்க்கும் பழக்கம் உள்ளது. பிபிஓ என்று வேலை பார்த்து எல்லா நோய்களையும் வாங்கிக் கொள்கிறான்.
இரவு பத்து மணி முதல் காலை நாலு மணி வரை தூங்கும் உறக்கமே உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும். சளி, காய்ச்சல் இருந்தால் மாத்திரை சாப்பிடாமல் இந்த நேரம் உறங்கினாலே குணமாகிவிடும்.
பி.பி.ஓ. என்று இரவு விடியும் வரை சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து விட்டு, வீடு வந்து அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தூங்கினாலும் அது இரவு தூக்கத்துக்கு ஈடாகாது. பத்து ஆண்டுகள் இரவு முழுதும் கண்விழித்துப் பணி செய்த இளைஞனுக்கு 30 வயதிலேயே சர்க்கரை, ரத்த அழுத்த தொல்லைகள் வர அவன் அந்த வேலையை விட்டு வேறு வேலையில் சேர்ந்துள்ளான்.
சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் நமக்கு வேண்டும். இந்தப் பழக்கங்களை நீங்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாரையும் நான் வற்புறுத்த மாட்டேன். இதுதான் வாழும் வாழ்க்கை முறை என்பதைத் தெரிவித்துள்ளேன். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். உங்களுக்குப் பிடித்த நற்பழக்கங்களைக் கடைப்பிடித்து நூறு ஆண்டுகள் எல்லோரும் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.