

என்னை வெறுத்திருப்பீர்கள் - மனம் திறந்த அஜித்!
நடிகர் அஜித்குமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். தன் கடந்த கால வாழ்க்கை முறை பற்றியும் தெரிவித்துள்ளார். அதில் அவர், 'பொது வாழ்க்கைக்கு வரும்போது, உங்களுக்கு நிறைய கமிட்மென்ட்களும் கடமைகளும் இருக்கும்.
அதை நிறைவேற்றுவதற்காக உங்களுக்கு மற்றவர்களின் தேவை இருக்கும். அது நேரத்தை மிச்சப்படுத்தும். உங்களுக்குத் தினசரி உதவி செய்ய ஒரு குழு இருப்பதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால், நான் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், சில சமயம் அது உங்களைப் பாழாக்கிவிடும்.
ஆரம்பத்தில் உங்கள் கைப்பையைத் தூக்கவும், மற்றவற்றுக்கும் உதவி செய்வார்கள். காலப்போக்கில் உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரிடத்திலும் அதை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள். நான் அப்படி இருந்திருக்கிறேன். இப்போது அதற்காக வெட்கப்படுகிறேன். அதனால்தான் இப்போது எல்லாவற்றிலுமிருந்து விலகி துபையிலிருக்கிறேன். அதற்கு முக்கியமான காரணம், மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான். இங்கு எல்லாவற்றையும் நானே செய்வதை ரசிக்கிறேன். குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள் தற்போது உதவுகின்றன.
மற்றவர்கள் உதவிக்கு இருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். ஆனால், அது உங்களைப் பாழாக்கக்கூடும். 20 வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்திருந்தால், நீங்கள் என்னை வெறுத்திருப்பீர்கள். நான் பாழாகியிருந்தேன் என்று சொல்லவில்லை; ஆனால் என்னிடம் ஒரு குழு இருந்தது. உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை கடினமாகிவிடும்.
நான் நிறைய நேரத்தை அவர்களுக்கிடையிலான தினசரி சண்டைகளைத் தீர்ப்பதிலும், அவர்களை நிர்வகிப்பதிலும் வீணடித்தேன். முடிந்தவரை சுயமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். சில சமயங்களில் உதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், பல சமயங்களில் நீங்களே சமாளித்துக்கொள்ளலாம். இப்போது நான் என் முடிவுகளால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லோரிடமிருந்தும் விலகி இருக்கிறேன்' என்று பேசியுள்ளார்.
பைசன் விடியோ பகிர்ந்து அனுபமா நெகிழ்ச்சி!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பைசன்'. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'பைசனின் 10 நாள்கள்... என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது.
சில படங்கள் வெறும் புராஜெக்ட்களாக இருப்பதில்லை. அவை ஓர் உணர்வாக, ஒரு பருவமாக, நமக்குள்ளே ஓர் அமைதியான மாற்றமாக மாறிவிடுகின்றன. பைசன் எனக்கு அப்படித்தான். என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் வகையில் என்னைப் பாதித்த ஒரு படம். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.
தற்போது, படப்பிடிப்புத் தள விடியோவை பகிர்ந்து, 'பைசன் என் திரையுலகத்துக்கு அப்பாற்பட்டது என்று நான் சொன்னதற்கான காரணம் இதுதான். மண், மக்கள், ஓர் இடத்தின் ஆன்மா வழியிலான பயணம் எனக்குள் ஏதோ ஒன்றை மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் ஒரு பயிற்சிப் பட்டறை போல உணர்ந்தேன். கற்பது, கற்றதைத் திருத்துவது, கற்றுக்கொள்ளாமல் இருப்பது, கற்றுக்கொள்வதைத் தவிர்ப்பது என உண்மையை சுவாசிக்கும் கதைகளுக்கு மத்தியில் வாழ்ந்த நாள்கள் அவை.
சினிமாவை வாழ்க்கையாக உணரும் உங்கள் உலகின் ஒரு சிறிய பகுதியாக என்னை அனுமதித்ததற்கு நன்றி, மாரி சார்!' என நெகிழ்வாகப் பதிவிட்டிருக்கிறார்.
96 எப்போதுமே கிளாசிக் - கௌரி கிஷன்!
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கெளரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'அதர்ஸ்'.
மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட செய்தியாளர்கள், 'எத்தனை படங்கள் நடித்தாலும் 96 மாதிரியான படம் அடுத்து அமையவில்லையே?' என கௌரி கிஷனிடம் கேட்டபோது, '96 ஓர் இமாலய படம். எனக்குத் தெரிந்தவரை அது எப்போதும் பேசப்படும் படமாகத்தான் இருக்கும்.
'அன்பே சிவம்' மாதிரி ரொமான்டிக் பாணியில் '96' கிளாசிக் படம். அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த அன்பும், ஆதரவும் இப்போது வரை தொடர்கிறது. அதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். அதே நேரம் ஒரு நடிகையாக பல கதைகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு நல்ல நடிகையாக வெற்றிபெற வேண்டும். அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
'அதர்ஸ்' படத்தில் கூட டாக்டராக நடித்திருக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதற்காக மெனக்கெட்டிருக்கிறேன். '96' மாதிரியான இன்னொரு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன். ஆசைப்படலாம் அதற்காகப் பேராசைப் படக்கூடாது.
அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அந்த வெற்றியைத் தக்கவைக்க முயற்சிக்கிறேன். நான் இப்போதுவரை புதுமுக நடிகையாகத்தான் உணர்கிறேன். நான் இந்தத் துறைக்கு வந்தபோது, சில நடிகர்கள் எனக்கு அளித்த ஆதரவுதான் என்னால் சில படங்களில் நடிக்க முடிந்தது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.