முனைவர் ஜி.குமார்
சீனப் பெருஞ்சுவரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. உலகின் மிக நீளமான சுவர். இந்தச் சுவர் உலகில் மனிதர்களால் எழுப்பப்பட்ட மிகப் பெரிய கட்டுமானமும் ஆகும். இந்தியாவிலும் நீளமான சுவர் உண்டு.
இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள கும்பல்கர் கோட்டையை ஒட்டி அமைந்துள்ள 36 கி.மீ. நீளமுடைய மதிற்சுவர் உலகின் இரண்டாவது நீளமான சுவராகக் கருதப்படுகிறது. இது உதய்பூர் நகரத்திலிருந்து சுமார் 84 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேவார், பழங்காலத்தில் இன்றைய ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருந்த முக்கிய பேரரசு ! சரித்திரப் புகழ் பெற்ற ராஜபுதன வீரர் மஹாராணா பிரதாப் சிங் கும்பல்கர் கோட்டையில் 1540-ஆம் ஆண்டு பிறந்தவர்.
இந்தக் கோட்டையையும் அதனை ஒட்டி அமைந்துள்ள பெருஞ்சுவரையும் 1458-ஆம் வருடம் மேவார் அரசன் ராணா கும்பா நிர்மாணித்தார். 'கர்' என்ற பதம் கோட்டையையும் குறிக்கும். ராணா கும்பாவின் பெயருடன் சேர்ந்து இந்தக் கோட்டையையும் அதனுடன் இணைந்துள்ள நீண்ட சுவரையும் கும்பல்கர் என அழைக்கின்றனர்.
ஆரவல்லி மலைத்தொடரின் பதின்மூன்று சிறு சிகரங்களை இணைக்கும் கும்பல்கர் மேவார் அரசின் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டது. சித்தோர்கர், மேவார் அரசரின் தலைநகராக இருந்தாலும், அந்நியர்களின் படையெடுப்பு நிகழ்ந்த காலங்களில் அரசர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை கும்பல்கர் அளித்து வந்தது.
அரசர் ராணா கும்பாவில் இருந்த மந்தானா என்ற கட்டடக் கலைஞர் இதன் வடிவினை அமைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த மந்தானா என்பவரே பிற்காலத்தில் 'ராஜவல்லப வாஸ்து சாஸ்திரம்' என்ற நூலை அளித்தவர்.
மலையின் உயரமும் நீண்ட உயரமான சுவரும் மேவார் அரசுக்கு தில்லி சுல்தான்கள், முகலாயர் படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்புக் கவசத்தை இக்கோட்டை தந்தது. உயரமான இடத்தில் இருப்பதால் பகைவர்களின் நடமாட்டங்களையும் படைகளின் ஊடுருவலையும் கோட்டையிலிருந்தபடி முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலும் கற்கள், சுண்ணாம்புச் சாந்துகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் கும்பல்கர் மிகவும் அகலமானதும் கூட. ஒரே நேரத்தில் எட்டுக் குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் சவாரி செல்லமுடியும். எனவே சிப்பாய்களும் அரசரும் ஒரே நேரத்தில் கோட்டையைச் சுற்றி வரலாம். ஆங்காங்கே மதிற் சுவரில் கண்காணிப்புக் கோபுரங்களும் எழுப்பப்பட்டுள்ளன. பாதல் மஹால் என்ற கண்காணிப்புக் கோபுரம் இதில் முக்கியமானது. பாதல் என்ற சொல் மேகத்தைக் குறிக்கும். மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் இந்த இடம் பாதல் மஹால் என்ற பெயர் பெற்றது.
மதிற்சுவரை ஒட்டி படிக்கட்டுகளுடன் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தானியங்களைச் சேமிக்கக் கிடங்குகளும், நீர் நிரப்பி வைக்க பெருந்தொட்டிகளும் கூட உண்டு. பல மாதங்கள் முற்றுகையைத் தாங்கமுடியும். கோட்டைக்குள் நுழைய மதிற்சுவரைச் சுற்றி ஏழு வாயில்கள் இருக்கின்றன. மதிற்
சுவரிலும் கோட்டையிலும் முந்நூறுக்கும் அதிகமான கோயில்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் ஜெயின் கோயில்களும் அடக்கம். தற்போது கும்பல்கர் வனவிலங்குச் சரணாலயம் இந்த மதிற்சுவரைச் சூழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.