'அம்மா...''
வாசலில் குரல் கேட்டது. அடுக்களையில் இருந்த பூரணி எட்டிப் பார்த்தாள். உமா வந்திருக்கிறாள். அதிகாலையில் அவள் குரல் வெண்கல மணியோசைப் போல எல்லாரையும் எழுப்புவதாக இருந்தது. 'இந்த மெலிந்த தேகத்தில் இவ்வளவு அழுத்தமான சப்தம் எங்கிருந்து வருகிறதோ' என்று மனதில் நினைத்துக் கொண்ட பூரணி, அவளைக் கைகாட்டி 'உள்ளே வா'' என்று அழைத்தாள்.
இன்றைக்கு பூரணி வீட்டில் சஷ்டி பூஜை நடைபெற இருக்கிறது. அதற்காகத்தான் வந்திருக்கிறாள். இன்னும் சில வேலைகளுக்காகவும் உமாவை அழைப்பது உண்டு. குழந்தையைக் குளிப்பாட்ட, காலில் முள் குத்தி விட்டால் அதை லாகவமாக எடுப்பதற்கு உமாவைத்தான் கூப்பிட்டாக வேண்டும். வீட்டில் விசேஷத்திற்குப் பலகாரம்சுட வேண்டும் என்றாலும் அவளைத்தான் கூப்பிடுவது வழக்கம்.
உமா என்ன வேலைக்கு வந்தாலும் சம்பளம் இவ்வளவு வேண்டும் என்று ஒருநாளும் பேச மாட்டாள். கொடுப்பதை சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்டு போவாள். அவள் குடும்பம் கஷ்ட ஜீவனத்தில் இருந்தாலும், அவளது நிலையைச் சொல்லிப் புலம்புவது அவளுக்குத் தெரியாது. எப்போதும் முகத்தில் புன்னகை மட்டும் தான்.
ஒத்தாசை செய்ய வந்தாலும், நாம் கேட்டால் அவளுக்கு இருக்கும் இந்தக் கணீர்க்குரலில் தேவாரமோ, திருவாசகமோ பாடிக் கொண்டு வேலை செய்வாள். நாம் மெய்மறந்து கேட்கலாம். வேலையை அவள் பாட்டுக்குச் செய்து கொண்டு போவாள். எந்த வேலையாக இருந்தாலும் சிவபுராணம் பாடித் தொடங்குவாள்.
'என்ன உமா, முறுக்கு சுத்துறதுக்கும் சிவ
புராணத்தைத் துணைக்குக் கூப்பிடுவியா?'' என்ற மாமனாரின் கேள்விக்குச் சிரித்துக் கொண்டே, 'ஆமா ஐயா, முறுக்கு சரியா சுத்த வரணும். சுவை நிறைவா இருக்கணும், சாப்பிடுற நமக்கும் உடம்புக்கு ஒட்டணும், அதுக்கு இறைவன் கருணை வேணுமே?'' என்பாள். ஆனால், இறைவன் கருணை இன்னும் அவளுக்குக் கிடைக்கவில்லை.
பூரணிக்குப் பேரனும் பேத்தியும் என இரண்டு பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். மருமகளுக்குத் தேவாரமோ, திருவாசகமோ ஒன்றும் தெரியாது. உமா இன்றைக்கும் வழக்கம் போல சிவ
புராணம் சொல்லித் தொடங்கினாள். வீடு அமைதியானது. உமாவின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அர்த்தம் புரியவில்லை; ஆனால், கண்களில் நீர் கோர்த்து நின்றது பூரணியின் மருமகளுக்கு.
'சாப்பாட்டு வேலையை நாங்க பாத்துக்கறோம், நீங்க மோதகம் செய்து கொடுங்க!'' மருமகள் சொன்னதும், அதற்கான வேலைகளை ஆரம்பித்தாள். மாவு கிளறிக் கொண்டிருந்தவளிடம், 'உமா அக்கா, வேற ஏதாவது பாடுங்களேன்.''
சொன்னதும் கபாலீஸ்வரர் மீது பதிகம் பாடத் தொடங்கினாள். திருஞான சம்பந்தர் தந்த பதிகம். ஓதுவார்கள் தோற்றுப் போவார்கள், அத்தனை இனிமையும் பக்தியும் குழைந்து இருந்தது குரலில்.
இந்தப் பாட்டு முடிவதற்குள் பேரக் குழந்தைகள் இருவரும் அடுக்களைக்கு வந்து சேர்ந்தார்கள். 'மோதகம் செய்யப்போறீங்களா? ஹைய்யா... நானும் பண்ணுவேன், நானும் பண்ணுவேன்'' குழந்தைகள் இருவரும் மாவுப் பாத்திரத்துக்குள் கை விட்டதும் பூரணி அவர்களை விரட்டினாள். 'ஒன்னும் சொல்லாதீங்கம்மா, குழந்தைகள் தானே! சந்தோஷமாய் அவர்களும் பூஜைக்கு பிள்ளையாருக்கு மோதகம் செய்யட்டும். நான் பாத்துக்கறேன்'' சொன்னதும் பூரணி குழந்தைகளை விட்டுவிட்டு காய்கறிகள் நறுக்குவதில் கவனமானாள்.
இந்த வருஷ பூஜைக்கு ஊரிலிருந்து முதல் முறையாக சம்பந்தி வந்திருக்கிறார். சென்னையில் மதிப்புக்குரிய மனிதர், பக்திமான். இசைக்கருவிகள் விற்கும் கடை வைத்திருக்கிறார். அமைதியான மனிதர். மாடியில் படுத்திருக்கிறார். 'அவருக்குத் தொந்தரவாக குழந்தைகளின் கூச்சல் இருக்கக்கூடாதே!' என்ற எண்ணம் பூரணிக்கு.
'சத்தம் போடாமல் அமைதியா விளையாடுங்க'' என்றதோடு அவள் அமைதியானாள்.
குழந்தைகள் மாவை எடுத்து மோதகத்துக்குச் செப்பு செய்ய முயன்றார்கள். கொழுக்கட்டை பிடித்தது போல ஆயிற்று. மாவை எப்படி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு குடம் போல மெல்ல உருட்டி செப்பாக மாற்றுவது என்பதைக் குழந்தைகளை அருகில் உட்கார வைத்துக் கொண்டு சொல்லிக்கொடுத்தாள்.
'அக்கா, நீங்க பாட்டு மட்டும் தான் பாடுவீங்களா? கதை சொல்ல மாட்டிங்களா?'' பேரன் கேட்டான்.
'இப்போ பாட்டு பாடுனீங்களே, அதில பூம்பாவாய் பூம்பாவாய் அப்படின்னு திரும்பத் திரும்பச் சொன்னீங்களே... அப்படினா என்ன?'' பேத்தி கேட்டாள்.
'ரெண்டு பேருக்கும் சொல்றேன், இருங்க!''
குழந்தைகள் முகத்தில் கதை கேட்கும் ஆர்வம் அப்பியிருந்தது. பூம்பாவை ஓர் அழகிய பெண்ணாக மயிலாப்பூர் வீதிகளில் ஓடி விளையாடியது, அவள் பட்டுப் பாவாடை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்ததும், செல்வந்தரின் பெண்ணாக செல்வச் செழிப்போடு வாழ்ந்த பெண் பக்தியோடு திருஞான சம்பந்தரின் பாடல்களைப் பாடியது என்று பூம்பாவையின் கதையை கேட்பவர்கள் கண்முன் கொண்டுவந்தாள்.
பூம்பாவையின் பக்தியையும் அழகையும் கண்ட அவர் தந்தை, மகளை தேசமெல்லாம் புகழோடு விளங்கும் சிவநேசச் செல்வர் ஞானசம்பந்தருக்கே மணம் செய்து கொடுப்பது என்று தீர்மானித்துக் கொண்டது என்று நம் வீட்டில் நடப்பது போல எல்லாரும் உணர்ந்தார்கள். அந்த நேரத்தில், மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சம்பந்தி எழுந்து வந்து கூடத்தில் உட்கார்ந்தார். ஒருவரும் கவனிக்கவில்லை.
கதை தொடர்ந்து கொண்டிருந்தது. அழகான குழந்தை தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடினாள். பாம்பு வந்தது கவனிக்கவில்லை. மிதித்துவிட்டாள். அரவம் வேகம் கொண்டு தீண்டியது. அழகான கொடி போல இருந்த குழந்தை துவண்டு மண்ணில் விழுந்தாள். உயிர் பிரிந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கண்ணீர் வடித்தார்கள். தங்கள் உயிர் பிரிந்து விட்டது போல ஜடமாய் அமர்ந்திருந்தார்கள்.
அவள் அஸ்தியை யாருக்கு மணம் முடித்துக் கொடுக்க நினைத்திருந்தாரோ அவரிடமே ஒப்படைத்துவிட வேண்டும் என்று அவள் தகப்பன் உறுதி கொண்டார். வீட்டுக் கூடத்தில் பாதுகாத்தார். கதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அந்தக் காலத்திற்கே போய்விட்டிருந்தார்கள்.
உமா மட்டும் உஷாராய் தன்னுடைய வேலையில் கவனமாய் இருந்தாள். மோதகத்திற்கான செப்பு செய்வதும் பூரணத்தின் உள்ளே அடிப்பதும் என்று அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் ஞானசம்பந்தப் பெருமான் அந்த ஊருக்கு வந்தார். பக்தர்களும் அன்பர்களும் அவரை வணங்கினார்கள். பூம்பாவையின் தந்தை சிவநேசரும் வந்தார். நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். 'தனக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று முடிவு செய்த பெருமகன் தன்முன் நிற்கிறார் என்ற எண்ணம், மகள் அவரை வரவேற்க இல்லையே என்ற சோகம் எல்லாம் சொல்லிக்கொண்டு போனபோது கூடத்தில் அமர்ந்திருந்த சம்பந்தி தானே அந்த சிவநேசர் என்பது போல மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தார்.
சிவநேசர் தன் எண்ணத்தை, அதற்காக மகளின் அஸ்தியைப் பாதுகாப்பதைச் சொல்லி பெற்றுக்கொள்ள வேண்டுமென விண்ணப்பித்தார். கோயில் வாசலுக்கு எடுத்துவரச் சொல்கிறார் ஞானசம்பந்தர். அங்கே கோயில் மதில் உயர்ந்து நிற்கிறது என்று உமா கதை சொல்ல, சம்பந்தி மதிலைப் பார்ப்பது போல அண்ணாந்து பார்த்தார்.
திருஞான சம்பந்தர் தன்கையில் உள்ள தாளத்தை வைத்துத் தட்டிக் கொண்டே பாடுகிறார். இங்கே எல்லாரும் கைகளைத் தட்டிக் கொண்டு கேட்கிறார்கள்.
'மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்'
இப்படிப் பத்துப் பாடல்களையும் உமா பாடுகிறாள். திருஞானசம்பந்தர் பாடுவதாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உமா குழந்தைகள் கையில் வைத்து விளையாடிய மாவை அவர்கள் கைகளிலிருந்து வாங்கி செப்பு செய்து கொண்டே கதை சொல்கிறாள். கையிலிருந்த மாவு எடுக்கப்பட்டதை அறியாமல் குழந்தைகள் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பதிகம் பாடி முடித்ததும் சாம்பலாகப் போன பெண் அஸ்திக்கலசத்தில் இருந்து அன்று பூத்த புதுமலர் போல எழுந்தாள். கூடி நின்ற ஊர் கடவுளே என்று வாய்பிளந்து நின்றது. இங்கும் அப்படி எல்லாரும் ஸ்தம்பித்திருந்தார்கள். இறைவன் கருணையினால் மீண்ட மகளைக் கண்டு சிவநேசர் இறைவா என்று அரற்றினார். கூடத்தில் அமர்ந்திருந்த சம்பந்தியும் பெருங்குரலில் 'இறைவா...' என்று கூக்குரலிட்டார்.
உமா திரும்பிப் பார்த்தாள். கதையை நிறுத்தினாள். என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டு இயல்பு நிலைக்கு வர மற்றவர்களுக்கு சில வினாடிகள் பிடித்தது.
'இறைவா... உன் கருணையே கருணை...' என்று கண்கள் மூடி கைகள் கூப்பி கண்ணீர் மல்க, இன்னும் அரற்றிக் கொண்டிருந்தார் சம்பந்தி. சில கணங்கள் நிசப்தம் நிலவியது. மெல்ல கண்களைத் திறந்தவர் அசையாமல் இருந்தார். சம்பந்தி 1300 வருடங்கள் கடந்து இன்றைய நாளுக்குள் இறங்குவதற்குக் கொஞ்சம் நேரம் பிடித்ததில் வியப்பில்லை.
'இந்தப் பெண் யாரு?'' உமாவைக் காட்டிக் கேட்டார்.
'இவள் பெயர் உமையாள். நம்ம தெருவில், தலைமுறைகளாக இங்கே தான் இருக்கிறார்கள்.'' பூரணி பதில் சொன்னாள்.
'பெற்றோர்கள் அருமையாக வளர்த்திருக்கிறார்கள். என்ன படிச்சிருக்க?'' நேராக உமாவைப் பார்த்துக் கேட்டார்.
சிரிப்பு மாறாத முகத்தோடு, 'பத்தாவது'' என்று பதில் சொன்னாள்.
'பத்தாவது படித்த பெண்ணுக்கு இவ்வளவு பதிகங்களும் கதையும் எப்படியம்மா தெரிந்தது?''
'எங்க அப்பா சொல்லிக்கொடுத்தாங்க!'' அடக்கத்துடன் பதில் சொன்னாள் உமா.
'பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்?''
'அப்பா இல்லைங்க, அம்மா இருக்காங்க!''
'அவளுடைய அப்பா அந்த நாளில் புலவர் பட்டம் பெற்றவர். பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தார். இந்தப் பெண்ணும் அதே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது. மஞ்சக்
காமாலை வந்து அப்பா இறந்து போனார். குடும்பத்தில் வறுமை. தாயார் பிள்ளையை அருமையாகத் தான் பார்த்துக் கொண்டாள். வேலைக்குப் போன இடத்தில் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டாள். தர்மாஸ்பத்ரியில் ஆனமட்டும் பார்த்தாள். நடை வராமலே போய்விட்டது. முடமாய் போனது இந்தப் பிள்ளையின் வாழ்க்கை. பத்தாவதோடு படிப்பும் நின்றுவிட்டது. அம்மா தத்தி தத்தி வீட்டு வேலைகளைப் பார்ப்பாள். மகள் இப்படி வேலை செய்து கிடைப்பதைக் கொண்டு இருவரும் பசியாறுகிறார்கள். சாமி கதையை என்னமா சொல்லுது பாருங்க... ஆனா, சாமி கருணை இவளுக்குத் தான் கிடைகாமப் போச்சு.'' பூரணி, உமாவின் நிலைமைக்காக இரங்கினாள்.
சம்பந்திக்கு காபி கொடுத்தாள். கைகளில் வாங்கிக்கொண்டவர் நேர்த்தியாய் உமா செய்து அடுக்கியிருந்த மோதகங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
'இந்தக் கதை மட்டும் தான் தெரியுமா? இன்னும் வேற கதைகள் ஏதாவது தெரியுமா?''
'ஐயா, பெரிய புராணக் கதையும், மாணிக்கவாசகர் வரலாறும், ராமாயணம், மஹாபாரதம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம்னு எங்க அப்பா சின்ன வயசுல சொல்லிக்கொடுத்த கதைகள் கொஞ்சம் தெரியும்.''
'பூஜைக்குக் கூடமாட இருந்து பாத்துட்டு சாப்பிட்டுட்டுப் போகணும்'' சொல்லிவிட்டு பூரணி தன் புருஷனோடு மனையில் உட்கார்ந்துவிட்டாள்.
பம்பரமாய் சுற்றி வந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்பந்தி. பூஜை முடிந்து ஆரத்தி காட்டும் நேரத்தில், 'உமா ஏதாவது தேவாரம் பாடேன். . .''
'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்...'' என்று ஆளுடைய பிள்ளையின் தேவாரத்தை மனம் உருகப் பாடினாள்.
தேவாரம் முடிந்து கண்களை மெல்லத் திறந்தாள் உமா. சென்னையின் பிரம்மாண்ட இசை அரங்கத்தில் நிறைந்திருந்த கூட்டம் பக்திப் பெருக்கோடு கைதட்டி ஆரவாரித்தது. 'பெரியபுராண இசைச் சொற்பொழிவு உமையாள் சொல்லக் கேட்பது பெரும் பாக்கியம்.'' கூட்டத்தில் ஒரு பாட்டி சத்தமாய் பாராட்டுப் பத்திரம் வாசித்தாள். பாட்டி இருந்த திக்கு நோக்கி கைகூப்பினாள் உமா.
பூரணி வீட்டில் பாடிய உமா இசை அரங்கத்திற்கு எப்படி வந்தாள் என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? அல்லது பக்கம் காணாமல் போய்விட்டதோ என்று புத்தகத்தை திருப்பிப் பார்க்கிறீர்களா?
பூரணி வீட்டில் அன்று பாடிய உமாவைப் பார்த்துக் கொண்டிருந்தாரே சம்பந்தி, அவர் இசைக் கருவிகள் விற்பனைக்கூடம் நடத்துகிறவர் அல்லவா! அவருக்குத் தெரிந்த சபாவில் உமாவின் இசைச் சொற்பொழிவுக்கு வாய்ப்புப் பெற்றுக் கொடுத்தார். இறைவனின் கருணைப் பார்வை அவளுக்குக் கிடைத்துவிட்டது. உமாவின் கதை சொல்லும் அழகு நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே இப்போது தெரிந்திருக்கிறது. உமா வருடத்துக்குப் பத்து முறை வெளிநாட்டில் இசைச் சொற்பொழிவு நடத்துகிறாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.