

சாதிக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள் பலர். ஆனால், அதை நனவாக்கி வெற்றி பெறுபவர்கள் சிலரே! அந்தச் சிலரின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கனவு காண்பவர்களை ஊக்குவிக்கிறது. அனுஷ்கா ஜெய்ஸ்வால், கல்லூரி வேலை வாய்ப்புகளை ஏற்காமல், அவர் கண்ட கனவைத் துரத்தி வெற்றிபெற்றார்.
அனுஷ்கா ஜெய்ஸ்வால் சொல்வது:
'உத்தரபிரதேசத்தின் லக்னோவில் வசிக்கிறேன். தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். வேலைக்குச் செல்ல மனமில்லை. சொந்தக்காலில் நிற்க விரும்பினேன். லக்னோ திரும்பினேன். தக்காளி, சுரைக்காய் போன்ற காய்கறிகளை மொட்டை மாடியில் வளர்த்தபோது மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. விவசாயத்தை முழுநேரத் தொழிலாகச் செய்தால் என்ன என்று தோன்ற... தோட்டக்கலையை ரசித்து ரசித்து விரிவாக்கம் செய்தேன். இன்று, ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கிறேன். இது மிகப் பெரிய வெற்றிதானே!
எனது குடும்பத்துக்கு விவசாயப் பின்னணி இருந்தது. விவசாயத்தில் அறிவியல் அறிவைப் பயன்படுத்தி நவீன முறையில் பயிரிடுதல் முக்கியம். அதன் மூலம் குறைந்த செலவில், உழைப்பில் அதிக அறுவடை பெறலாம். அதற்காக நான் நொய்டாவில் உள்ள தோட்டக்கலை தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் பாதுகாக்கப்பட்ட விவசாய சாகுபடி பற்றி கற்றுக்கொண்டேன். இந்த நுட்பங்கள் பாரம்பரிய விவசாயத்துக்கு நிகரான ஆனால் மிகவும் லாபகரமாக அமையும்.
பாதுகாக்கப்பட்ட விவசாயம் என்பது பயிர்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்கி விளைச்சலை அதிகரிப்பதாகும். 'பாலிஹவுஸ்' எனப்படும் அரை வட்ட வடிவ இரும்புச் சட்டங்களில் ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்தி கூரை அமைப்பது.
'பாலிஹவுஸ்' வெப்பநிலை, ஈரப்பதத்தை ஒழுங்குபடுத்துகின்றன. சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நிலத்தின் வளம் மற்றும் நீர் அளவை உறுதி செய்கின்றன. இந்தத் தொழில் நுட்பம் அதிக வெப்பம், அதிகக் குளிர் போன்ற வானிலை அபாயங்களிலிருந்து பயிர்களைக் காக்கிறது. 'இந்தக் காய்கறி இந்த சீசனில் மட்டுமே விளையும்' என்பதை மாற்றி, ஆண்டு முழுவதும் காய்கறி விளைச்சலை உறுதி செய்கிறது.
ஹைட்ரோபோனிக்ஸ், மண்ணில் செடி கொடிகள், வளர்ப்பதை மாற்றி, தேங்காய் நார்க்கழிவிலிருந்து வளர்க்கலாம். பாரம்பரிய விவசாயத்தில் பயணிப்பதை மாற்ற வேண்டும். எனது பண்ணையில் இப்போது ஒரு ஏக்கருக்கு 30 டன் விதையில்லா வெள்ளரிகள், குடை மிளகாய்களை விளைவிக்கிறேன்.
பாரம்பரிய முறைப்படி விளைவித்தால் 4 முதல் 6 டன்கள் மட்டுமே அறுவடை செய்ய முடியும். பாரம்பரிய விவசாயத்துடன் ஒப்பிடும்போது, புதிய முறை விவசாயம், நீர், தரமான மண்ணை உறுதி செய்து, உரங்கள் பூச்சிக்கொல்லிகள் செலவுகளைக் குறைக்கிறது. அதே நேரத்தில் காலநிலையின் மாறுதல்களால் உருவாகும் சவால்களை எதிர் கொண்டு உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிப்பு செய்கிறது. வருவாயைப் பெருக்குகிறது.
பண்ணை உருவாக்குவது எளிதில்லை. அதற்கு நிலம் வேண்டும். என் குடும்பத்தினருக்கு நிலம் இல்லை. முதலீடுகளும் தேவை. அதனால்தான் பலரும் வேளாண்மை செய்ய முன்வருவதில்லை. முதலீட்டுக்காக கடன் கேட்டு உறவினர்களை அணுகியபோது 'விவசாயம் கை கொடுக்குமா?' என்று சந்தேகத்தை எழுப்பினார்கள். நான் உறுதியுடன் எனது லட்சியத்தை அடைய முன்னோக்கி நடந்தேன்.
'பாலிஹவுஸ் விவசாயம்' என்பது செலவை அதிகரிக்கும் முயற்சியாகும். ஒரு ஏக்கர் கட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் வரை செலவாகும். அரசாங்கங்கள் 80 சதவிகிதம் செலவுகளை உள்ளடக்கிய கடன்கள், மானியங்களை வழங்குகின்றன. அதிக மகசூல், விவசாயிகள் தங்கள் முதலீட்டை ஒரே வருடத்திற்குள் மீட்டெடுக்க உதவுகிறது.
நான் விவசாயத்தை 2020-இல்தான் தொடங்கினேன். நிலத்தை குத்தகைக்கு எடுத்தேன். தொடக்கத்தில் வெள்ளரி பயிரிட்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் அறுவடை நம்பிக்கைக்குரியதாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட வெள்ளரியில் விற்கும் விலை குறைவாக இருந்தது.
அந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலைமை மேம்பட்டதால், ஒரு ஏக்கரில் இருந்து 20 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைத்தது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு ஏக்கரில் கோதுமை அல்லது நெல் போன்ற பாரம்பரிய பயிர்களை பயிரிடும் ஒரு சராசரி இந்திய விவசாயி பொதுவாக ரூபாய் 1 லட்சம் மட்டுமே சம்பாதிக்கிறார். இன்று, எனது விவசாய முயற்சிகள் ஆறு ஏக்கர் பரப்பளவிற்கு விரிவடைந்துள்ளது. இன்று, ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கிறேன்.
விவசாயம் பெண்களுக்கு வல்லமை, பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது. 25 பெண் விவசாயிகள் எனது பண்ணையைக் கவனித்துக் கொள்கிறார்கள். செடி கொடிகளை லாகவமாகக் கையாளும் அனுபவத்தினால், அவர்களின் தனித்துவமான திறமை மேம்பட்டுள்ளது. எனது கண்காணிப்பில் இவர்களின் அணுகுமுறை விளைச்சலை அதிகரித்துள்ளது. ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைப்பதால், அவர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் வந்துள்ளது' என்கிறார் 28 வயதாகும் அனுஷ்கா ஜெய்ஸ்வால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.