2025 அக்டோபர் 21-ஆம் தேதி, ஜப்பானின் நாடாளுமன்றம் தனது வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண்ணை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. அவர்தான் 64 வயதான சனே தகாய்சி. மார்கரெட் தாட்சரைப் போல உறுதியான தலைமையை வெளிப்படுத்தி, நீண்ட அரசியல் பயணத்திற்குப் பின் உச்சியை எட்டியுள்ளார். எனவே, ஜப்பானிய மக்கள் இவரை 'ஜப்பானின் இரும்புப் பெண்மணி' என அழைக்கிறார்கள்.
ஜப்பானின் நாரா மாகாணத்தில் 1961-ஆம் ஆண்டு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த தகாய்சியின் தந்தை, ஒரு தனியார் நிறுவன ஊழியர். தாய் காவல்துறையிலும் பணியாற்றியவர். அரசியல் தொடர்பு துளியும் இல்லாத குடும்பப் பின்னணி கொண்டவரான தகாய்சி, தனது விடாமுயற்சியாலும், கடுமையான உழைப்பின் மூலமாகவும் ஜப்பானிய அரசியலின் உச்சியை அடைந்துள்ளார்.
இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கல்லூரி நாள்களில் ஹெவி மெட்டல் இசைக்குழுவில் டிரம்ஸ் வாத்தியக் கலைஞராக பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இப்போது கூட விட்ட குறை, தொட்ட குறையாக அயர்ன் மைடன், டீப் பர்பிள் போன்ற இசைக்குழுக்களின் இசையை விரும்பி ரசிக்கிறார். டிரம்ஸ் இசைக் கருவிகளை வீட்டில் வைத்திருக்கிறார். இவர் ஸ்கூபா டைவிங்கிலும் தேர்ச்சி பெற்றவர். கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
ஜப்பானின் புகழ் பெற்ற கோப் பல்கலைக்கழகத்தில் அவர் சேர விரும்பினார். ஆனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் கட்டணம் மிக அதிகம் என்பதால், அவரது பெற்றோர் தயங்கினார்கள். ஆனால், பெற்றோரைச் சிரமப்படுத்தாமல், தான் விரும்பிய படிப்பில் சேர்ந்தார்.
படிப்பின்போது செலவுகளைக் கட்டுப்படுத்த அவர் பல்கலைக் கழக விடுதியில் தங்காமல், வீட்டிலிருந்தே தினமும் சென்று வந்தார். தினமும் அவர் ஆறு மணி நேரம் பயணம் செய்தார். மேலும் தன் செலவுக்கு பகுதி நேர வேலையும் பார்த்தார். அதனால் கிடைத்த வருமானத்தைக் கொண்டு பல்கலைக்கழகக் கட்டணத்தைக் கட்டினார்.
ஜப்பானில் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் பெட்ரிஷியா ஷேராடெர் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்த அனுபவம், அவர் சர்வதேச அரசியலை நன்கு புரிந்துகொள்வதற்கு பேருதவி புரிந்தது. 'ஜப்பான் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளாவிட்டால், பிறர் கருத்துகளுக்கு அடிமையாகிவிடும்' என்றும் அவருக்கு உணர்த்தியது. அதுவே, அவருக்கு ஜப்பானிய அரசியலில் குதிக்கும் ஆர்வத்தையும் விதைத்தது.
ஜப்பான் திரும்பியதும், அவர் தொலைக்காட்சியில் சர்வதேச அரசியல் குறித்த நிகழ்ச்சித் தொகுப்பாளரானார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளும், அவற்றில் அவர் தெரிவித்த கருத்துகளும் மக்கள் மத்தியில் அவரைப் பிரபலமாக்கின. ஜப்பானில் தொலைக்காட்சி மூலமாக பிரபலமானவர்கள் பலர் அரசியலுக்கு வருவது சகஜம். அதன்படி, தனது சொந்த தொகுதியான நாராவில் 1993-இல், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996-இல் ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் சேர்ந்தார். அதில் படிப்படியாக முன்னேறினார். பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றார்.
மறைந்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ ஆபேதான் தன் வழிகாட்டி என்றும், அவர் கடைப்பிடித்த 'அபெனாமிக்ஸ்' பொருளாதார கொள்கையை தான் தொடர்வதாகவும் குறிப்பிடுகிறார். பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட உடனேயே, குறைந்த பிறப்பு விகிதம், பொருளாதார மந்தநிலை, விலையேற்றம் மற்றும் மக்கள் நம்பிக்கையை மீட்பது என்று பல சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார் தகாய்சி.
2004-இல் ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினரான டாகு யாமாமோடோவைத் திருமணம் செய்து கொண்டார் தகாய்சி. இந்தத் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என்றாலும், தன் கணவரது முதல் மனைவியின் மூன்று குழந்தைகளையும் தம் குழந்தைகளாகவே கருதுகிறார். அவர்கள் மூலமாக நான்கு பேரக் குழந்தைகளுக்கு தான் பாசமிகு பாட்டி என்பதில் பெருமை கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.