தில்லி பா.கண்ணன்
விளம்பர மாடல்கள் மனிதர்கள் மட்டுமல்ல; ஐந்தறிவு கொண்ட பிராணிகளும்தான்.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'எங்குச் சென்றாலும் பின்தொடரும் எங்கள் இணைய வழிச் சேவை' என்ற நாய் பங்கேற்ற ஹட்ச் (வோடாஃபோன்) விளம்பரத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அதில் நடித்த 'பக்' பிகரோவும், அதன் குட்டி 'ஸ்பைக்'கும் விளம்பர உலகில் முன்னணியில் இருந்தன.
இதற்கு முன்னோடியாக 1990-ஆம் ஆண்டிலேயே வேறொரு நாய் நடித்த சின்னத்திரை விளம்பரம் அமெரிக்கர்களைப் பெரிதும் கவர்ந்தது. கெண்டகி குழுமத்தைச் சேர்ந்த மெக்சிகோ நாட்டின் துரித உணவகம் 'டேகோ பெல்' விளம்பரத்தில், 'எனக்குக் கொஞ்சம் டேகோபெல் வேண்டும்' என்று பேசி நடித்த 'ஷீவாவா' வகை இனத்தைச் சேர்ந்த கிட்ஜெட் பெயருடைய அழகான குட்டி நாய்தான் அது.
மெக்சிகோவின் ஷீவாவா நகரில் இனப்பெருக்கம் செய்யப்படும் இந்த வகை நாய்கள் அவ்வூர் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் 'பார்பி' பொம்மைகளைப் போலவே, இதன் வெவ்வேறு வடிவப் பொம்மைகள் மிகவும் பிரசித்தம். அவற்றைச் செல்லப் பிராணியாக, பலவிதமாக அலங்கரித்து, ரசித்து வளர்ப்போரும் உண்டு. அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகளே உயிர் வாழக் கூடியது.
1994 பிப்ரவரி 7-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த கிட்ஜெட், சாம் சிப்பெர்டன் என்ற பயிற்சியாளரிடம் வளர்ந்தது. மூன்றாம் வயதில் முதன் முதலாக ஆண் நாய் ஒன்றின் காதலியாக நடித்து அசத்தியது. அது பேசுவதாகக் காட்டுவதற்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டன, 'கார்லோஸ் அலேரேக்ச்சி' என்பவர் பின்னணிக் குரலும் கொடுத்தார்.
முதன் முதலில் 1999 பிப்ரவரியில் ஹாலிவுட்டில் போட்டோ ஒத்திகை நடத்தப்பட்டு, அனைவரையும் கவர்ந்தது. செல்லப் பிராணிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'பேவர்லிஹில்' படத்தில் உதிரி நடிகையாக நடித்தது. ஆஸ்கர் விருது புகழ் ரீஸ் விதர்ஸ்பூன் நடித்த 'லீகலி பிளாண்ட் 2' படத்தில் ,அவரது நாய் ப்ரூசரின் தாயாக நடித்துள்ளது.இவ்விரு 'நடிகை'களும் படப்பிடிப்பு நாள்களில் ஒரே அறையில் சண்டை-சச்சரவின்றித் தங்கியதும் உண்டு.
அதிபுத்திசாலியான கிட்ஜெட், ஸ்டூடியோ செட்டில் காமிராவுக்கு நடுவே யாராவது இருந்தால், தானாகவே நகர்ந்து, சரியான காமிரா கோணத்துக்குத் தன்னை இருத்திக் கொள்வதில் வல்லமை வாய்ந்தது. காட்ஸிலா, கொரில்லா, ஜாஸ், திமிங்கிலம் ஆகியவைகளின் பெரும் உருவத்தையும், டேகோ பெல் உணவு வகைகளையும் ஒப்பிட்டு வெளியான விளம்பரம் 'ஓஹோ'வென ஓடியது.
படப்பிடிப்பு இல்லாத நாள்களில் வீட்டுக்கு வெளியே திறந்தவெளியில் நாள் பூராவும் சூரியக் குளியல் எடுப்பதில் ரொம்பவும் விருப்பம் கொண்டது. சாப்பிடும் நேரத்தைத் தவிர, மற்ற நேரமெல்லாம், அமைதியான தூக்கம்தான். அவசரகால மாற்று நடிகையாக 'டேகோ' என்ற நாயை வைத்திருந்தாலும் அதற்கு வேளை வரவே இல்லை. கிட்ஜெட் மூன்றே ஆண்டுகளில் (1997-2000) பெரும் செல்வத்தை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது.
2000-ஆம் ஆண்டில் சில டேகோ பெல் விளம்பரங்கள் சர்ச்சையில் சிக்கிக் கொண்டன. மெக்சிகோ நாட்டின் பாரம்பரியத்தைக் கேலி செய்யும் வகையில் விளம்பரங்கள் அமைந்திருந்ததால் மக்களின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீதிமன்ற உத்தரவால் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. மேல்முறையீடு செய்தும் டேகோபெல்லுக்கு எதிராகவே 2009-இல் தீர்ப்பு வெளியானது. முதுமையை நெருங்கிவிட்ட கிட்ஜெட்டின் நடிப்பாற்றலும் முடிவுக்கு வந்தது.
2009 ஜூலை 21-இல் திடீர் மாரடைப்பால் அவதிப்பட்ட கிட்ஜெட், 'வலியில்லாத கருணைக்கொலை' என்ற சிகிச்சை முறையில் உயிர்நீக்கம் செய்யப்பட்டது. பிரபல டி.வி. நிறுவனங்களும் சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்த கிட்ஜெட் ஷீவாவாவுக்குப் புகழஞ்சலி செலுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.