

அருள்செல்வன்
வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக திருக்குறள் விளங்குகிறது. அதன் உலகளாவிய சிறப்பு வாய்ந்த பண்புகள் காரணமாக, அது உலக இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ், 1,330 குறள்களுக்கும் ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு மெட்டு வீதம் இசையமைத்திருக்கிறார். அறத்துப்பாலில் உள்ள 380 குறள்களுக்குமான விளக்கங்களுக்கு வெவ்வேறு 380 பிரமுகர்களின் குரலையும் பதிவு செய்துள்ளார்.
இந்தப் பெரும் பணியைப் பாராட்டி கனடாவில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாட்டில் 'குறள் இசையோன்' என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அவருடன் சந்திப்பு:
திருக்குறள் முயற்சியின் முதல் விதை எப்போது விதைக்கப்பட்டது?
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் நிகழ்ச்சி ஒன்றுக்காக 'ஹலோ
எஃப்.எம்.' வானொலி நிலையம் சென்றிருந்தேன். அங்கு அவர்கள் பரிசாக திருக்குறள் புத்தகம் ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். அப்போது நான் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. பிறகு அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். குறளையும் அதன் விளக்கத்தையும் படித்துப் பார்த்து பிரமிப்பு அடைந்தேன்.
'இவ்வளவு பெரிய பொக்கிஷத்துக்கு நாம் இசை வடிவம் கொடுத்தால் என்ன?' என்று தோன்றியது. திரையிசை போல் எளிய வடிவத்தில் கொடுக்கலாம் என்று என்னுள் அந்த ஆர்வம் விதைக்கப்பட்டது. பிறகு செயலில் இறங்கினேன்.
அதன் பயணம் எப்படி இருந்தது?
திருக்குறளுக்கு இசையமைப்பது என்று முதலில் எண்ணிய போது அது சுலபமாகவும் எளிமையாகவும் தோன்றியது. ஆனால், இசை அமைக்க உட்கார்ந்தபோது தான் அது எவ்வளவு பெரிய வேலை என்று மலைப்பாக இருந்தது. திருக்குறளுக்கு இசை என்பது பல பேரும் முயன்றது தான். நான் முதல் ஆள் கிடையாது. ஆனாலும், அதில் எப்படி வித்தியாசமாகவும் புதுமையாகவும் செய்வது என்று யோசித்தேன்.
அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 70 அதிகாரங்கள், இன்பத்துப்பால் 25 அதிகாரங்கள் கொண்டது திருக்குறள். இதற்கு இசை அமைப்பது என்பது பல திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்குச் சமமான பெரிய வேலை. அதற்குத் திட்டமிடுவதே பெரிய பணியாக இருந்தது.
வரிகள் சிதையாமல், தெளிவாகப் புரியும்படி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இசையில் நீட்டி முழக்காமல் எளிமையாக, இனிமையாகக் குறுகிய அளவில் சுருக்கமாக, கவர்ச்சியாக இருக்க வேண்டும். அப்படி ஒரு திட்டத்துடன் இந்தப் பயணத்தை 2011 இல் தொடங்கினேன்.
மெட்டமைக்க எவ்வளவு காலம் ஆனது?
வணிகரீதியான பல வெற்றிப் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் இசையமைக்கும் போது அதற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியைத் தொடங்கினேன்.
ஒவ்வொரு குறளுக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற வகையில் திட்டமிட்டேன். பொதுவாகக் கொடுக்கப்பட்ட ஒரு கவிதையை, அல்லது வரிகளை இசையமைக்கும்போது ஓர் இசையமைப்பாளர் அதிலுள்ள காலப் பிரமாணத்தை, தாளக்கட்டை ஆராய்ந்து பார்ப்பார்.
அதைக் கண்டுபிடித்துவிட்டால் இசை அமைப்பது சுலபம். திருக்குறளில் அந்தக் காலப் பிரமாணத்துக்குரிய தாளக்கட்டு சரியாக இருந்தது. எல்லாமே 'கண்ட நடை'யில் இருந்தது. முதலில் அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களுக்கும் 380 குறளுக்கும் இசையமைக்கத் திட்டமிட்டேன். உதாரணமாக, வான்சிறப்பு அதிகாரத்தில் முதல் குறளை எடுத்துக் கொண்டால் ஏழு சீர் இருக்கும்.
அப்படி எல்லா குறளுக்கும் அந்த அமைப்பு சரியாக இருந்தது. அப்படித் தாளக்கட்டை சரியாகக் கண்டுபிடித்த பிறகு எனக்கு பாதி வேலை முடிந்து விட்டது. பிறகு ஒவ்வொன்றுக்கும் ஏற்ற இசையை அமைக்க ஆரம்பித்து விட்டேன். உள்ளே நுழைந்து போகப்போக இது ஒரு மகிழ்ச்சியான, சுவாரசியமான அனுபவமாகவும் மாறியது. இப்பணி பொறுப்பான ஒன்றாகவும் எனக்குப் பட்டது.
மெட்டில் வகைமையை எப்படி அமைத்துள்ளீர்கள்?
ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒவ்வொரு ராகத்தின் அடிப்படையில் இசையமைத்தேன். உதாரணமாக, இரண்டாவது அதிகாரம் 'வான் சிறப்பு' என்பதை 'அமிர்தவர்ஷினி' என்ற ராகத்தில் இசை அமைத்தேன். பொதுவாக கர்நாடக இசையில் 'அமிர்தவர்ஷினி' என்பது மழையை, நீரைக் குறிக்கும் ராகமாக இருக்கும். அந்த அதிகாரத்தின் மற்ற குறள்கள் அதே ராகத்தை ஒட்டி வெவ்வேறு மெட்டுகளில் இருக்கும். இப்படி அறத்துப்பாலின் 380 குறளுக்கும் இசையமைத்தபோது ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு குரல் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
அதாவது, ஒரு குறள் ஒரு குரல். ஒவ்வொரு குறளுக்கும் ஒரு பாடகரைப் பயன்படுத்துவது என்று நினைத்தேன். நினைப்பது எளிது; செய்வது கடினமாக இருந்தது. நான் ஓர் இசையமைப்பாளராக இருப்பதால் சுமார் 50 பாடகர்களைத் திரைத்துறையில் இருந்தே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அடுத்த நிலையாக மேடைப்பாடகர்களை எடுத்துக் கொண்டேன். பிறகு கர்நாடக இசைப்பாடகர்கள், நாட்டுப்புற பாடகர்கள் என்று தேடியபோது, 200 பேர் வந்திருந்தார்கள்.
இதை ஓர் உலகளாவிய முயற்சியாக ஏன் செய்யக்கூடாது என்று எண்ணி பிற நாடுகளில் உள்ள பாடகர்கள், பாடும் ஆர்வம் உள்ளவர்களையும் இதில் இணைத்துக்கொண்டேன். இதற்காக நான் 15 நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பாடகர்களை இணைத்துக்கொண்டு 380 குறள்களுக்கும் 380 குரல்களைப் பாட வைத்துப் பதிவு செய்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.
குறள் விளக்கம் யார் யாரை வைத்து எப்படி அமைத்தீர்கள்?
திருக்குறளைப் படிக்கும்போது, அது வேறு ஒரு தரத்திலான தமிழாக இருப்பதால் அது மக்களுக்குப் புரியுமா? என்ற சந்தேகம் இருந்தது. திருக்குறளுக்கான இசை முயற்சி என்பது அந்த மெட்டின் ஈர்ப்பில் குறளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அதற்கு என்ன பொருள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?அதற்கான விளக்கம் சொல்ல வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகத் தேவைப்பட்டது.
விளக்கம் தேவை என்று முடிவான போது யாரை வைத்து விளக்கம் சொல்வது என்று யோசித்தேன். இதற்காகத் திரைக் கலைஞர்கள் மட்டுமல்ல கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் போன்ற பல்வேறு துறையில் உள்ளவர்கள், அதே போல் வெளிநாடு வாழ் பிரமுகர்களும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு அப்படியே பதிவு செய்தேன். திருக்குறள் மதச்சார்பின்மைக்கு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
எனவே திருக்குறளில் வரும் கடவுள் வாழ்த்து அதிகாரத்துக்கு அனைத்து மதத்தினரையும் பங்களிப்பு செய்ய வைத்தேன். உதாரணத்துக்கு காஞ்சி பீடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் முதல் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிறிஸ்துவ, சமண மதத்தைச் சார்ந்தவர்கள் என்று பதிவு செய்தேன். அந்த குறளுக்கான விளக்கத்தில் அவர்களது பார்வையிலான கருத்தையும் சேர்த்தேன். இப்படி 380 குறள்களுக்கும் 380 பேரிடம் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ளவர்களிடமும் பெற்றுப் பதிவு செய்தேன்.
மறக்க முடியாத அனுபவம்?
இவ்வளவு பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும்போது, பல புதிய வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தன. தொழில் ரீதியிலான சினிமா பாடகர்களைப் பாட வைப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால், புதிய பாடல்களைப் பாட வைக்கும்போது, அவர்களது சுதி எப்படி இருக்கும் என்பதை அறிந்து செயல்படுத்துவதும் ஆண், பெண் இணைந்து பாடும்போது அந்த சுதியைப் பொருத்துவதும் ஒரு சவாலாக இருந்தது. சிலரது வீட்டுக்குச் சென்று, சிலரது நாட்டுக்குச் சென்று சிலரைப் பாடி அனுப்ப வைத்து இப்படிப் பல வகையில் இது பதிவு செய்யப்பட்டது.
அப்துல் கலாம் தில்லியில் இருந்தபோது எனது விருப்பத்தைத் தெரிவித்து அவருக்கு நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அப்போது ஒரு குறிப்பிட்ட தேதியைக் குறிப்பிட்டு, அன்று நான் ராஜ்பவன் வருவேன். அங்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று உடனே பதில் அனுப்பி இருந்தார். ஆனால், அதற்கு முதல் நாளே நான் முக்கியமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது.
இப்படி ஓர் இக்கட்டான சூழலில் எனது உதவியாளரை அனுப்பினேன். அவரோ எந்தவிதமான சங்கடமும் தெரிவிக்காமல் சரியாக ஒத்துழைப்புக் கொடுத்தார். அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதற்கு இது ஓர் உதாரணம். அவர் உதவியாளரிடம் பேசிய போது, இந்த ஒரே ஒரு குறளுக்கு விளக்கம் சொல்வதற்கு காலையிலிருந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்றார். பெரிய மனிதர்கள் என்றும் பெரிய மனிதர்கள்தான்.
பொதுவாக எந்த அடிப்படையில் இந்த அதிகாரம், குறள், பொருள் வைப்பு முறை இருக்கும்?
ஒவ்வொரு அதிகாரத்துக்கும் அதிகார விளக்கம் ஒருவரை வைத்து விளக்கிவிட்டு பிறகு ஒவ்வொரு குறளாகப் பாடகர் பாட, அதற்கான பொருள் விளக்கம் தருவது என்பது அடிப்படையாக இருக்கும். இப்படி அதிகார விளக்கத்துக்கு மறைந்த சுவாமி ஓம்காரனந்தாவை பயன்படுத்தினேன். அவர் திருக்குறளில் வல்லமைப் படைத்தவர். முதலில் 'உள்ளம் தோறும் வள்ளுவம்' என்று பெயர் வைத்தோம். பிறகு 'ஒரு குறள் ஒரு குரல்' என்றும் பயன்
படுத்தினோம். திருக்குறள் 'கண்ட நடை'யில் இருப்பதால் பேசுவது போன்ற ஒரு தொனியைத் தரும். அப்படியே அந்த இசையும் அமைந்திருக்கும். நீட்டி முழக்காமல் சரியான தாளக்கட்டில் சரியாக அமைந்து பாடுவதற்கு ஏற்ற அனுபவத்தையும் தரும். ஒரு குறளுக்கு மூன்று நிமிடங்கள் என்ற அளவில் இருக்கும்.
சவால்கள் இருக்குமே?
முதலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ? என்ற ஒரு மிரட்சி இருந்தது. ஆனால் போகப் போக செய்துதான் பார்ப்போமே என்கிற தைரியம் வந்தது. ஒரு பாடல் என்கிற போது அந்தப் பாடலுக்கு ஏற்ற எல்லா லட்சணங்களும் இருக்க வேண்டும், தாளக்கட்டு, காலப் பிரமாணம் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும், சரியானபடி ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.
தொழில்நுட்பங்கள் சரியாக அமைய வேண்டும் என்கிற பொறுப்புடன் செயல்பட்டதால் சிரமம் தெரியவில்லை. என்னுடைய தன்னார்வ முயற்சி என்பதால் யாருடைய ஆதரவையும் நான் கேட்கவில்லை. எனவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. லட்சக்கணக்கில் செலவான போதும் இதற்காக அரசையோ வேறு எந்த அமைப்பையோ நான் அணுக
வில்லை; எதிர்பார்க்கவில்லை. சில நண்பர்கள் தான் உதவினார்கள். அவர்கள் செய்த செலவிற்கு சிடிகளை கொடுத்து ஈடு கட்டினேன்.
இந்த முயற்சியை விரிவாக்க என்ன செய்தீர்கள்?
இந்தப் பாடல்களை எஸ். பி. பாலசுப்ரமணியம், சித்ரா போன்ற பிரபலமான திரைப் பாடகர்கள் தொடங்கிப் பலரும் பாடி இருக்கிறார்கள். பிறருடைய குரல் பங்களிப்புக்காக, நான் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தேன். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், துபை, மொரிஷியஸ் போன்ற 15 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன்.
திருக்குறள் தமிழில் இருக்கிறது தெரியும். அதற்கான விளக்கம் தமிழில் இருந்தால் மட்டும் போதுமா? என்று யோசித்தோம். தமிழுடன் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு என்று ஐந்து மொழிகளிலும் நிபுணத்துவம் உள்ளவர்களைக் கொண்டு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம். இப்படிச் சாதாரணமாக ஆரம்பித்தது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு சென்றது.
இந்த முயற்சி வெளியில் தெரியவில்லையே?
சில ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய ஆளுநர் ரோசையா அவர்கள் வெளியிட்டார். ஆனால் இது ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறது. வெளியே சென்றடையவில்லை. மக்களிடம் இது சேர வேண்டும். இதைப் பலரும் பாராட்டினாலும், 8 கோடி பேர் உள்ள தமிழ் மக்களிடம் இது இன்னும் சரியாகப் போய்ச் சேரவில்லை. கொண்டு சேர்க்க வேண்டும். இப்பணி இத்
துடன் நிற்கவில்லை . இன்னும் மேலும் மேலும் விரிவாகக் கொண்டு செல்ல வேண்டிய முயற்சி இது. இதை மற்ற மொழிகளிலும் கொண்டு செல்ல விருப்பமாக இருக்கிறேன். முதற்கட்டமாக மேலும் 5 மொழிகளில் செய்ய வேண்டுமென்று ஆசை உள்ளது. பொருட்பால், இன்பத்துப்பாலுக்கு இப்படிச் செய்வதில் சில கேள்விகள் இருப்பதால் விவாதிக்க வேண்டியுள்ளது.
இதை நாட்டுடைமை ஆக்குவீர்களா?
சமூக சேவையாற்றும் விதத்தில் 'பரத்வாஜ் பவுண்டேஷன்' என்கிற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில்தான் திருக்குறள் இசை முயற்சி இருக்கிறது. இது மக்களுக்கானதாக மாற வேண்டும். யார் பெயரில் இருந்தால் என்ன? நாட்டுமையாக்கப்பட்டால் மகிழ்ச்சிதான்.
மேலும் விரிவாக்கி ஒட்டுமொத்தமாக முடித்து தமிழ்நாடு அரசிடம் கொடுக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. இதை 8 கோடி மக்களுக்கான பொக்கிஷமாக நான் நினைக்கிறேன். பிற மொழி மக்களுக்கும் இது சேரவேண்டும் என்று நினைக்கிறேன். ஓர் இசையமைப்பாளராக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிய போது திருக்குறள் என்கிற
மாபெரும் பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டேன். தனி மனிதராகத் தொடங்கினாலும் இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவரவர் ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல் மக்களுக்கான பங்களிப்பாக இதைச் செய்திருக்கிறார்கள். நான் ஒரு முன்னெடுப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இதில் செயல்பட்டு இருக்கிறேன் என்று கருதுகிறேன் என்கிறார் இவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.