'புறத்தோற்றத்தை வைத்து யாரையும் வித்தியாசப்படுத்தக்கூடாது. வெள்ளைத்தழும்புகள் மட்டுமல்ல; அமில வீச்சு, விபத்து என்று எந்த வகையான பாதிப்பு வந்தாலும், பாதிக்கப்பட்டோரின் தோற்றத்தை வைத்து அவர்களை அளவிடவோ, தனிமைப்படுத்தவோ கூடாது.
அறிவுரை, ஆலோசனை என்ற பெயரில் அவர்களைக் கஷ்டப்படுத்தாமல் இருப்பதே உண்மையான மனிதம்!'' என்கிறார் சங்கீதா.
ராஜபாளையத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், தனது கணவர் வேல்முருகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். வெள்ளைத் தழும்புகளால் 14 ஆண்டுகளில் வேல்முருகனின் உடம்பு முழுவதுமாக நிறமாறினாலும் அன்போடு அரவணைத்து வருகிறார்.
சங்கீதாவிடம் பேசியபோது:
'எனது தந்தை கபிலன், ராணுவத்தில் மேஜராக இருந்தார். தாய் கவிதா, பள்ளித் தலைமை ஆசிரியர். எனக்கு இரு தம்பியர். நான் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் படித்து, கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினேன்.
மதுரையைச் சேர்ந்த வேல்முருகனுடன் 2004இல் திருமணமானது. அவர் எம்.என்.சி. நிறுவனத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். எங்கள் மகன் ஸ்ரீராம், பிளஸ் 2 படிக்கிறார்.
எங்களுக்குத் திருமணமாகி, 7 ஆண்டுகளுக்குப் பின்னர் என் கணவரின் தாடையில் சிறு புள்ளி வந்தது. அது சாதாரண தேமல் என்றே நினைத்தோம்.
'விட்டிலிகோ' (வெள்ளைத் தழும்புகள்) பற்றி விழிப்புணர்வு அப்போது இல்லை. நாள்கள் செல்லச் செல்ல வெள்ளைத் தழும்புகள் பரவ ஆரம்பித்தது. சென்னையில் தோல் சிகிச்சை நிபுணர்களிடம் பரிசோதனைக்குச் சென்றோம். சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும், வெள்ளைத் தழும்புகள் உடல் முழுவதும் வேகமாகப் பரவியது. உடல், மன வேதனைகளுக்கு ஆளானோம்.
அலோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி, பாரம்பரிய மருத்துவம் என்று அனைத்து மருத்துவ முறைகளிலும் பல மருத்துவர்களிடம் எனது கணவரைப் பரிசோதித்தும், வெள்ளைத் தழும்புகள் பரவலைத் தடுக்க முடியவில்லை. ஓரளவுக்கு மேல், இதுக்கு எந்தச் சிகிச்சையை எடுத்துக்கொண்டாலும் கட்டுப்படவில்லை. என் கணவரின் நிற மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, குடும்பத்தினர் துணை நின்றோம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நிற மாற்றம் உண்டான காலத்தை மிக வேதனையாக அனுபவித்தோம்.
பொது இடங்களில் வித்தியாசமான பார்வைகள், உறவினர்களும் நண்பர்களும் விசாரிக்கும் விசாரிப்புகள், புது சிகிச்சை முறைகளுக்கான அறிவுரைகள் என்று மனதளவில் நொறுங்கினோம். அதையெல்லாம் கடந்து முழுமையான நிற மாற்றம் வந்ததும், என் கணவருடைய தோற்றமே மாறுதலான மாதிரி இருந்தது.
சத்து குறைபாடு காரணமாக, முதலில் முகத்தில் வெள்ளைத் தழும்புகள் தோன்றும். தோல் சிகிச்சை நிபுணரை ஆலோசித்து, 'விட்டிலிகோ' அறிகுறியா என்று பரிசோதிக்க வேண்டும். உறுதியானவுடன் அதற்கான சிகிச்சைகளை மன உறுதியோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான செலவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாக இருந்தது. தற்போது விழிப்புணர்வு அதிகமானதிலிருந்து, அதற்கான சிகிச்சைகளும், கட்டணமும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
முடிந்தவரைக்கும் சுய சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையின்படியே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெயில் குளிர் காலங்கள், உடலமைப்பு என ஒவ்வொருவருக்கும் சிகிச்சை முறைகள் மாறும் என்பதைக் கவனிக்க வேண்டும். இதுபோன்றவர்களுக்குப் பிரியமானவர்களின் அன்பும் அரவணைப்பும்தான் முக்கியம். பாதிக்கப்பட்டோரும், அவர்களது ரத்த உறவுகளும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமானது.
திருமணமாகாத பெண்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால், கண் கலங்கக்கூடாது.
என் கணவருக்கு 'விட்டிலிகோ'
வந்தபோது, என் மகனுக்கு நான்கு வயது. என் கணவரின் நிற மாறுதலை அவனும் அறிந்தான். தற்போது 14 ஆண்டுகள் கழித்து என் கணவரோட தோல் மொத்தமும் ஒரே மாதிரி வெண்மை நிறமாக மாறியது. புதியதாகப் பார்ப்போர் எல்லாம் அவருடைய உண்மையான நிறமே அதுதான் என்று நம்பும் அளவுக்கு ஓர் அழகான மாற்றம் வந்துருக்கு. முன்பைவிட இப்போது அவருக்குத் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
இதுபோன்ற வெள்ளைத்திட்டுகளால் பாதிக்கப்பட்ட சுமார் இருநூறு பேருக்கு ஆலோசனை கூறியுள்ளேன்'' என்கிறார் சங்கீதா வேல்முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.