

'இருபத்து மூன்று வயதில் இருந்து முப்பத்து மூன்று வயது வரை பத்து ஆண்டுகள் இலக்கியக் கூட்டங்களுக்கு வெறியாக நான் செல்வது வழக்கம். இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
இலக்கியக் கூட்டத்தில் பேசிப் பேசி, நான் படிப்பதற்குத் தெரிந்துகொண்டேன். எதைப் படிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்றும் அறிந்தேன். இடையறாது படிக்கின்ற போதை இலக்கியக் கூட்டங்களால்தான் ஏற்பட்டது. என்னுடைய நெருங்கிய உறவுகளில் பலர் காசே குறியாக வாழ்ந்து வந்தனர்.
"ஐம்பது ரூபாய்க்கு ஒரு பழைய புத்தகத்தை வாங்கிட்டு வந்து இருக்கியே? அடுக்குமா இது? இப்படியா காசை செலவு பண்ணுவே?' என்று என் புத்தகப் பைத்தியம் பற்றி பொருமுவார்கள். "படிச்சு முடிச்சுட்டா நாற்பது ரூபாய்க்கு விற்க முடியுமா? நாற்பது வேண்டாம்... இருபது ரூபாய்க்கு விற்க முடியுமா? என்ன செய்வே இதை...' என்பர்.
"இதை இலவசமாக யாருக்கேனும் தருவேன்' என்பேன். இதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. துளித் துளியாய் காசு சேர்த்து மிகப் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று அவர்கள் வாழ்க்கை குறிக்கோளாக இருந்தது. எனக்கு இல்லை. எனது அறிந்துகொள்ளும் ஆவலுக்கு, தத்துவ வேட்கைக்கு நூல்கள் துணையாக இருந்தன'' என்று எழுத்தாளர் பாலகுமாரன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தார்.
முக்கிமலை நஞ்சன்
1937ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கன்னியாகுமரிக்கு மகாத்மா காந்தி வந்திருந்தார். நாகர்கோவில் நாகராஜர் கோயிலில் வழிபட்ட அவர், சுசீந்திரத்தில் உள்ள எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்த பார்வையாளர் கையேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். அந்தப் பதிவேடு இன்றளவும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது.
பொதுவாக, நாணயங்களில் மொட்டைத் தலையுடன் உருவங்களைப் பொறிப்பதில்லை. இதற்கு விதிவிலக்காக இரண்டு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்று ஏழாம் எட்வர்ட்டின் உருவம் பொறித்த நாணயம். மற்றொன்று பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் உருவம் பொறித்த நாணயம்.
நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் சி.சுப்பிரமணியன் வாதாடினார். இவரது வாதத்தைக் கேட்ட நீதிபதியும், "குற்றம் செய்யாதவர்' என்று கூறி எதிரியை விடுதலை செய்தார். ஆனாலும் அவர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வெளிவரவில்லை.
இதைப் பார்த்த நீதிபதி, 'உங்கள் கட்சிக்காரர் ஏன் இன்னமும் கூண்டிலேயே நிற்கிறார்?'' என்று கேட்டார். இதற்கு சி.சுப்பிரமணியன், 'நீதிபதி அவர்களே! என் கட்சிக்காரர் குற்றம் அற்றவர் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்துவிட்டேன். ஆனாலும், தான் குற்றம் அற்றவர் என்பதை எதிரி ஏற்கும்படி நான் இனிமேல்தான் செய்ய வேண்டும்'' என்றார்.
நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
டி.ஆர்.ராஜகுமாரியின் மூன்று சகோதரர்களான டி.ஆர்.ராமண்ணா, பார்த்தசாரதி, சக்கரவர்த்தி, அவரது தங்கை சேதுலட்சுமி ஆகியோர் ஒன்று சேர்ந்து, 'அக்கா.. நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்'' என்றனர். ஆனால், ராஜகுமாரியோ, 'நான் திருமணம் செய்துகொண்டால் உங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்? உங்களைவிட்டு நான் பிரிய வேண்டி இருக்குமே? எனக்குத் திருமணம் வேண்டாம்'' என்று கூறினார். கடைசி வரையில் அவருக்குத் திருமணமாகவில்லை.
முக்கிமலை நஞ்சன்
' மருத்துவர் சாந்தா குறித்து "அடையாறில் முன்னோர் ஆலமரம்' என்னும் தலைப்பில் நூலை எழுதியிருந்தேன். பக்கங்களைத் தட்டச்சு செய்து அவரிடம் அளித்தேன். சில நாள்கள் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. ஒருநாள் என்னை வரச் சொன்னார். "எக்ஸலெண்ட் ராணி மைந்தன்' என்றார்.
தட்டச்சு செய்யப்பட்ட பக்கங்களை அவர் படிக்கவில்லை. ஆனால் சிலரிடம் படிக்கச் சொல்லியுள்ளார். அவர்களுடைய கருத்துகளோடு, தன் கருத்தையும் சேர்த்தே அவர் சொன்ன வார்த்தையே அது.
அவரிடம், "டாக்டர்... எதிர்காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று ஏதேனும் லட்சியம் கொண்டுள்ளீர்களா? தாங்கள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம் எதுவாக இருக்கும்?' என்று கேட்டேன்.
அதற்கு ஒரு விநாடியும் தாமதிக்காமல், அவர், "இந்த அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட் என்றைக்கு மூடப்படுகிறதோ, அதுவே நான் மகிழ்ச்சியடையும் தருணமாகும். கேன்சர் எனும் நோய் முழுவதுமாகக் கொல்லப்பட்டுவிட்டது என்று ஒருகாலம் கனிந்தால், இந்த மருத்துவமனைக்கு என்ன வேலை?' என்றார்.
அந்தப் பதிலைக் கேட்டு உருகிப் போனேன். எப்பேர்ப்பட்ட உள்ளம் அவருக்கு?'' என்று பத்திரிகையாளர் ராணி மைந்தன் தான் எழுதிய "வந்த பாதை' எனும் நூலில் கூறியிருக்கிறார்.
தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.