குழந்தைகளுக்காக இப்போதே யோசிக்கிறேன் ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'தி கேர்ள் ஃப்ரண்ட்' திரைப்படம் நவம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்துக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. இந்தாண்டில் மட்டும் 'சிக்கந்தர்', 'குபேரா', 'தம்மா' என ராஷ்மிகா நடித்த மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்கின்றன.'தி கேர்ள் ஃப்ரண்ட்' படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து நேர்காணல்களும் அவரது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
ராஷ்மிகா பேசுகையில், 'இருபது முதல் முப்பது வயது வரை தலையைக் குனிந்து வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது. நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு நமக்கு பணம் வேண்டும். முப்பது முதல் நாற்பது வயது வரை வேலையில்தான் வாழ்க்கை நகரும். நாற்பது வயதில் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை.'' என்றவர், 'நான் இன்னும் தாயாகவில்லை. நான் குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பேன் என்பதும் எனக்குத் தெரியும். இப்படியான விஷயங்களை நான் நேசிக்கிறேன்.
பிறக்காத அந்தக் குழந்தைகளுக்காக பல விஷயங்களையும் யோசிக்கிறேன். நான் அவர்களுக்கு அனைத்தையும் செய்ய விரும்புகிறேன். நான் அவர்களைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். போருக்குச் செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் அவர்களுக்காக நான் செல்ல வேண்டும்.'' என்றபடி முடித்துக் கொண்டார்.
மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்!
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. 'மைக்கேல்' படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
மைக்கேல் ஜாக்சனின் சகோதரரான ஜெர்மெயின் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன்தான் இந்த ஆட்டோபயோகிராஃபி படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்துக்காக தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு படத்திற்குள் வந்திருக்கிறார் ஜாஃபர்.
வெளியான டீசரில் மைக்கேல் ஜாக்சனின் உடைகளை அணிந்து அவரைப் போல நடனமாடுவதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகனை நடிக்க வைக்க முடிவு செய்தது குறித்து இப்படத்தின் இயக்குநர் ஆண்டோயின், 'நான்
ஜாஃபரை முதல் முறையாகச் சந்தித்தபோது அவரிடம் ஸ்பிரிட்சுவல் தொடர்பு தெரிந்தது.
மைக்கேல் ஜாக்சனை இயல்பாகப் பிரதிபலிக்கும் திறன் அவரிடம் இருந்தது. அதுமட்டுமல்ல, ஜாஃபரின் முகத்துக்கும் கேமராவுக்கும் அழகான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் கதாபாத்திரத்துக்கு உலகமெங்கும் பல நடிகர்களைத் தேடினோம்.
பிறகுதான், ஜாஃபர் சரியான தேர்வாக இருப்பார் என நடிக்க வைத்தோம்!'' எனக் கூறியிருக்கிறார். இதைத் தாண்டி மைக்கேல் ஜாக்சனின் சிறு வயது கதாபாத்திரத்தில் ஜுலியானோ க்ரூ வால்டி என்பவர் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் தாயாராக நடித்திருக்கும் நியா லாங், 'மைக்கேல் ஜாக்சனின் தாயார்தான் அந்தக் குடும்பத்துக்கு அற்புதமான வலிமையான தூண்.
ஒரு தாயாக, அவர் தன்னலமற்றவராக இருந்தார். மைக்கேல் ஜாக்சனுடைய தாயாரின் குரலைத் திரைக்குக் கொண்டுவந்து, மைக்கேல் ஜாக்சனின் கதையை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.'' என்றார்.
மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015ஆம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் 'என் வழி தனி வழி' படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்துக்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகிய ரோஜா, அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2014ஆம் ஆண்டு ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ரோஜா, 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறைக்கு வரவில்லை.
2014ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது மீண்டும் திரைத்துறைக்குள் என்ட்ரி தந்திருக்கிறார் ரோஜா.
அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேஷ் நடிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம்தான் கம்பேக் கொடுக்கிறார் ரோஜா.
இவர் இப்படத்தில் சந்தானம் என்கிற கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. ரோஜா மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து சத்ய ஜோதி நிறுவனம், '1990களின் ராணியான ரோஜாவை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு மீண்டும் வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.