அறிவியல் கண்டுபிடிப்பு: கடலை மிட்டாயால் வந்த ஓவன்

மனிதனின் அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகளின் கடின உழைப்பும், சில சுவாரசியங்களும் அடங்கியிருக்கின்றன.
அறிவியல் கண்டுபிடிப்பு: கடலை மிட்டாயால் வந்த ஓவன்
Published on
Updated on
2 min read

மனிதனின் அத்தியாவசியத்   தேவைக்குப்  பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகளின்  கடின உழைப்பும், சில  சுவாரசியங்களும் அடங்கியிருக்கின்றன.

வீட்டில் உள்ள  சமையல் அறைகளிலும், பேக்கரி உள்ளிட்ட உணவகங்களிலும் சமைப்பதற்கும், சூடு செய்வதற்கும் பயன்படும் ஒரு முக்கியமான நவீன சாதனம் மைக்ரோ வேவ் ஓவென். இது உருவான வரலாற்றில்  ஓர் அற்புத நிகழ்வு உள்ளது.

பெர்சி லெபரான் ஸ்பென்சர் என்பவர் ஓர் அமெரிக்க (தாமாகக் கற்றுணர்ந்த) இயற்பியலாளர், மின்னியல் பொறியாளர். இவர் குழந்தையாக இருந்தபோதே  தந்தையை இழந்து, தாயாரால் கைவிடப்பட்டு, அத்தையால் வளர்க்கப்பட்டார். இவருக்கு  ஏழு வயதிருக்கும்போது  அவரது மாமாவும் இறந்தார். பணத்திற்காக வேலைக்குச் செல்லவேண்டிய  கட்டாயம் ஏற்பட்டது.

பள்ளிப்  படிப்பைத் தாண்டாதவர். எனினும்,  தாமாக இயற்பியல், வேதியல், நுண் கணிதம், திரிகோணமிதி  போன்ற பாடங்களை இரவு நேரங்களில் படிக்கும் வழக்கம் கொண்டவர். பின்பு தனது பதினெட்டாவது வயதில், அமெரிக்காவின் கடற்படைப்  பிரிவில் பொறியாளராகச் சேர்ந்து கம்பியில்லாத் தொடர்பு குறித்து அறிந்து பணியாற்றினார். மின்னியல் பொறியியல் பட்டம் ஏதும் பெறாமலேயே, அனுபவம் மூலம் காகித ஆலையில் மின்சாரத்தைக் கையாளும் பராமரிப்புப் பணியில் சேர்ந்தார்.

1939ஆம் ஆண்டு  ரெய்தியன்  என்கிற நிறுவனத்தில் ராடார்களில் உள்ள உயர் சக்தியுள்ள வெற்றிடக் குழாய்களை உருவாக்கும் பிரிவில்   முதன்மைப் பொறியாளராக  வேலைக்குச் சேர்ந்தார். மைக்ரோ அலைகளை உருவாக்கும் மாக்னட்ரான்  எனப்படும் சக்திவாய்ந்த வெற்றிடக் குழாய்களை அதிக அளவில் உற்பத்தி செய்து தமது திறமைகளைக்  காட்டினார்.

ஒருநாள் செயல்பட்டுக் கொண்டிருந்த ராடாரின் அருகில் நின்று  மாக்னட்ரான்க்கு பக்கத்தில்  பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக தனது பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு அதில் தான்  வைத்திருந்த கடலை மிட்டாய் பாக்கெட்டைப்  பிரித்துப்   பார்த்தார். அது இளகியிருந்தது. என்ன காரணம் என்று அறியாமல் விட்டுவிட்டார்.

இதே போன்று  சில நாள்கள் கழித்து எதார்த்தமாக தனது பாக்கெட்டில் இருந்த கடலைமிட்டாய்  பாக்கெட்டைப்  பார்த்தார். அதுவும்  இளகியிருந்தது. அப்போதுதான்,  இந்த இடத்துக்கு வரும்போதுதான்  இப்படி ஆகிறது என்று கண்டறிந்தார்.

பிறகு சோளத்தைக்  கொண்டு வந்து அதன் அருகில் வைத்தார். அவை சோளப்பொரியாயின. முட்டையைக் கொண்டுவந்து பார்த்தார். அது வெடித்து அருகில் நின்ற ஒருவரின் மூக்கின் மீது சிதறியது.

பிறகு ஒரு கனமான மூடிய பெட்டிக்குள் இந்த மின்காந்த அலைகளை உருவாக்கும் அமைப்பை  வைத்து அதில் பலவிதமான உணவுப்  பொருள்களை  வைத்துப்  பரிசோதித்தார்.  உணவுப் பொருள்களைச் சமைக்கவும், சூடுபடுத்தவும் மைக்ரோ அலைகளைப்  பயன்படுத்த முடியும் என்பதை இறுதியில்  கண்டுபிடித்தார்.

உணவை வெறும் சில விநாடிகளில் சமைக்கக் கூடும் புதிய அறிவைப் பற்றி அறிந்த ஸ்பென்சர், ரெய்தியன் நிறுவனத்துடன் சேர்ந்து 'ரேடார் ரேஞ்ச்' என்று பெயரிட்ட கண்டுபிடிப்பை நிகழ்த்தி 1945 ஆம் ஆண்டு, காப்புரிமை பெற்றார். இரண்டு வருடங்கள் கழித்து, ரெய்தியன் ரேடார் ரேஞ்சை முதல் வணிக மைக்ரோவேவ் ஓவனாக வெளியிட்டது. அதன் எடை 340 கிலோ கிராம் மற்றும் உயரம் சுமார் ஆறு அடியாக இருந்தது.

ஆரம்ப மைக்ரோவேவ் ஓவன், ஒரு ஃப்ரிட்ஜ் அளவுக்குப் பெரியதாக இருந்தது. எதாவது சமைக்க, காற்றுச் சூடானதும் 20 நிமிடம் எடுத்துக்கொள்ளும். ஆனால், அவை இன்று வாங்கக்கூடிய எதையும்விட பத்து மடங்கு சக்திவாய்ந்ததாக இருந்ததால், உருளைக்கிழங்கு ஒன்றை 30 விநாடிகளில் சமைக்கப்பட முடியும். உயர்ந்த விலை மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய பொதுமக்களின் பயம் காரணமாக ரேடார் ரேஞ்ச் உடனடியாக மக்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை. இறுதியில், ஃப்ரிட்ஜ் அளவுள்ள இந்த சாதனம் மேலோட்டமாகக் கையாளக்கூடிய சிறிய  அளவிற்குச் சீரமைக்கப்பட்டது.

பிறகு, ஸ்பென்சர் தனது கண்டுபிடிப்புக்காக நிரந்தரமாக நினைவூட்டப்படுகிறார். 'ஹால் ஆஃப் ஃபேம்' என்கிற புகழ் பெற்ற

கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில்  இடம் பிடித்தார். இதில்  தாமஸ் ஆல்வா  எடிசன் மற்றும் ரைட் சகோதரர்கள் போன்ற புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com