'ஒவ்வொரு நாளும் பயிற்சி பெறுவேன். முயற்சிப்பேன். வெற்றி இலக்கை அடைவேன். விளையாட்டு வீரர்களிடம் ஒழுக்கம், உடற்பயிற்சி, கடின உழைப்பு ஆகியன இருந்தால் வெற்றியை அடையலாம்'' என்கிறார் கபடி வீரர் எம்.அபினேஷ்.
மன்னார்குடி அருகே 'விளையாட்டு கிராமம்' என்று அழைக்கப்படும் வடுவூரைச் சேர்ந்த இவர், பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய அளவிலான இளையோர் ஆடவர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களில் ஒருவர்.
இந்தக் கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் விளையாட்டின் மூலம் மத்திய, மாநில அரசுத் துறைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியில் சேர்ந்துள்ளனர். இங்கு சர்வதேசத் தரத்தில் உள்விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கிராமத்துக்குப் பெருமை சேர்த்துள்ள பதினேழு வயதான அபினேஷிடம் பேசியபோது:
'விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் தனலட்சுமி எனது பெற்றோர். 2008- ஆம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகளாக நானும் சகோதரி அபிநகாவும் பிறந்தோம் . அஜிதா என்ற இளைய சகோதரி உள்ளார். எனது ஐந்தாம் வயதில் எனது தந்தை விபத்தில் உயிரிழந்தார். தாயார் கண்காணிப்பில் வளர்ந்தோம். அப்பரசம்பேட்டை அரசுப் பள்ளியில் சத்துணவு சமையலராக எனது தாய்க்கு வேலை கிடைத்தது. சென்னை வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதாரம் பயின்று வருகிறேன்.
1 முதல் 5ஆம் வகுப்பு வரை எங்கள் ஊர் அரசு தொடக்கப் பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பு படிக்கும்போது, கபடி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
ஆறாம் வகுப்பு வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது, ஏ. எம்.சி.ஆசைத்தம்பி நினைவு கபடிக் கழக விளையாட்டு அணியிலும் சேர்ந்து விளையாடி வந்தேன். வடுவூரைச் சேர்ந்த மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகச் செயலர் ராஜ.ராஜேந்திரனின் வழிகாட்டுதலின்படி, தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட அல்லிநகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தேன். அங்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கபடி விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டு கபடிப் பயிற்சியும் பெற்று வந்தேன். எனக்குப் பயிற்சியாளர் ரமேஷ் கண்ணா பயிற்சியை அளித்தார்.
பள்ளியில் படிக்கும்போதே தேசிய, மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தேனி மாவட்ட அணி சார்பில் பங்கேற்று, பரிசுகளைப் பெற்றுள்ளேன். போட்டிகளில் தடுப்பு ஆட்டக்காரன் என்ற அடையாளத்துடன் நான் களம் இறக்கப்பட்டு வருகிறேன்.
பஹ்ரைனில் நடைபெறும் ஆசிய அளவிலான இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு முதல் 18 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் முதல் முறையாக கபடிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கான தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து நானும் திருச்சியைச் சேர்ந்த தயாநிதி மாறனும் கலந்துகொண்டோம். 14 பேர் தேர்வாக, தமிழ்நாட்டில் நான் மட்டும் தேர்வானேன்.
பின்னர், நாங்கள் ஹரியானா மாநிலத்துக்கு உள்பட்ட சோனேபட்டு என்ற இடத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் சிறப்பு கபடி விளையாட்டு விடுதியில் ஒரு மாதம் பயிற்சி பெற்றோம். ஆகஸ்ட் 19 முதல் 23 ஆம் தேதி வரை கபடிப் போட்டி நடைபெற்றது. மகளிர் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்று இந்திய அணி அதிக புள்ளியில் 7521 என ஈரானை வீழ்த்தியிருந்தது. எங்களது ஆடவர் அணியுடனும் ஈரான் அணி மோதியது. எங்களின் திறமையான ஆட்டத்தால் 35 32 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தி, இந்திய அணி தங்கம் வென்றது. ஆடவர், மகளிர் கபடியில் இந்தியா அணி முதலிடம் பெற எங்கள் பயிற்சியாளர்கள் சீனிவாச ரெட்டி, தீபக் கூடா ஆகியோரின் பங்கு அளப்பரியது.
தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பி, நானும் மகளிர் பிரிவில் இடம் பெற்ற சென்னை கண்ணகி நகர் வீராங்கனை கார்த்திகா ரமேஷும் சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற வரவேற்பு மறக்க முடியாத நிகழ்வு. பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
வடுவூர் விளையாட்டு அகாதெமியினர், ஆசைத்தம்பி நினைவு கபடிக் குழுவினர் இணைந்து என்னை வரவேற்றது மகிழ்ச்சியை அளித்தது. 'பைசன்' திரைப்படத்தில் கபடிப் போட்டியில் சாதனைகளைப் படைக்கும் பைக் என்ற கதாபாத்தித்தில் நடித்த துருவ் விக்ரம் வடுவூருக்கு நேரில் வந்து என்னைப் பாராட்டிச் சென்றார். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான அர்ஜுனா விருதை வெல்வதே எனது லட்சியம்!'' என்கிறார் அபினேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.