ஏ.சி. திருலோகசந்தர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 33

ஏ.சி. திருலோகசந்தர் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
ஏ.சி. திருலோகசந்தர்
ஏ.சி. திருலோகசந்தர்
Published on
Updated on
2 min read

ஆற்காட்டில் செங்கல்வராயன் முதலியாருக்கும் நாகபூஷணம் அம்மாளுக்கும் 1930, ஜூன் 11-இல் பிறந்தவர், ஏ.சி. திருலோகசந்தர். முதுகலைப் படிப்பு படித்த நிலையில், திரைப்பட ஆர்வத்தில் ஆரம்பக் காலத்துத் திரைப்படத் தயாரிப்பாளர் பத்மநாபன் தயாரிப்பில், எம்.ஜி.ஆர். நடித்த 'குமாரி' படத்தில் உதவியாளரானார். பின்னர், 'விஜயபுரி வீரன்' கதையை எழுதியதோடு, உதவி இயக்குநராகப் பணிபுரிந்து , ஏவி.எம். தயாரிப்பில், பீம்சிங் இயக்கத்தில் 'பார்த்தால் பசி தீரும்' படத்துக்கு கதை எழுதினார். அதன்பின்னர் ஏவி.எம்.மின் நம்பிக்கைக்குரியவராகி, 'வீரத்திருமகன்', 'காக்கும் கரங்கள்', 'நானும் ஒரு பெண்' என்று தொடர்ச்சியாகப் படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர். நடித்து இதுவரை முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படமாகப் பேசப்படும் 'அன்பே வா' படத்தை இயக்கி, திரை உலகில் ராஜ முத்திரையைப் பதித்தார். பாலாஜி தயாரித்த 'தங்கை' படத்தில் சிவாஜி நடிக்க, முதன் முதலாக அவரை இயக்கி, அவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பெயர் சொல்லும் விதமாக சிவாஜி நடித்த அதிகப் படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் இயக்கி சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த 'தெய்வமகன்' படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

1972-இல் மேஜர், சிவகுமார் நடித்த என் நாடகமான 'சொந்தம்' பார்க்க வந்த ஏ.சி.திருலோகசந்தர், தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் என்னை வசனகர்த்தாவாக அறிமுகம் செய்தார். இதன் மூலம் எனக்கு வாழ்வளித்தார். ஒரு கதை எப்படி திரைக்கதையாக வேண்டும் என்று சொல்லித் தந்த ஆசிரியர் ஆனார்.

தொடர்ந்து எனக்குப் படங்கள் தந்து பெருமைப்படுத்தினார். எந்த நிலையிலும் பதற்றப்படாத ஒரு பண்பட்ட இயக்குநர். படப்பிடிப்பு இடைவேளையில் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட ஏ.சி. அறையில் என்னைச் சாப்பிடக் கூட்டிச் செல்வார்.

காரைக்குடி நாராயணன்.
காரைக்குடி நாராயணன்.

சில படங்களில் சிவாஜியும் எங்களுடன் வந்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பார். என்னையும் அந்த அறையில் டர்க்கி டவலை கீழே விரித்துப்படுக்கச் சொல்லுவார்கள். பத்தாவது நொடியில் இருவரும் விடும் குறட்டை சாரதா ஸ்டூடியோ எங்கும் எதிரொலிக்கும். ஒரு மணி நேரத்தில் எழுந்ததும், 'நல்லாத் தூங்கினியா?' என்று என்னைக் கேட்பார்கள். அவர்கள் விட்ட குறட்டையை நான் சொல்ல முடியுமா?

எந்தக் கதை என்றாலும் அதை எழுதி முடிக்க பெங்களூரு, உதகை, மாமல்லபுரம் என்று நான் திருலோகசந்தருடன் எத்தனையோ நாள்கள் அவர் காரில் பயணித்ததுண்டு. அவருடன் நான் பணிபுரிந்த படங்களில் ஐந்து மொழிகளிலும் வெற்றி அடைந்த 'தீர்க்க சுமங்கலி' என் எழுத்தின் மணிமகுடம். இந்தப் படத்தைப் பார்த்து விட்டு 150 படங்களுக்கு மேல் எழுதிய ஏ.எல். நாராயணன் என்னைக் கூப்பிட்டு, கட்டியணைத்து நெற்றியில் முத்தம் தந்து, ''டேய் கண்ணா... இந்தத் தமிழ் சினிமாவுக்கு மூணு நாராயணன்தாண்டா... ஒன்று உடுமலை நாராயணன், இரண்டு ஏ.எல். நாராயணன், மூன்று காரைக்குடி நாராயணன்'' என்று பாராட்டியது என்னால் மறக்க முடியாதது.

ஏ.சி. திருலோகசந்தர் தனது உதவியாளர்களை மிகவும் பெருமையாக நடத்துவார். அவருக்கு துணை இயக்குநராக இருந்த ராஜேந்திரனை 'ராஜேந்திர அண்ணன்' என்பார். இவருடைய உதவி இயக்குநராக இருந்த பிரபல இயக்குநர் எஸ். பி. முத்துராமனை 'எஸ். முத்து' என்பார்.

நான் இயக்குநர், தயாரிப்பாளரானதும் என் படத் துவக்க விழாவில் ஏவி.எம். சரவணனுடன் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். ஏவி.எம். சரவணன், ஏ.சி. திருலோகசந்தரின் கடைசி நாள்களில் அவருடன் பேசுவதற்கு மட்டும் ஒரு மொபைலில் நம்பர் வைத்திருந்தார்.

அவர் மனைவி பாரதி இறந்தபோது துக்கம் விசாரிக்க பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வீட்டுக்குப் போனேன். ''இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது என்னைப் பார்க்க வந்தீர்களே'' என்றார். ''தீர்க்க சுமங்கலியில் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இறந்தது போலவே நானும் இறந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் விரக்தியாகப் பேசினார்.

இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர், பிரேம் திருலோக் என்ற மகன்களும் இருந்த நிலையில், பிரேம் திருலோக் அமெரிக்காவில் இறந்த வேதனையில் 2016, ஜூன் 15-இல் அவரது 86-ஆவது வயதில் தனிமைத் துயரில் காலமானார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com