'கன்னட புஸ்தக சந்தே' என்ற பெயரில் கன்னடப் புத்தகச் சந்தை பெங்களூரில் அண்மையில் நடைபெற்றது. பெங்களூருவாசியான எழுத்தாளர் என். சொக்கன் அந்தப் புத்தகச் சந்தைக்குச் சென்றிருந்தார். வழக்கமாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு பெங்களூரிலிருந்து சென்னை வரும் அவரிடம், 'கன்னட புஸ்தக சந்தே' எந்த வகையில் சென்னைப் புத்தகக் கண்காட்சியிலிருந்து மாறுபட்டது? என்று கேட்டபோது, அவர் கூறியது:
''நல்ல கூட்டம். எல்லா வயதினரையும் பார்க்க முடிந்தது. பலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 90% கன்னடப் புத்தகங்கள்தான். ஆங்காங்கு சில ஆங்கிலப் புத்தகங்கள் தென்பட்டன. அவை பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகங்களாக இருந்தன.
சென்னைப் புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிடும்போது அரங்குகள் சற்றுச் சிறியவை. ஆனால், நடக்கும் வழி மிக மிகக் குறுகலாக இருந்தது. எனவே, வசதியாகச் சென்று வர இயலவில்லை. ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொண்டும்தான் நடக்க வேண்டியிருந்தது. இந்தத் தொந்தரவுகளுக்கு நடுவிலும், அரங்குகளில் நல்ல கூட்டம் இருந்தது. விற்பனையும் நன்றாக இருந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதுபோல் இரண்டில் ஒருவர் கையில் மூன்று, நான்கு புத்தகங்களைக் கொண்ட ஒரு பை தென்பட்டது.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெரிய பதிப்பகங்களுடைய அரங்குகள் மிகப் பெரிதாகவும், மற்ற அரங்குகள் மிகச் சிறிதாகவும் இருக்கும். இங்கு எல்லா அரங்கு
களும் ஒரே அளவுதான். சிலர் அருகருகில் இரண்டு அல்லது மூன்று அரங்குகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், யாரும் பெரிய ஆதிக்கம் செலுத்தியதுபோல் தெரியவில்லை. அதே போல் சில புத்தகங்களே எல்லா அரங்குகளிலும் தென்படுகிற சூழலும் இல்லை. பல்வேறு பதிப்பகங்கள், எழுத்தாளர்களின் நூல்களைப் பரவலாகப் பார்க்க முடிந்தது.
கண்காட்சியின் தொடக்கத்தில் குவேம்பு உள்ளிட்ட பல கன்னட எழுத்தாளர்களுடைய ஆளுயரக்கட்-அவுட்டுகளை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தார்கள். சிலர் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களுடைய கட்- அவுட்டுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள். இந்த ஏற்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெங்களூரில் கன்னடம் அல்லாத மொழிகளைப் பேசுவோர் மிகுதியாக உள்ளதால், கன்னடம் கற்பிக்கும் நூல்கள், சுவரொட்டிகள், குறிப்பேடுகள் நிறைய விற்றுக்கொண்டிருந்தன. கன்னடர்கள் வீடுகளில்கூட, அடுத்த தலைமுறையினருக்கு அம்மொழியைக் கற்பிக்க இது உதவியாக இருக்கும். இது (நவம்பர்) கர்நாடக மாநிலம் தோன்றிய மாதம் என்பதால், மக்கள் மாநிலத்தின் கொடி போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
புத்தக அரங்குகளுக்கு நடுவில் இரண்டு மேடைகள் அமைத்து ஒரே நேரத்தில் இரண்டு கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. மக்கள் ஆர்வத்தோடு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ட்ரோன் வைத்து அவற்றை ஒளிப்பதிவு செய்வதையும் பார்க்க முடிந்தது. பதிப்பகங்களின் அரங்குகள் முடிந்ததும் ஆடைகள்,
கைவினைப் பொருள்களின் கடைகள். அதன்பிறகு, வழக்கம்போல் அப்பளம், பஜ்ஜி, சான்ட்விச், பிட்சா, தோசைக்கடைகள். அவற்றையும் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வரவேண்டும்.
இந்தப் புத்தகத் திருவிழாவில் என்னை ஈர்த்த ஒரு விஷயம்... ஒரு பதிப்பகத்தின் அரங்கில் ஜாடி ஒன்றை வைத்து அதற்குள் சாக்லெட்டுகளைப் போட்டு வைத்திருந்தார்கள். இலவசம்தான். அந்தக் கடைக்குள் மக்கள் நுழைந்ததும் ஆளுக்கு ஓரிரு சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியேறியது வியப்பில்லை. அப்படி நுழைந்து வெளியேறியவர்கள் மறந்தும் அங்கிருந்த புத்தகங்களை ஓரக் கண்ணாலும் பார்க்கவில்லை. அது என்னை வியக்கவைத்தது.
அடுத்த மாதம் பெங்களூரில் ஒரு தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழர்கள் அதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார் சொக்கன்.
-எஸ். சந்திர மெளலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.