தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...

ஏழு பெண்களை வளர்த்து, அவர்களைப் படிக்க வைத்து தன்னிறைவு பெற்ற மகள்களாக மாற்றியுள்ளார் கமல் சிங்.
தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...
Published on
Updated on
2 min read

ஏழு பெண்களை வளர்த்து, அவர்களைப் படிக்க வைத்து தன்னிறைவு பெற்ற மகள்களாக மாற்றியுள்ளார் கமல் சிங். அவரது ஏழு பெண்களும் காவல்துறையில் பல பிரிவுகளில் பணிபுரிவது சிறப்பு. இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பெற்றோரை மட்டுமல்ல; பீகார் மாநிலத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். தந்தையின் கனவை நனவாக்கிய மகள்களுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

பீகாரில் 'சாப்ரா' என்ற ஊரில் உள்ள ஒரு சிறிய மாவு ஆலை உரிமையாளர்தான் கமல் சிங். அவருக்கு ஒன்பது குழந்தைகள். அதில் ஒரு குழந்தை காலமானது. எஞ்சியிருக்கும் எட்டுப் பேரில் ஏழு பேர் மகள்கள், ஒரு மகன். கமல் சிங் சொல்வது:

''எட்டுக் குழந்தைகளை வளர்ப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஏழு மகள்களுக்கு தந்தையாக இருந்ததற்காக என்னை ஊரே கேலி செய்தது. ஆரம்ப நாள்களில், 'எப்படி ஏழு மகள்களுக்குத் திருமணம் செய்து வைப்பாய்? பணத்திற்கு எங்கே போவாய்? பெண் குழந்தைகளால் குடும்பத்திற்குச் செலவுதான். பெண் குழந்தைகளால் குடும்பத்துக்குப் பங்களிக்க முடியாது' என்று துக்கம்போல விசாரிப்பார்கள். எனக்கு மனம் பாரமாகும். ஆனால் எனது மன வருத்தத்தை மனைவி மகள்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.

என்னால் முடிந்தவரை மகள்களை விலைமதிப்பற்ற ரத்தினங்களாக மாற்ற வேண்டும் என்று தீர்மானித்தேன். அதைக் கல்வியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று முடிவெடுத்தேன்.

எனது திட்டத்தின் செயல்பாடுகளின் தினசரி அட்டவணையின் ஒரு பகுதியாக, அதிகாலை 4 மணிக்கு மகள்களை எழுப்பி ஓடச் சொல்வேன். கடுமையான உடல் பயிற்சிக்குப் பிறகு, பாடப் புத்தகங்களைப் படிக்கச் சொல்வேன். ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி வரை படிக்க வைப்பேன். கூடவே போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெறச் செய்தேன். சுருக்கமாகச் சொன்னால், எனது ஒவ்வொரு நாளும் மகள்களுடன் விடிந்து, அவர்களுக்கான பகல்நேர வேலைத் திட்டங்களுடனேயே கழியும். மெல்ல மெல்ல எனது முயற்சிகள் பலன் அளித்தன. அடுத்தடுத்து மகள்களுக்கு காவல்துறையில் பல பிரிவுகளில் வேலை கிடைத்தது. ஒரு காலத்தில் என்னைக் கேலி செய்தவர்கள், ஏளனமாகப் பார்த்தவர்கள் இப்போது என்னையும், எனது மனைவி, மகள்களையும் பாராட்டுகிறார்கள்.

திருமணமாகி தங்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், மகள்கள் சேர்ந்து ஊரின் முக்கிய இடத்தில் எனக்காகப் பெரிய வீடு கட்டிக் கொடுத்துள்ளார்கள். 'இந்த வீடு எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம். இந்த வீடு எங்களுக்காக நீங்கள் உழைத்த உழைப்பிற்கு ஓய்வூதியம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். நான் நெகிழ்ந்து போனேன்.

இன்று நிலைமை மாறிவிட்ட சூழலில், உழைக்கத் தேவை இல்லை என்றாலும், நான் எனது மாவு ஆலையைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஏழு மகள்களைப் பெற்றவனுக்கு யார் கடன் தருவார்கள். மாவு ஆலையிலிருந்து நான் சம்பாதித்த பணத்தில் மட்டுமே என் மகள்களைப் படிக்க வைத்தேன். நான் அதை எப்படி மூடிவிட்டு சும்மா இருப்பேன்.

மகள்கள் மீதான கவனம் எனது ஒரே மகன் ராஜீவ் சிங் ராஜ்புத்தின் கல்வியைப் பாதிக்கவில்லை. பி. டெக் வரை படிக்க வைத்தேன். தில்லியில் குடியேறிய ராஜீவுக்கு எந்தக் குறையும் நான் வைக்கவில்லை. எனது மகள்கள் வேலை காரணமாக பல இடங்களில் பணிபுரிந்தாலும் ஹோலி பண்டிகை நெருங்கும் போது எனது வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம்.

இன்றைக்கு எல்லா வசதிகளுடன் வாழ்ந்தாலும், நாங்கள் உணவுக்காகப் போராடிய அன்றைய நாள்களை எங்களால் மறக்க முடியாது. எங்கள் வாழ்க்கையில் சாபங்களாக மற்றவர்கள் கருதியதை எனது மகள்கள் நிவர்த்தி செய்துவிட்டு சந்தோஷங்களை வாழ்க்கையில் நிறைத்துவிட்டார்கள். மகள்கள் ஒரு வரம்'' என்கிறார் உணர்ச்சிப் பொங்க கமல் சிங்.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com