கபடி... கபடி... கபடி...

என்னிடம் பயிற்சி பெற்றோர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வருகின்றனர் - வெங்கடேஷ்
கபடி... கபடி... கபடி...
Published on
Updated on
2 min read

''சிறு வயதிலேயே கபடி மீது காதல். அப்போது முறையான பயிற்சி கிடைக்காததால், நான் சிரமப்பட்டேன். கபடியை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆர்வமுள்ளோருக்குப் பயிற்சியளித்து வருகிறேன். தேசிய அளவில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம்!'' என்கிறார் முப்பத்து ஐந்து வயதான வெங்கடேஷ்.

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன் - ராணி தம்பதியின் மகனான இவர், தனது தாத்தா பொன்னுசாமி - பாட்டி ராஜாத்தி பராமரிப்பில் வளர்ந்தவர்.

இவர் அரசுப் பள்ளிகளில் படித்தவர். பின்னர், அவர் நாமக்கல் செல்வம் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை உடற்கல்வி ஆசிரியர் பட்டமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை உடற்கல்வி ஆசிரியர் பட்டமும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உள்பட்ட ஒளரங்காபாத் தேசிய விளையாட்டுப் பயிற்சி மையத்தில் கபடிப் பயிற்றுநருக்கான என்.ஐ.எஸ். சான்றிதழையும் பெற்றார்.

அவரிடம் பேசியபோது:

''எனக்குச் சிறுவயது முதலே கபடி விளையாட ஆர்வம். முறையான பயிற்சி பெற வழியில்லாததால், கபடிப் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்றும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போட்டிகளைக் கண்டும் எனக்கு நானே பயிற்சியைப் பெற்றேன்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் எனது பெற்றோருடன் நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட திம்மநாயக்கன்பட்டி அருகே வேப்பிலைக்குட்டை குக்கிராமத்துக்குச் சென்றேன். அங்கு எனது உறவினர் கணபதியுடன் இணைந்து தினமும் அதிகாலை நேரத்தில் 5 கி.மீ. தொலைவில் உள்ள திம்மநாயக்கன்பட்டிக்கு சைக்கிளில் சென்று, அங்கிருந்து சேலத்துக்குப் பேருந்தில் சென்று, பயிற்சியாளர் ராஜியிடம் முறையான பயிற்சி பெற்றேன். அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த கபடிப் பயிற்சியாளர் அர்ஜுனனிடம் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

தமிழ்நாடு காவல் துறையின் சேலம், கோவை அணிகளுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று, 2011-இல் தமிழ்நாடு ஜூனியர் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றுத் தந்தேன்.

பின்னர், மத்திய அரசின் வருமான வரித்துறை அணிக்காகவும் விளையாடினேன்.

2014-இல் சேலம் மாவட்ட அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று, 2015, 2016, 2017-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற பங்காற்றினேன்.

2018- இல் பீச் கபடிப் போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்தேன். சென்னை சேலஞ்சர்ஸ் அணி சார்பில் இன்டோ இன்டர்நேஷனல் பிரிமியர் கபடி லீக் போட்டியில் விளையாடினேன்.

எனது சொந்த கிராமமான அத்தனூர்பட்டியில் வி.பி.கே.சி. கபடிப் பயிற்சி அகாதெமியை ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டில் ஆர்வமுள்ளோருக்கு முறையான பயிற்சியை அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்றோர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

ஹரியாணாவில் விரைவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான 35-ஆவது இளையோர் கபடிப் போட்டியில் விளையாடும் தமிழ்நாடு அணி வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமை நடத்த வி.பி.கே.சி. கபடிப் பயிற்சி மையத்துக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேஷன் வாய்ப்பை வழங்கியுள்ளது.

பயிற்சி பெற்ற 24 மாணவர்களில் 14 மாணவர்கள் தமிழக அணிக்காக விளையாடும் அணியில் இடம் பிடித்துள்ளனர். எனது பணிகளுக்கு மனைவி சினேகாவும் உடனிருந்து உதவுகிறார்'' என்கிறார் வெங்கடேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com