''தமிழர்களின் பாரம்பரியமான கலைகளில் ஒன்றான சிலம்பம் மீது எனக்கு ஆர்வம் அதிகம். சிலம்பத்தில் சாதனைகளைப் படைக்க வேண்டும். மாணவ- மாணவியர்களும், இளையத் தலைமுறையினரும் சிலம்பம் போன்ற தமிழர்களின் கலைகளைக் கற்க வேண்டும்'' என்கிறார் சிலம்பக் கலையில் தேசிய அளவில் சாதனைகளைப் படைத்துவரும் ஏழாம் வகுப்பு மாணவி விஷ்ணுதுர்கா.
சென்னை அடையாறு பாலவித்யா மந்திர் சீனியர் செகன்டரி பள்ளியில் படித்து வரும் விஷ்ணுதுர்காவின் சாதனைகள் குறித்து, அவரது பெற்றோர் மருத்துவர்களான செந்தில் குமார், ஞான கல்யாணி ஆகியோர் கூறியது:
''எங்கள் மகள் விஷ்ணுதுர்காவின் சிலம்பப் பயணம் 2021-ஆம் ஆண்டு பள்ளியின் கோடை முகாமில் தொடங்கியது. அவர் மூன்றாம் வகுப்பு மாணவியாக இருந்தபோதே இந்தக் கலையின் மீது ஏற்பட்ட தன்னிச்சையான ஆர்வம் படிப்படியாக ஆழ்ந்த பற்றுதலாக மாறியது. கோடை முகாமுக்குப் பிறகும் பள்ளியின் நடைபெறும் சிலம்ப வகுப்புகளில் தொடர்ந்து பயிற்சியை மேம்படுத்திக் கொண்டார்.
விஷ்ணுதுர்காவின் தொடர்ச்சியான ஈடுபாடு, திறமையை கவனித்த பயிற்சியாளர் பகவதி சந்திரசேகரன் தனிப்பட்ட வழிகாட்டுதலுடன் சிறப்புப் பயிற்சிகளையும் அளித்தார். அதன்விளைவாக, சென்னையில் நடைபெற்ற மாநகர அளவிலான போட்டிகளில் கம்பு சுற்றுதல், சுருள் வாள் பிரிவுகளில் முதல் பரிசுகளை வென்றுள்ளார். மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பிடங்களைப் பெற்றுவந்தார்.
இந்தியா யூத் கேம்ஸ் கவுன்சில் சார்பில் கோவாவில் அண்மையில் நடைபெற்ற 4-ஆவது இளைஞர் தேசிய சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், ஜூனியர் பிரிவில் சிலம்பம் கம்பு சுற்றுதல் சுருள் வாள் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
விஷ்ணுதுர்காவின் சிலம்பப் பயிற்சியால் கல்வி பாதிக்காமல் நல்ல வழிகாட்டுதலை பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகி- காமடோர் விஜேஷ் குமார், பள்ளி முதல்வர் டாப்னி ரோஜர்ஸ் உள்ளிட்டோர் அளித்து வருகிறார்கள்'' என்கின்றனர்.
- தாம்பரம் மனோபாரதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.