

இயற்கைக் காட்சிகள், மனிதர்களின் இயல்பு வடிவங்கள், பிரபலங்களின் உருவப் படங்களை பென்சில் ஓவியங்களாக அச்சு அசலாக வரைந்து அசத்தி வருகிறார், அரசுப் பள்ளி மாணவர் அர்பான் தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளையை அடுத்த தோட்டம் நகரைச் சேர்ந்த மீன் விற்பனை முகவர் அன்வர்தீன், இல்லத்தரசி அஜீஷா பீவி தம்பதியின் மகன் அர்பான் தினார். இவர் கைப்பேசியில் உருவங்களைப் பார்த்து, அதனை அப்படியே அழகாக வரைந்து வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது:
''நான் மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். ஏற்கெனவே களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தபோது, பறவைகள், இயற்கைக் காட்சிகளை வரைந்து பள்ளிக்கு எடுத்துச் செல்வேன். சக மாணவர்கள் பாராட்டினர். ஆசிரியை எஸ்.கே. லேகா அளித்த ஊக்கமே என்னை மேலும் வரையத் தூண்டியது.
பிரபலங்களின் உருவங்களை வரையும் முயற்சியில் ஓராண்டாக ஈடுபட்டுள்ளேன். முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், மு. கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோரின் உருவப் படங்களை பென்சில் ஓவியங்களாக வரைந்துள்ளேன். ஒரு முக ஓவியம் வரைய அரை மணி நேரம் வரை ஆகிறது.
தற்போது படித்து வரும் மேக்கோடு அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ், ஆசிரியை அபிதா பிளஸ்ஸி உள்ளிட்டோர் எனது ஓவியத் திறனுக்கு உற்சாகம் அளித்துவருகின்றனர். எதிர்காலத்தில், ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரை ஓவியமாகத் தீட்டும் முயற்சியில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. தலைகீழாக ஓவியம் வரைவது குறித்து கேள்விப்பட்டுள்ளேன். அந்த முயற்சியிலும் ஈடுபடும் எண்ணம் உள்ளது'' என்கிறார் அர்பான் தினார்.
மாணவரின் தாயார் அஜீஷா பிவீ கூறியபோது:
''அர்பான் தினாருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம் இருந்து வருகிறது. விடுமுறை நாள்களில் வீட்டில் இருக்கும்போதும் சரி, உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போதும் சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் காலண்டர்கள், அழகுப் பொருள்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். அதைத் தொடர்ந்து இயற்கைக் காட்சிகள், வன விலங்குகளை தத்ரூபமாக வரைகிறான்.
அண்மைக்காலமாக உறவினர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்களின் உருவப் படங்களை வரைந்து வருகிறான். ஓவியம் வரைய எந்தவிதமான பயிற்சியையும் மேற்கொண்டதில்லை. நடனத்திலும் இவர் சிறந்து விளங்குகிறார்'' என்கிறார் தாயார் அஜீஷா பீவி.
- சி. சுரேஷ்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.