ஆயிரம் வாசகர்கள் ஆயிரம் நூல்களை வாசிக்கும் 'வாசிப்பு மாரத்தான்' என்ற சிறப்பு நிகழ்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு வாசகர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்ததோடு, சமூக ஊடகங்களிலும் வைரலானது.
இதுகுறித்து திருச்சி வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பாலாஜியிடம் பேசியபோது:
''நூல்களையே நம்பிக் கொண்டு அறிவின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் மாணவர்கள், பொதுமக்கள் எங்கள் வாசகர் வட்டத்தின் மூலமாக வெளியுலகுக்கு வந்துள்ளனர். விடியற்காலை சூரிய ஒளியைப் போன்று, அறிவு வெளிச்சத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அதனால் இணைய வழியாகவும், நேரடியாகவும் நாங்கள் நடத்தும் கலந்துரையாடல்கள் புத்தக உலகின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைத்துக் கொள்கிறோம்.
சமூகத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களான அறிவு, விழிப்புணர்வு, ஒற்றுமை ஆகிய மூன்றையும் ஒரே நோக்கிலும், ஒரே நேரத்திலும் மனித வாழ்வில் கொடுக்கக் கூடிய தளமாக வாசகர் வட்டம் வளர்ந்துள்ளது.
'வாசிப்பு மாரத்தான்' நிகழ்வின், முதல் நாளில் 'வாசகர் நாள்' என 1000 வாசகர்கள்-1000நூல்கள் வாசிப்பு மாரத்தானுக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. பின்னர், அவர்கள் வாசிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் 'பெற்றோர் நாள்' என்ற தலைப்பில், உறவுகளை வலுப்படுத்தவும், பெற்றோரை இளம்தலைமுறையினர் பாதுகாப்பது குறித்த நிகழ்ச்சியும் நடைபெற்றன.
மூன்றாம் நாளில் 'சிறார் நாள்' என சிறார்களின் சமூக எதிர்காலம், கல்வி, விளையாட்டு சார்ந்த பொழுதுபோக்கு, கைப்பேசிகளின் ஆக்கிரமிப்பால் மூளை சார்ந்த விஷயங்களின் பாதிப்பு போன்ற கருத்துகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதவிர, குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஓவியப் போட்டி, கண்காட்சி, வரலாற்றில் தடம் பதித்தவர்களை நினைவுபடுத்தும் மாறுவேடப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
நான்காம் நாளில் 'மூத்தோர் நாள்' என முதியோரைப் போற்றினோம். இதோடு, உடல் எடை, இலவச மருத்துவ முகாம், எலும்பு மூட்டு அடர்த்தி பரிசோதனை ஆகியன நடத்தப்பட்டன.
இதுபோல, 'மகளிர் நாள்', 'இளையோர் நாள்', 'சிறப்பு மனிதர் நாள்' என மாறுபட்ட விதத்தில் இணைந்து நடத்தினோம். இந்த வகையிலான தலைப்புகள், நாள்கள் வெறுமனே நினைவு நாள்கள் அல்ல; மாறாக, சமூகத்தை நேரடியாகச் சந்திப்பதற்கும், அவர்களின் தேவைகளை உணரவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், தேவையான திறன்களை வளர்க்கவும் உருவாக்கப்பட்ட நாள்கள். இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, வாசகர் வட்டத்தின் சார்பில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்வதற்கு எங்களைக் கேட்டு இருக்கின்றனர். இது மக்களுக்கு புதிய அனுபவத்தையும், ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. நிகழ்ச்சிக்கு உறுதுணையாக மாவட்ட நூலக அலுவலர் ஆர்.சரவணக்குமார், முதல் நிலை நூலகர் எஸ்.தனலெட்சுமி உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர்'' என்கிறார் அல்லிராணி பாலாஜி.
-பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.