உலகில் வாகனத்துக்காக ஒரு கோயில் கட்டப்பட்டது என்றால், அது இந்தியாவில்தான். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் பாலி நகருக்கு அருகேயுள்ள சோட்டிலா கிராமத்தில்தான் 'ராயல் என்
ஃபீல்ட் புல்லட்'டை கடவுளாக வழிபடும் கோயில் உள்ளது. கிராம மக்களின் இறைசார் நம்பிக்கையால் அமைந்துள்ள இந்த கோயிலை 'ஓம் பன்னா தாம்', 'புல்லட் பாபா கோயில்' என்றெல்லாம் அழைக்கின்றனர். இங்கு புல்லட்டுக்கு வழிபாடு நடைபெறுகிறது.
1988 ஆம் ஆண்டில் ஓம்சிங் ரத்தோட் என்பவர் புல்லட்டில் சென்றபோது, சாலை விபத்தில் இறந்து விட்டார். விசாரணைக்காக புல்லட்டை போலீஸார் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். சம்பவம் நடைபெற்ற இரண்டாவது நாளில், புல்லட் காணாமல் போனது. காவல் துறையினர் புல்லட்டை தேடியபோது, அது ஓம்சிங் இறந்த இடத்தில் நின்றதைக் கண்டறிந்தனர்.
பின்னர், மீண்டும் காவல் நிலையத்திற்கு புல்லட் கொண்டு செல்லப்பட்டது. மறுநாளும் புல்லட் காணாமல் போனது. அதை தேடியபோது, அது மீண்டும் ஓம்சிங் நினைவிடத்துக்கு வந்திருந்தது.
இது தொடர்கதையாக ஒருநாள் புல்லட்டை இரவில் போலீஸார் கண்காணித்தனர். புல்லட் தானாகவே கிளம்பி விபத்து நடந்த இடத்துக்குச் சென்றதை போலீஸார் கவனித்தனர். இந்த அமானுஷ்ய சம்பவத்தைப் பார்த்த காவல் துறையினர் புல்லட்டை ஓம் சிங் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு உள்ளூரில் பரவ, கிராம மக்கள் புல்லட்டுக்கு மலர் தூவி தீபம் ஏற்றி வழிபட ஆரம்பித்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே ஓம் சிங் ரத்தோரின் தந்தை தாக்கூர் ஜோக்சிங் ரத்தோரும் 'ஓம் பன்னா தாம்' கோயிலைக் கட்டினார்.
கோயிலுக்கு வருவோர் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை வணங்கி மலர் மாலைகளை அணிவித்து, தேங்காய், இனிப்புகள் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், தங்கள் பாதுகாப்புக்காகவும் கோயிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்து விட்டுச் செல்கின்றனர்.
புதிதாக வாகனங்களை வாங்குவோர் இங்கு வைத்து பூஜை செய்துவிட்டுச் செல்கின்றனர். தற்போது ஓம்சிங் ரத்தோரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 'பயணத்தை பாதுகாப்பானதாகவும், சிரமமில்லாததாகவும் புல்லட் பாபா மாற்றுவார்' என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.