ராமையா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சோர்வாக உட்கார்ந்திருந்தார். சோபாவில் ஒரு காலைத் தொங்கப் போட்டு, இன்னொரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், ஏதோ பெரும் சோகம் அவரை அழுத்துவது போலிருந்தது. அவர் மனைவி, 'என்னாச்சு, என்ன சோகம்?'' என்று கேட்டாள். அறுபது வயதைக் கடந்தவர். பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் செய்து பேரன், பேத்தி எடுத்தாயிற்று!
இப்போது ஏன் குடிமுழுகிப் போகிற மாதிரி சோகமாக இருக்கிறார் என்பதுதான் கனகத்துக்குப் புரியவில்லை. அடுக்களையைப் பார்த்தார். உலை கொதிக்கிறது. அடுப்பும், சமையல் செய்யும் சாமான்களும் கரிப்பிடிக்காமல் சுத்தமாக இருக்கின்றன. அதெல்லாம் அவளின் கைவண்ணம் என்று ராமையா யோசனையில் ஆழ்ந்தார்.
வீட்டின் அறை, நடை சுவர் எல்லாம் சுத்தமாக வைத்திருக்கிறாள் கனகம். கனகத்துக்கும் ஐம்பத்தைந்து வயதாகிறது. பிள்ளைகள் ரொம்ப தொலைவில் இருக்கிறார்கள். பிள்ளைகளோடு இருக்க வேண்டும் என்பதுதான் ராமையாவின் விருப்பம். பேரப் பிள்ளைகள் மீது ரொம்பப் பாசமுள்ளவர். அவர்களை விட்டுவிட்டு தனியாக இருப்பதற்கு கனகம்தான் காரணம். பேரப் பிள்ளைகளோடு இருக்கலாம் என்று சொல்வார். மதிக்காத மருமகள்களோடு வாழ்வதைவிட தனியாகவே வாழலாம் என்பாள். பிள்ளைகளாவது சொல்பேச்சைக் கேட்க வேண்டும் என்பாள். அதுவும் இல்லை. பிறகு எதற்கு அவர்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் கனகத்தின் நினைப்பு. அவள் சொல்வதும் சரியாக இருக்கிறது என்று ராமையா நினைப்பார்.
ராமையாவுக்கு பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் மீது பாசம் இருந்தாலும், கனகத்தை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் அவர் வருத்தம். ராமையா ஒரு கட்சியில் இருந்தார். சின்ன வயதில் அவர் ஊர் ஊராய் சென்று கட்சி இடும் கட்டளைப்படி பணிகள் செய்தார். கட்சிக்காக ஓடி உழைத்தாலும், அதற்காக ஒரு கூலியை மட்டுமே வாங்கிக் கொள்வார். கட்சியை வைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. எளிய தொண்டனாகவே இருப்பதுதான் அவரின் விருப்பம். அவர் பேச்சும் செயலும் எளிய மக்களைக் கவர்ந்தன. அவரா? தங்கமானவர் என்று சனங்கள் பேசிக் கொண்டார்கள். எளிய மக்களின் தோழனாக இருந்ததில் பெருமகிழ்ச்சி கொண்டார்.
தன் தேகத்தைப் பார்த்தார். தொள தொளவென்று முழுக்கைச் சட்டை. அவர் உடம்புக்கு பொருந்தவில்லை. ஒரு காலத்தில் கனகச்சிதமாக சட்டையைத் தைத்துப் போட்டவர். சட்டை தும்பைப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று இருக்கும். கஞ்சிப்போட்டு தேய்த்த சட்டை, எப்போதும் விறைப்பாகவே இருக்கும். அவர் ஒரு கட்சியில் பிரமுகராக இருந்தாலும், வெள்ளைச் சட்டையைப் போலவே அவர் மனமும் இருக்கும். வீட்டைப் பார்த்தார். கனகம் அந்த நாளிலிருந்தே வீட்டை சுத்தமாக அழகாக வைத்துக்கொண்டிருக்கிறாள். பிள்ளைகளையும் சரியாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறாள். அவர் உழைப்பை கட்சி பயன்படுத்திக்கொண்டது. வீட்டிற்கென்று எதுவுமில்லாமல், அவருக்கும் எதுவுமில்லாமல் ஆகிவிட்டது.
சுவர் மூலையில் பல்லி சூள் கொட்டியது. ஏதோ சொல்வதாக நினைத்துக் கொண்டார். பூஜை அறையில் சத்தம் வரவும் திடுக்கிட்டுப் பார்த்தார். முன்தினம் படையலிட்ட இரண்டு வாழைப்பழங்களை எலி ஒன்று வாயில் கவ்விச் சென்றதைப் பார்த்ததும், தின்று பசியாறட்டும் என்று அதை ஒன்றும் செய்யவில்லை. அந்த எலி வாழைப்பழத்தைக் கவ்விச் சென்றதை கனகம் பார்த்து, 'என்ன மனுசன் நீங்க? வாழைப்பழத்தைக் கவ்விச் செல்வதைப் பார்த்துக்கினு சும்மா இருக்கீங்களே?'' என்றாள்.
'அதுக்குப்பசி, அதான் சும்மா விட்டுட்டேன்'' என்றார்.
'வாழைப்பழம் பரவாயில்லை. வெளக்கு நெறய எண்ணெயிருக்கு. திரியைத் தூக்கிப் போச்சுன்னா, எண்ணெய் தரையில சிந்தி வழுக்கி விழ வேண்டும்'' என்றாள்.
'அதுக்கு என்ன தெரியும்? நம்மதான் கவனமா இருக்கணும்'' என்றார்.
கனகம் சொல்வதிலும் நியாயம் இருப்பதாக நினைத்தார். ஆனாலும் அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
ராமையா உடுத்திய வெள்ளைச் சட்டை கரித்துணியாக அடுக்களையில் கிடந்தது. கனகம் அந்தச் சட்டையை அடுப்பு சமையல் மேடையை துடைப்பதற்தாகப் பயன்படுத்துகிறாள். சட்டை பழையதாக ஆகிவிட்டது. அவள் துடைப்பது ஒன்றும் தவறில்லை. ராமையாவுக்குத்தான் கவலையாக இருந்தது. வெள்ளை வெளேர் தும்பைப்பூ நிறத்தில் இருந்த சட்டை இப்படி கருமையேறி கரித்துணியாகிவிட்டதுதான் அவரது கவலைக்குக் காரணம்.
கனகம் அவரிடம், 'ஏன் கவலையாக இருக்கீங்க?'' என்று கேட்டாள். 'என் சட்டை கரியாக ஆகிவிட்டதே' என்று அவளிடம் சொல்லமுடியவில்லை. சொன்னால், ''இதுக்காகவா கவலைப்படுறீங்க?'' என்பாள். ஆனால் காலம் காலமாக உடுத்திய அவரின் வெள்ளைச் சட்டைக்குத்தான் எவ்வளவு மரியாதை இருந்தது.
ராமையா ஒரு கட்சியில் இருந்தார் அல்லவா? அதனால் அவருக்கொன்றும் பயனில்லை. எனினும், விசுவாசமாக இருந்தார். குடும்பம், பிள்ளைகளைத் தவிக்கவிட்டார். கனகம் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் கேட்கவில்லை. அதை அவர் பெரிய இழப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுக்களையில் அவர் உடுத்திய வெள்ளைச்சட்டை, கரியாக கிடப்பதைப் பார்த்து, கவலையடைந்தார்.
அவரின் கட்சித் தலைவர் கூட அவர் உடுத்தும் வெள்ளைச்சட்டையைப் பார்த்து, சிறு பொறாமை கொண்டதை அவர் உற்றுப் பார்க்கும் பார்வையில் ராமையா உணர்ந்திருந்தார். தலைவர் அவர். அவரையே ராமையாவின் சட்டை ஈர்த்திருக்கிறது எனில், அவர் சட்டை மட்டும் காரணமில்லை. அயனிங் செய்து உடுத்தும்போது, அவரின் உடலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்போது தலைவரே உற்றுப்பார்க்கும் பார்வையில் எடுப்பாக இருப்பார்.
அடுக்களையில் கரித்துணியாகக் கிடந்த சட்டையைப் பார்த்தார். தரை ஈரமாகிவிட்டது என்று அந்த கரித்துணியை காலால் மிதித்துத் துடைத்தாள். 'போயும் போயும் அவள் காலிலா அந்தச் சட்டை மிதிபடவேண்டும்' என்று வருத்தம் கொண்டார்.
'கனகம், காலில் என் சட்டை மிதிபடுகிறது'' என்றார் ராமையா.
'அது கரித்துணி இப்ப, அதுக்கு எதுக்குக் கவலைப்படறீங்க?'' என்றாள்.
'அந்தச்சட்டையை உடுத்திய காலத்தில் எனக்கு எவ்வளவு மரியாத கெடச்சுது தெரியுமா?'' என்றார்.
'அதெல்லாம் ஒரு காலம்'' என்றாள்.
அவர் இருக்கும் நிலையில் அந்த சட்டையை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இருந்தாலும், அவர் அந்தச் சட்டையை உடுத்திய காலத்தில் அவர் எவ்வளவு மதிப்பாகப் போற்றப்பட்டார். ஓர் அலுவலகத்துக்கோ, காவல் நிலையம், நீதிமன்றம் போகும்போது, அவரின் வெள்ளை வெளேர் சட்டைக்காகவே மதிப்பும் மரியாதையும் கொடுத்த காலம்தான் எத்தனை பசுமையானது. அதெல்லாம் அவர் மனதில் நிற்க ஒரு கனம் கலங்கவே செய்தார்.
கனகம் தன் உடை மீது கவனம் கொண்டாலும், ஒரு புடவையை ஒரு முறை, இரண்டு முறை உடுத்தியவுடன் அவளுக்கு அதன் மீதான விருப்பம் போய்விடுகிறது. உடுத்திய புடவையை கூடத்தின் ஒரு மூலையில் உள்ள பிளாஸ்டிக் வாளியில் போட்டுவிடுவாள். ஒருவாரம், இரண்டு வாரம் ஆனவுடன் ஏதோ ஞாபகம் வரவும், அந்தப் புடவையை எடுத்து துவைத்து உடுத்துவாள்.
அவளும் உடுத்திய துணிகளை சன்னல், கதவு, டேபிள் துடைக்கப் பயன்படுத்துவாள். துடைத்து அழுக்கான துணிகளை வீட்டின் முன் குப்பைகள் கொட்டும் பகுதியில் தூக்கிப்போடுவாள். தான் உடுத்திய துணிமணி இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொள்வதில்லை. உடுத்தாமல் கிடக்கும் புடவைகளை குப்பை அள்ளும் பெண்களுக்குக் கொடுத்து விடுவாள். 'அவள் கவலை எல்லாம் துணிமணிகள் மீதல்ல' என்று ராமையாவுக்குத் தெரியும்.
அவளுக்கு நேர்மாறாக ராமையா அவர் உடுத்தும் சட்டை, வேட்டி மீது மிகுந்த அக்கறை கொள்வார். அவரின் சின்ன வயதில், அவரின் உடை மீது பெரிதாக கவனம் எதுவும் எடுத்துக்கொண்டதில்லை. அவர் வளரும் பருவத்தில் மக்களின் மீதான அக்கறையில், தோய்ந்தார். மக்கள் பிரச்னையை தன் பிரச்னை போல் எடுத்துக்கொண்டு, அதற்காக போராடவும் செய்தார். அவர் இருபது வயதில் சனங்களின் பிரச்னைகளுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்தார். இதெல்லாம் அவர் உடம்பில் தானாக ஊறியதே தவிர, திணித்து அவர் உருவாகவில்லை என்பதை உணரவே செய்தார்.
அவரின் பிள்ளைகள், அப்பா அவர் விருப்பப்படி ஏதோ செய்கிறார் என்பதைத்தவிர, அவர் செயலுக்கு எதிராக நடந்துகொள்ளவுமில்லை. அவர் கவனம் எல்லாம் சமூகம், அரசியல் என்று இருந்தது. அதனால் அவர் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் பாதிக்கப்படவே செய்தது. கனகம் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். அவர் எதையும் கேட்கவில்லை. அவர்களாகவே படித்து, அவர்களுக்கான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டார்கள். பிள்ளைகளின் நிலையை அவர் எப்போதும் உணராதவராகவே இருந்தார். கனகம் பிள்ளைகளின் மீதுதான் அதிக கவலையாக இருந்தாள்.
ராமையா, இப்போது கட்சியில் இல்லை. அவரின் தலைவர் காலமாகிவிட்ட பிறகு, அந்தக் கட்சியில் அவர் உறுப்பினராகத் தொடரவில்லை. கட்சிக்காக உழைத்தாரே தவிர, பதவியும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. கட்சியும் ஓரளவுக்குதான் வளர்ந்திருந்தது. அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கும் இல்லை. 'கட்சி என்றால் மக்கள் பிரச்னைக்காகப் போராடவேண்டும்' என்பது மட்டும்தான் அவரின் நினைப்பாக இருந்தது. அதுபோதும் என்று நிறைவாகவும் இருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை.
ஒருமுறை ராமையாவிடம் வேலை செய்தவன், அவருக்குத் தெரியாமலே பீரோவில் இருந்த அவரின் இரண்டு வெள்ளைச் சட்டையை எடுத்துக் கொண்டு போய்விட்டான். 'அவன் திருடிக் கொண்டு போய்விட்டான்' என்று நினைக்கவில்லை. 'விருப்பப்பட்டு எடுத்துக் கொண்டு போய்விட்டான்' என்றுதான் நினைத்தார். அவனே கேட்டிருந்தால், புதிதாகவே எடுத்துக் கொடுத்திருப்பார். குற்ற உணர்வோடு அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஒளிந்துகொண்டு போனான்.
ராமையா, 'நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சகஜமாக வந்து பார்த்துவிட்டுப் போ'' என்றார். திருடன் மாதிரி அவனுக்கு உறுத்தலாக இருந்தது. 'அய்யா மன்னிச்சிடுங்க'' என்று அவன் சொல்லும்போதே கண்ணில் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தான். அவன் செயலை அவர் மன்னித்துவிட்டார். பிறகு அவன் ராமையாவைப் பார்க்க அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து, அவரை கவனமாகப் பார்த்துக்கொண்டான். கனகமும் அவன் பசிக்கு சோறிட்டு நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.
ராமையா கனகத்தைக் கூப்பிட்டு, 'தேநீர் கொஞ்சம் தா'' என்றாள். அவர் ஏற்கெனவே தயாராகப் போட்டிருந்த தேநீரை அடுப்பில் சிறுந்தீ வைத்து, சூடாக தம்ளரில் கொண்டு வந்து கொடுத்தாள். ராமையா, வாழ்க்கைக்கான தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அவருக்குக் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தை சீராகவே நடத்தி வருகிறாள்.
கரித்துணியான அவரின் வெள்ளைச்சட்டையை குப்பைக் கூடையில் போட்டாள் கனகம். அந்தச் சட்டையைப் போடும்போது, வெள்ளை சட்டைப்பைக்குள் வெளியே தெரியுமாறு வைத்திருக்கும் அவரது தலைவர் படம், ஸ்டேண்டில் அவர் கண்முன் தெரிந்தது. அதைப் பார்க்கையில், கண்ணீர் வந்தது. என்ன இருந்தாலும், அவரின் தலைவர் மீதான விசுவாசம் அவரின் கண்ணீரில் தெரிந்தது. ராமையாவின் கண்ணீரைப் பார்த்த கனகத்துக்கும் வருத்தம் அதிகமாகியது. இதுநாள்வரை அவரை ஒரு மாதிரி நடத்தினேன் என்பதெல்லாம் மனதில் ஓடியது.
ஓடியாடி வீட்டிக்குள் ஒடுங்கிய மனுஷனை இனிமேல் நான் மதிப்பாக நடத்தவேண்டும் என்று அவள் உளம் கொண்டாள். தேநீர் தம்ளரில் சூடு ஆறியிருந்தது. 'சூடு ஆறிப்போச்சு, குடிங்க'' என்றாள். தேநீர் தம்ளரைப் பிடித்துக் குடிக்கையில் அவர் கை நடுங்கியது. சட்டை உடுத்தாமல் வெறும் உடம்பில் இருந்தார். தேநீர் தம்ளர் பிடித்த விரல்கள் நடுங்கவும், வயிற்றில் சிந்திய தேநீர், சட்டை உடுத்திய ஞாபகத்தில் வெள்ளைச் சட்டையில் சிந்தியதுபோல் வருத்தம் கொண்டார்.
கனகம் அவரின் வருத்தத்தை உணரவே செய்தாள். 'இனிமேல் உங்க சட்டையைக் கரித்துணியாகப் பயன்படுத்த மாட்டேன்'' என்றாள். மனம் குளிர்ந்தவராக, அவ்வளவு சந்தோஷம் கொண்டார். அப்போது அவர் தலைவரும் அவர் இருந்த கட்சியும் நினைவில் வந்து போயின.
பீரோவில் துவைத்து அயனிங் பண்ணி வைத்திருந்த அவரின் சட்டையை எடுத்து வந்து கனகம் போட்டுவிட்டாள். குழந்தையைப் போல் குதூகலமாகப் புன்னகைத்தார்.
திரும்பவும் கனகம் சொன்னாள், 'உங்க வெள்ளைச்சட்டையை இனிமேல் கரித்
துணிக்குப் பயன்படுத்தமாட்டேன்'' என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு, சிறு புன்னகையோடு ராமையா தலையசைத்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.