ராதிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 34

ராதிகா பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
ராதிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 34
Updated on
2 min read

ஆரம்ப காலத்துத் தமிழ்ப் படங்களில் 'இலங்கைக் குயில்' எனப் பாராட்டப்பட்ட தவமணிதேவிக்கு பிறகு அடுத்த இலங்கைக் குயிலாக வந்த ராதிகா, 1962, ஆகஸ்ட் 21இல் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கும் கீதாவுக்கும் மூத்த மகளாகப் பிறந்தார்.

இவரது சகோதரி நடிகை நிரோஷா, சகோதரர் ராதா மோகன் திரைப்படத் தயாரிப்பாளர். பிற்காலத்தில் சிவாஜி, ரஜினி, கமல் என மிகப் பிரபலங்களுடனும், பல மொழிப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

நான் வசித்த எல்லையம்மன் காலனியில், 1978ஆம் ஆண்டு, ஏ.எல். எஸ். வீரய்யா என்ற பெயர் பெற்ற தயாரிப்பு நிர்வாகியுடன் இவர் நடந்து போவதைப் பார்த்தேன். அடுத்த சில மாதங்களிலேயே என் நண்பரும் இயக்குநர் இமயமுமான பாரதிராஜா இவரை 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் அறிமுகம் செய்து, வெற்றிப் பாதையின் அடுத்தபடியாக 'நிறம் மாறாத பூக்கள்' வாடாத மலர்களாக வசந்தம் தந்தது.

நான் 'மீனாட்சி குங்குமம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரு காதல் கதையை முடிவு செய்து, 'அன்பே சங்கீதா' என்று பெயர் வைத்தேன். பாரதிராஜா மூலமாகப் பேசி, ராதிகாவை என் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தேன். அவர் பேசிய ஆரம்ப காலத்துப் பிள்ளைத் தமிழ், ஒரு வழியில் என் படத்துக்கு ஆறுதலாகத்தான் இருந்தது. ராதிகா மூலமாக சுதாகரையும் விஜயனையும் முடிவு செய்தேன். அவர்கள் இருவரும், என் உதவியாளர்களாக இருந்த இருவர் செய்த குழப்பத்தால் ஜெய்கணேஷையும் தேங்காய் சீனிவாசனையும் நடிக்க வைத்ததால் நான் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானேன்.

என் படத்தைப் பார்க்க ஆசைப்பட்ட ஏவி.எம். இரவில் பார்த்துவிட்டு அடுத்த நாள், 'யார் உன் படத்தின் கதாநாயகி?'' என்று கேட்டார். 'எம்.ஆர். ராதாவின் மகள்'' என்றதும், ராதிகாவைப் பாராட்டி, ஏவி.எம். நிறுவனத்தில் நடிக்க வைத்தார்கள்.

என் படத்தின் கிளைமாக்ஸ் எடுக்க வேண்டிய கடைசி நாள். அன்று காலை முதல் இரவு வரை ஒரு பக்கம் பாட்டு, இன்னொரு பக்கம் கிளைமாக்ஸ் என்று தொடர்ந்து 18 மணி நேரம் அங்குமிங்கும் ஓடி உடையை மாற்றி ராதிகா முடித்துக் கொடுத்து விட்டே அங்கிருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். அவருடைய அத்தனை ஒத்துழைப்பும் ஹீரோ ஜெய் கணேஷ் என்பதால் தடம் புரண்ட ரயிலானது.

திடீரென ஒரு நாள் என் வீட்டுக்கு மதிய உணவுக்கு வருவதாகச் சொல்லி வந்தார். நான் என்னிடம் பணிபுரிந்த அன்றைய குமரேசனான இன்றைய ராமராஜனை அனுப்பி சைனீஸ் உணவு வாங்கி வரச் சொல்லிச் சாப்பிட வைத்தேன்.

அப்போது அவர், 'சார், நான் உங்கள் நண்பர் டைரக்டர் மகேந்திரன் படத்தில் நடிக்க வேண்டும். எனக்கு சிபாரிசு செய்யுங்கள்'' என்றார்.

அச்சமயத்தில் மகேந்திரன் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். நான் அவர் வீட்டுக்குப் போவேன். நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்.

அழகப்பா கல்லூரியில் படித்து ஒரே நேரத்தில் சினிமாவில் போராடியவர்கள். நான் மகேந்திரனிடம் ராதிகாவை பற்றிச் சொன்னதும், 'சம்பளம் மிகக் குறைவாக இருக்குமே'' என்றார்.

நான் ராதிகாவை கேட்காமலே, 'சம்பளம் பிரச்னை இல்லை... உங்கள் படத்தில் நடிக்க ராதிகா ஆசைப்படுகிறார்'' என்று கூறினேன். அவர் உடனே சம்மதித்தார்.

ராதிகா 'மெட்டி'யில் நடித்தார். எனக்கும் மகேந்திரனுக்கும் அவர் அப்போதிருந்த சாந்தோம் வீட்டில் விருந்து வைத்தார். ராதிகா அம்மா, மறைந்த கீதாம்மா எனக்கு அப்போது பெண் குழந்தை பிறந்தது தெரிந்து, படப்பிடிப்பு தளத்தில் இருந்து கூட்டி வரச் சொல்லி, என் குழந்தையை அவர் மடியில் பல நாள்கள் வைத்திருந்ததை என்னால் மறக்க முடியாது.

எல்லாவற்றையும்விட சிறையில் இருந்து விடுதலையாகி இருந்த எம். ஆர். ராதாவை 'அன்பே சங்கீதா' படம் பார்க்க இரவு பத்து மணிக்கு ஏவி.எம். தியேட்டருக்கு ராதிகா கூட்டி வந்தார். அவரைப் போல ஒரு புரட்சிகர நடிகரை எந்த மொழியிலும் பார்க்க முடியுமா... சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை விமர்சித்த குணச்சித்திர நடிகர். என் படத்தைப் பார்க்க பாரதிராஜா, இளையராஜா வந்திருந்தார்கள். படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் குறட்டை விட்டார்.

ராதிகா 'நைனா நைனா'' என்று தட்டி எழுப்பினார். ராதா வழக்கம் போல ஒரு சிரிப்பு சிரித்து, 'ஜெயில்ல தூங்க விடாம பண்ணிட்டாங்க... அதுதான் தூங்கிட்டேன்'' என்று சாதாரணமாகச் சொன்னார்.

அவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. ஆனால், அவர் மகன் ராதாரவி அவர் வாழ்ந்த தேனாம்பேட்டை வீட்டை எனக்கு மாதம் ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்குத் தந்தார். மூன்றாண்டு காலம் அங்கே வாழ்ந்தேன் என்பது ஒரு படைப்பாளி என்ற நினைவில் கனாக்காலம்தானே.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com