
ஒருமுறை சென்னை வானொலி நிலையத்தில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம் 'சினிமா நேரம்' ஒலிபரப்புப் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது, 'கவிஞர் கண்ணதாசன் குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எம்.ஜி.ஆர். பதில் அளித்தபோது, 'காப்பியங்களைப் படைத்த கம்பனாக, இளங்கோவாக, ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்த வள்ளலாராக, புதுமைக்கவி படைத்த பாரதியாராக, புரட்சிக்கவி படைத்த பாரதிதாசனாக, தேவாரம், திருவாசகம், திருப்பாசுரம் என்ற ஆன்மிக நெறிகளைப் பாடிய அரும்பெரும் புலவர்களாக.. என்று பல கோணங்களில் பலரும் வியக்கும் வண்ணம் தமிழ்க் கவிதைகளைப் படைத்தவர் என்ற பெருமை கண்ணதாசனுக்கு உண்டு'' என்றார்.
முக்கிமலை நஞ்சன்
இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு படித்த பள்ளியில் ஹிந்தி பண்டிட்டாக இருந்தவர் பலவேசம் செட்டியார். இவரே கம்யூனிச நூல்களை நல்லகண்ணுவுக்கு அளித்து, படிக்க வைத்தவர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நல்லகண்ணு திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட்டை முடித்து, அதே கல்லூரியில் தமிழில் பி.ஓ.எல். பட்டப்படிப்பைப் படித்தார்.
நாங்குனேரி வட்டார விவசாயச் சங்க ஊழியராகத் தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார் நல்லகண்ணு. அப்போது, 'வட்ட மரக்கால் கூடாது. முத்திரை மரக்கால் வேண்டும். சுத்தவாரம் வேண்டும்..' என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினார்.
1948இல் கம்யூனிஸ்ட் கட்சியை காங்கிரஸ் அரசு தடை செய்தபோது, 1949 நவம்பர் 20 வரை நல்லகண்ணு தலைமறைவாக இருந்தார். அதே ஆண்டு டிசம்பர் 20இல் புலியூர்குறிச்சியில் நல்லகண்ணுவை போலீஸார் கைது செய்தனர். கைகளைப் பின்புறம் கட்டி வீதியில் நல்லகண்ணுவை இழுத்துச் சென்றனர். அடர்த்தியான நல்லகண்ணுவின் மீசையில் சிகரெட்டின் நெருப்பு முனையால் கொளுத்தினார் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி. இதன்பின்னர், நல்லகண்ணு மீசை வைப்பதையே விட்டுவிட்டார்.
சுதந்திரப் போராட்டத் தியாகி கடலூர் அஞ்சலை அம்மையாரின் கணவர் முருகப்பாவை சந்திக்கச் சிறைக்கு வந்தார் அவரது மகள் லீலாவதி. அப்போது பக்கத்து சிறையில் இருந்த ஜமதக்னியை சந்தித்தார் லீலாவதி. நட்பு காதலாகி, இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அப்போது, திருமணச் செலவு மூன்று ரூபாய் மட்டும்தான்.
பாலதண்டாயுதம் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். திருச்சிக்கு வந்த அவர் தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியில் திருச்சி மாவட்டச் செயலாளராக சில மாதங்கள் பணியாற்றினார். தன்னை நேசித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண் கிளாடிஸ் வில்ஸ் என்பவரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நிர்மலா என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார் பாலதண்டாயுதம்.
ஜி.ஆர். மகாதேவன் ஒரு பழம்பொருள்கள் சேகரிப்பாளர். இவர் தாம் சேகரித்த அனைத்து வகை சேகரிப்பையும் தனது பொம்மைக்காதலன் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். காரைக்குடி கழனிவாசல் அழகப்பா நகரில் உள்ள இந்த அருங்காட்சியகமே நாட்டின் முதல் தனியார் அருங்காட்சியகமாகும்.
'தேடி சோறு நிதம் தின்று..' என்ற பாரதியாரின் கவிதையில், 'பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்ற வரிகள் மகாதேவனுக்கு ஆழமாய் பதிந்தது. இதனால்தான் அருங்காட்சியகத்தையும் அமைத்தார். 5 ஆயிரம் நூல்கள், நூற்றுக்கணக்கான நாணயங்கள் வெளிநாட்டு கரன்சிகள் போன்றவை உள்ளன. பிரபல பத்திரிகைகளின் முதல் இதழ்கள் பல இங்குள்ளன.
காலந்தோறும் கம்யூனிஸ்டுகள் நூலிலிருந்து... தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.