சங்கீத மகால்

சோழர் காலத்திலிருதே கலைகளின் தலைநகரமாகத் திகழ்கிறது தஞ்சாவூர்.
சங்கீத மகால்
Published on
Updated on
2 min read

சோழர் காலத்திலிருதே கலைகளின் தலைநகரமாகத் திகழ்கிறது தஞ்சாவூர். இசை, நடனம், நாட்டியக் கலைகளைப் போற்றி வளர்ப்பதற்காக அந்தக் காலத்திலேயே அரங்கங்களும் அமைக்கப்பட்டன. அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகால் ஏறத்தாழ 450 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகத் திகழ்கிறது.

16-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றிய நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் 1560-களில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் முதலில் 'நவரத்ன மனமய்ன நாடக சாலை' என அழைக்கப்பட்டது. பின்னர், மராட்டியர் ஆட்சிக்காலத்தில் 'சங்கீத மகால்' என்று பெயர் மாறியது.

கடந்த நூற்றாண்டில் மன்னர் சரபோஜி கல்லூரி தொடங்கப்பட்டபோது, ஆரம்பக் காலத்தில் சங்கீத மகாலில்தான் செயல்பட்டன. அப்போது சில கட்டமைப்புகள் மாற்றப்பட்டன. மேல் தளத்தில் தஞ்சாவூர் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிற்சங்கத்தின் கைவினைப் பொருள்கள் விற்பனை மையமாகச் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன் கூறியது:

'நாயக்கர் கால வரைபடக் குறிப்புகளில் இந்த அரங்கம் இடம்பெற்றுள்ளது. நாயக்க மன்னர்களின் ராஜ குருவான கோவிந்த தீட்சிதரின் மகனும், பெரும் புலவருமான யக்ஞநாராயண தீட்சிதர் எழுதிய 'சாகித்ய ரத்னாகரம்', 'இரகுநாத விலாசம்' போன்ற வடமொழி நூல்களில் இந்த அரங்கத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

விஜயராகவ நாயக்கர் கால குறிப்புகளில் இந்த அரங்கம் 'நவரத்ன மனமய்ன நாடக சாலை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சாவூரை மராட்டியர்கள் கைப்பற்றியவுடன் இந்த அரங்கத்துக்கு சங்கீத மகால் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த மகாலுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நாயக்கர் கால கட்டடக்கலையைச் சார்ந்த இந்த மகால் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆடலரங்கம் உயர்ந்த மேடை, ஒப்பனை அறைகள், மேல்தள வசதி ஆகியன அற்புதமான வேலைப்பாடுகளுடன் உள்ளன. பார்வையாளர் பகுதி நீளவாக்கில் உள்ள இந்த அரங்கத்தின் தரைதளத்தில் மன்னர், அரசப் பிரதிநிதிகள், வித்வான்கள், பொதுமக்கள் என ஏறத்தாழ 600 பேர் அமரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேல்தளத்திலிருந்து அரச குடும்பம், உயர் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் உட்கார்ந்து பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டது. விதானத்தில் இருந்த வண்ண, வண்ண லாந்தர் விளக்குகளும், சர விளக்குகளும் அரங்கத்தை அலங்கரித்தன. மேடையையொட்டி முன்புறம் ஏறக்குறைய 10 அடி ஆழம் கொண்ட பள்ளமான பகுதி இருக்கிறது. தற்போது இப்பள்ளம் மேடுபடுத்தப்பட்டுள்ளது.

மேடையில் இசை நிகழ்ச்சி நடைபெறும்போது இப்பள்ளத்தில் தண்ணீர் நிரப்பப்படும். மேடையில் ஒலிக்கும் ஒலி அலைகள் இந்நீர்ப்பரப்பின் மீது மோதி எதிரொலிக்கும்போது, மிகுந்த நயத்துடன் ஒலித்தது. இது அக்கால சவுண்ட் எபெக்ட்ஸ் தொழில்நுட்பமாகப் போற்றப்படுகிறது. மேடையில் ஒலிக்கும் ஒலி எதிரொலிக்காமல் இருப்பதற்காக, மேல்பகுதியில் பந்தல் போன்று துணி கட்டப்பட்டிருந்தது.

எதிரொலிப்பதைத் தடுக்க சுவர்களில் சிறு, சிறு துளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேல் தளத்திலுள்ள நெருக்கமான கம்பிகளும் இசையை நுட்பமாகக் கேட்க உதவின. தற்போதுள்ள நவீன ஒலி வாங்கிகள், ஒலிபெருக்கிகள் இல்லாத அக்காலகட்டத்தில் எங்கிருந்து அமர்ந்து பார்த்தாலும் கேட்கும் விதமாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பல சுவடிகளின் மூலம் சங்கீத மகாலில் பல இசை, நாட்டிய நிகழ்ச்சிகளும், பாகவத மேளா நாட்டிய நாடகங்களும் நடைபெற்றதை அறிய முடிகிறது. மன்னர் இரண்டாம் சரபோஜியின் பெருமைகளை விளக்கும் விதமாக அவரது அரசவை புலவரான கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய சரபேந்திர பூபாளக் குறவஞ்சி என்கிற புகழ்பெற்ற நாட்டிய நாடகம் இந்த அரங்கத்தில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

ஏறத்தாழ 450 ஆண்டுகளாக உள்ள இந்த அரங்கத்தில் தொடர்ந்து தற்போதும் இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இது, பாரம்பரியமான அரங்கம் என்பதால், பரதநாட்டிய அரங்கேற்றங்கள் பெரும்பாலும் இங்குதான் நடைபெறுகின்றன'' என்கிறார் மணி. மாறன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com