சமைக்காத ஊர்!

எந்த ஊரிலும் இல்லாத அதிசயமாக, குஜராத்தில் உள்ள 'சந்தன்கி' பேரூரில் எந்த வீட்டிலும் பல ஆண்டுகளாக சமைப்பதே இல்லை.
சமைக்காத ஊர்!
Published on
Updated on
2 min read

எந்த ஊரிலும் இல்லாத அதிசயமாக, குஜராத்தில் உள்ள 'சந்தன்கி' பேரூரில் எந்த வீட்டிலும் பல ஆண்டுகளாக சமைப்பதே இல்லை. அதனால், 'தினமும் காய்கறிகளை வெட்டி, சப்பாத்தி சுட வேண்டியிருக்கிறதே!' என்று எந்தப் பெண்மணியும் அங்கலாய்ப்பதில்லை.

'கூட்டாஞ்சோறு' உண்பது போல, ஊரில் உள்ளவர்கள் இணைந்து சமூகக் கூடத்தில் தினமும் இரண்டுவேளை ஒன்றாக உண்கிறார்கள். இது ஒரு நாள், இரண்டு நாள் நடக்கும் நிகழ்வல்ல; 365 நாள்களிலும் அந்த ஊர் மக்களுக்கு உணவு சமூகக் கூடத்தில்தான்!

இந்த வழக்கம், சமூகப் பிணைப்பை, பரஸ்பர நட்பை வளர்க்கிறது. உணவுச் செலவு ஒருவருக்கு மாதம் இரண்டாகிறதாம்.

'ஊரில் உள்ள குடும்பத்தாருக்காக சமூகக் கூடத்தில் ஊர்க்கார்கள் குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு நாள் ஒரு குழு சமைப்பார்கள்' என்றுதானே நினைக்கத் தோன்றும். அதுதான் இல்லை! தொழில்முறை சமையல்காரர்களால்தான் தினசரி உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.

தனிக் குடும்பங்களும், திருமணமாகாத வாழ்க்கை முறையும் ஆதிக்கம் செலுத்தும் யந்திரமயமான வாழ்க்கை முறைக்கு மாறாக, 'சந்தன்கி' பேரூர் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற சமூக உணர்வை நிலைநாட்டுகிறது.

'சந்தன்கி'யில், வசித்து வந்த இளைய தலைமுறையினர் வேலை, வணிகம் காரணமாக நகரங்களுக்குச் சென்றுவிட்டாலும், அவர்களது வயதான பெற்றோர் 'சந்தன்கி'யை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அதனால் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க, வீட்டில் சமையல் என்பது பெரிய சுமையானது. எனவே முதியவர்களும், அவர்களது வாரிசுகளும் இணைந்து எடுத்த முடிவுதான் 'சமூக சமையல் கூடம்'.

இந்தக் கூட்டு முயற்சியின் முன்னோடியும், 'சந்தன்கி' ஊராட்சித் தலைவருமான பூனம்பாய் படேல் சொல்கிறார்:

'நியூயார்க்கில் 20 ஆண்டுகள் வசித்த நான், 'சந்தன்கி' திரும்பிய பிறகு, இளைய தலைமுறையினர் வீட்டில் இல்லாதச் சூழ்நிலையில், அங்குள்ள முதியவர்களுக்கு அன்றாடப் பணிகள், குறிப்பாக சமையல் வேலை சவாலாக மாறி, அவர்கள் சிரமப்படுவதைக் கண்டேன். முதியவர்களுடன் இளைய தலைமுறையினர் சேர்ந்து வசிக்காத சூழ்நிலையில், ஊர் மக்கள் தொகை 1,100 இலிருந்து 500 ஆகக் குறைந்துவிட்டது. சமையல் வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் விரும்பினர்.

சமையல் கூடம் முதலில் கொட்டகை போன்ற இடத்தில் தொடங்கப்பட்டாலும், ஆண்டுகள் செல்ல செல்ல அதன் தரமும் உயர்த்தப்பட்டது. சூரிய சக்தியில் இயங்கும் குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் உணவு பரிமாறப்படுகிறது. சமூக சமையல் கூடம் என்பதையும் தாண்டி மக்கள் கூடும் சமூக மனமகிழ் மன்றமாக மாறியுள்ளது. இப்போது 'சந்தன்கி' ஒருவருக்காக ஒருவர் வாழும் கிராமமாக மாறிவிட்டது. வீட்டில் முதியோர் தனிமையில் இருப்பதைக் குறைத்துள்ளது.

சமூக சமையல் கூடத்தின் நன்மைகள் தெளிவாகத் தெரிந்தவுடன், 'சந்தன்கி' ஊர் மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். 'நாளை என்ன சமைக்கலாம்?' என்று முதியவர்கள் உணவு சமைப்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.

சமூக சமையல் கூடம் ஊருக்கு வெளியில் இருப்பதனால், வீட்டிலிருந்து நடந்து செல்ல வேண்டும். அது முதியோருக்கு நடைப்பயிற்சியாகவும் அமைந்து விடுகிறது. ஆக, 'சந்தன்கி'யின் சமூக சமையல் கூடத்தின் வெற்றி, இதர ஊர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது'' என்கிறார் பூனம்பாய் படேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com