ஏ.ஐ. தரும் ஆனந்த சிரிப்பு!

நாம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர்களாகவே ஆதி காலத்தில் இருந்தோம்.
ஏ.ஐ. தரும் ஆனந்த சிரிப்பு!
Published on
Updated on
2 min read

நாம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர்களாகவே ஆதி காலத்தில் இருந்தோம். 'இப்போதும் நாம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து ஆய்பவர்கள் தாம்' என்று பிரபல விஞ்ஞானியும் எழுத்தாளருமான கார்ல் சகன் ஒரு முறை கூறினார். அது அப்படியே உண்மையாக இருக்கிறது. இப்போது நம்முடன் சுற்றித் திரிய விஞ்ஞான சாதனங்களும் கூடவே வருகின்றன.

வெவ்வேறு அயல்கிரகங்களில் நம்மால் சென்று ஒரு கணம் கூட இருக்க முடியாத நிலையில், நாம் அங்கெல்லாம் ரோவர்களை அனுப்புகிறோம்.

இந்த ரோவர்களின் பணி என்ன?

அது வேற்றுக் கிரகங்களில் இறக்கி விடப்பட்டவுடன், அங்குமிங்குமாக அலைந்து திரியும். அதனுள்ளே காமராக்கள், சாம்பிள்களை எடுத்து ஆய்வதற்கான சாதனங்கள் இருக்கும்.

அவை மெதுவாக ஒவ்வொரு இடமாகச் சென்று புகைப்படங்களைப் பிடித்து பூமிக்கு அனுப்பும். மாதிரிகளைச் சேகரிக்கும்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளிலிருந்து இப்படிச் செலுத்தப்பட்ட ரோவர்களில் செவ்வாய் கிரகத்தில் ஏழு ரோவர்களும், சந்திரனில் ஏழு ரோவர்களும், குறுங்கோள்களில் மூன்று ரோவர்களும் நமக்காக வேலை செய்கின்றன. இந்த ரோவர்களை அமெரிக்கா, ரஷிய, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் அனுப்பியுள்ளன.

ஒரு ரோவரை உருவாக்க 7440 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது. இந்தத் தயாரிப்புச் செலவு இப்போது சற்றுக் குறைவாக ஆகி இருக்கிறது.

ரோவரில் உள்ள கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களை இயங்க வைக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் உரிய முறையில் மேல் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு நாஸா அனுப்பிய ஆப்பர்சூனிடி ரோவர் தனது கடைசி செய்தியாக, 'எனது பேட்டரி மிகவும் மெதுவாக இயங்குகிறது. ஒரே இருள் மயமாக இருக்கிறது.' என்று ஒரு செய்தியை அனுப்பியது.

இந்தச் செய்தியைக் கேட்ட விண்வெளி ஆர்வலர்கள் பலரும் அழுது புலம்பினர். ரோவருக்கும் இப்படி ஒரு முடிவா?

ஆனால், காலம் வேகமாக மாறி வருகிறதில்லையா? இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் பரவிவிட்டது. ரோவரிலிருந்து பல லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடந்து சிக்னல்கள் நமக்கு வந்து சேர, அவற்றிக்கான தரவுகளை ஆராய்ந்து நாம் முடிவு எடுக்க வேண்டும்.

இதற்கு ஆகும் காலத்தைக் குறைக்க முடியுமா?

செயற்கை நுண்ணறிவு இதற்குப் பதிலைத் தந்து விட்டது. அந்த ரோவர்களையே சமயத்திற்குத் தக்கபடி முடிவுகளை எடுக்கச் செய்து விட்டால் என்ன?

டேட்டா எனப்படும் தரவுகளை ரோவரிலேயே தந்து விடலாம். ரோவர்கள் அவற்றை அலசி ஆராய்ந்து, உரிய முடிவுகளை உடனுக்குடன் தானே எடுக்கும்.

ஏ.ஐ.யின் உதவியால் ஒரு ரோவர் பழைய கால மைக்ரோபியல் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டினால், அதனால் உலகம் எவ்வளவு பயனை அடையும்! அது நீர் இருக்கும் தடயங்களைச் சுட்டிக் காட்டினால் உலகமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து விடும் இல்லையா?

எலும்புகளையே உறைய வைக்கும் செவ்வாய் கிரகத்தின் குளிராகட்டும், பூமியை கடுகில் ஆயிரத்தில் ஒரு பங்கு சிறிதாகக் காட்டும் தொலைதூரத்தில் உள்ள கிரகம் ஆகட்டும், இங்கெல்லாம் உள்ள நிலையை உள்ளது உள்ளபடி காட்ட வல்லதாக ஏ.ஐ. சாதனங்கள் இனி உதவப் போகின்றன.

எந்த இடங்களுக்கு முதலில் செல்லலாம் என்பதையும் அவை நிர்ணயித்துச் சுட்டிக் காட்டப் போகின்றன.

ரோவர்கள் மட்டுமன்றி மனிதனும் வேற்றுக்கிரகங்களுக்குச் சென்று தங்கி இருக்க வேண்டுமில்லையா? இதற்காக பிள்ளையார் சுழியை ஏ.ஐ. சாதனங்கள் போட இருக்கின்றன.

எந்த ஒரு விண் பொருளிலும் மோதாமல் பத்திரமாக விண்ணில் பறந்து சென்று மீள்வதற்கு ஏ.ஐ.யின் துல்லியமான கணக்கீடுகளும் அல்காரிதங்களும் இனி உதவப் போகின்றன.

நம்பும்படியாகச் சொல்லுங்கள் என்பவர்களுக்கு ஓர் உதாரணத்தைச் சொல்லலாம்.

ஆதி காலத்தில் நெடுந்தூரம் கப்பலில் பயணிக்கலாம் என்றபோது சிரித்தார்கள்; அடுத்த கட்டத்தில் ஆகாயத்தில் விமானத்தில் பறந்து நெடுந்தூரத்தை சில மணி நேரங்களில் அடைந்து விடலாம் என்றபோதும் சிரித்தார்கள். மேலும் அடுத்த கட்டத்தில் சந்திரனுக்கு ராக்கெட் மூலம் செல்லலாம் என்றபோதும் சிரித்தார்கள். ஆனால், மனித சாதனை இந்தச் சிரிப்பையெல்லாம் வியப்பாகவும் பிரமிப்பாகவும் மாற்றியது.

இப்போது ஏ.ஐ.யின் காலம். ஏ.ஐ. செய்யவிருக்கும் மாயாஜாலங்களை பூமி வாழ் மக்கள் மட்டும் பேசப்போவதில்லை; பிற கிரகங்களில் இருக்கும் நமது வாரிசுகளும் பேசுவார்கள் என்பதில் ஐயமில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com