ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருதம் பட்டையின் மகத்துவம் என்ன?

ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய அர்ஜுனா பட்டை (மருதம் பட்டை) இதயத்தின் காவலன் என்று கேள்விப்படுகிறேன். அதன் மருத்துவப் பலன் குறித்த விவரங்கள் கூறவும்.
மருதம் பட்டை
மருதம் பட்டை
Published on
Updated on
2 min read

ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய அர்ஜுனா பட்டை (மருதம் பட்டை) இதயத்தின் காவலன் என்று கேள்விப்படுகிறேன். அதன் மருத்துவப் பலன் குறித்த விவரங்கள் கூறவும்.

- ஆ. பெரியசாமி, கடலூர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் மரபு வைத்தியத்தில் முக்கியமான மரமாக மருதமரம் (அர்ஜுனா) சிறப்பான இடம் பெற்றுள்ளது.

அர்ஜுனா பட்டை என்று அழைக்கப்படும் அதன் பட்டை, குறிப்பாக இதய நோய்கள், இரத்த அழுத்தக் குறைபாடுகள், குணமடையாத புண்கள், இரத்த ஓட்டக் கோளாறுகள் போன்றவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய காலச் சூழலில் மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் அதிகமாக வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இயற்கைத் தீர்வாக அர்ஜுனா பட்டை பொதுமக்களிடையே அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

அர்ஜுனா பட்டையின் மூலிகைப் பண்புகள்: அதில் அடங்கியுள்ள டேன்னின், சபோனின், பிளாவனாய்டு, கால்சியம், மக்னீசியம், சிங்க் போன்ற கனிமச் சத்துகள் இதய தசைகளைப் பலப்படுத்தி, இரத்தக் குழாய்களின் சுவர்களைப் பாதுகாத்து உடலுக்குச் சத்து தருகின்றன.

அர்ஜுனா பட்டையின் மருத்துவ நன்மைகள்:

இதய ஆரோக்கியம்: அர்ஜுனா பட்டை 'ஹார்ட்டானிக்' எனப்படும் இயற்கை மருந்தாகக் கருதப்படுகிறது. இதயத்துடிப்பு சீராகும். இதய தசைகளின் பலம் அதிகரிக்கும். மாரடைப்புக்குப் பிந்தைய நோயாளிகளுக்கும் சிறிய அளவு 'அர்ஜுனா கஷாயம்' அல்லது சாறு பரிந்துரைக்கப்படுகிறது.

உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம்: இரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் சுவர் கீறல்கள், வலிமை குறைபாடு போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது.

இரத்த ஓட்டம் மற்றும் கொழுப்புக் குறைப்பு: உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் சீராக நடைபெறச் செய்கிறது.

சுவாசக் கோளாறுகள்: ஆஸ்துமா, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றில் அர்ஜுனா பட்டைச் சாறு நிவாரணம் தருகிறது.

குடல் மற்றும் வயிற்று பிரச்னைகள்: குடல் புண், அமிலக் கோளாறு, அடிக்கடி வரும் வயிற்றுப்போக்குப் போன்றவற்றைக் குறைக்கிறது.

புண் ஆற்றும் தன்மை: அர்ஜுனா பட்டை விழுதை புண்களில் தடவினால் விரைவில் ஆறுகிறது. எலும்பு முறிவு மற்றும் வீக்கம் குறைய பயன்படுகிறது.

சிறுநீரக நன்மைகள்: சிறுநீரை அதிகரிக்கச் செய்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் திறனும் கொண்டது.

பயன்படும் முறைகள்: அர்ஜுனா கஷாயம் - பட்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் காலை, மாலை அருந்தினால் இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலன்.

அர்ஜுனா பட்டை பொடி - பட்டையை நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தேனுடன் கலந்து உட்கொள்ளலாம்.

அர்ஜுனா பட்டை பால் கஷாயம் - பட்டையைப் பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தினால், இதயத்திற்குச் சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.

யாருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது?

இதய பலவீனமுள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிகமான மன அழுத்தம் கொண்டவர்கள், மாரடைப்பு வரலாறு கொண்டவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள்.

பாவ பிரகாசர் எனும் ஆயுர்வேத முனிவர், அர்ஜுனா பட்டை பற்றிய விவரத்தில், 'அது துவர்ப்பு மற்றும் கசப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியம் நிறைந்தது. சீரண இறுதியில் காரமான சுவைத் தன்மை அடைவதால், வயிற்றில் உள்ள கபத்தைக் கரைத்து, சீரண நிலையை மேம்படுத்தும். இதயத்திற்கு உகந்தது, இரத்தப்போக்கை நிறுத்தும், புண்ணை ஆற்றும்'' என்கிறார்.

மாரடைப்புக்குப் பிறகு மீட்புக் காலத்தில் அர்ஜுனா பட்டை 5 - 10 கிராம், 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, 50 மில்லி அருந்துதல் நல்லது. சூரணத்தை தேன் குழைத்து வாய்ப்புண், குடல் புண் குறைக்க உட்கொள்வதும் உண்டு. அதிகமான உதிரப்போக்கு மற்றும் மாதவிடாய் கால வலி குறைக்க சூரணத்தை தேனுடன் குழைத்து, காலை, மாலை உணவிற்கு முன் சாப்பிடலாம்.

இந்த மரப்பட்டையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிறைய ஆயுர்வேத மருந்துகள் விற்பனையில் உள்ளன. மேற்குறிப்பிட்ட உபாதைகளில் அவை பரிந்துரை செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com