
சிவாலயங்கள் இல்லாத ஊரைப் பார்க்க முடியுமா? முடியாது. அது போல் என் 55 ஆண்டு கால நண்பர் சிவகுமார் கலந்து கொள்ளாத சமூக, கலை, பண்பாடு போன்ற மேடைகள் எதுவும் இல்லை. பிரபலங்களாக இருக்கிறார்களோ, இல்லையோ... தனக்குத் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் சுக துக்கங்களில் கலந்து கொள்ளும் ஈடுபாடு இவருக்கே உரிய அற்புத குணங்கள்.
குடும்பத்தில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா என்று பிரபல நட்சத்திரங்கள் கொடி கட்டிப் பறந்தாலும், அவர் இருநூறு படங்களுக்கு மேல் நடித்து, இப்போது நடிப்பதை நிறுத்தி விட்டாலும், அவர் நடித்த 'அன்னக்கிளி', 'புவனா ஒரு கேள்விக்குறி', 'ஏணிப்படிகள்', 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி', 'இன்று நீ நாளை நான்', 'வண்டிச்சக்கரம்', 'சிந்து பைரவி' போன்றவை மறக்க முடியாத படங்கள். திரையுலகில் என்றும் அவர் மார்க்கண்டேயன் மட்டுமல்ல, மறையாத சூரியன், தேயாத பௌர்ணமி - இப்படிப்பட்ட என் அன்பின் அடையாளம் சிவகுமார்.
ராக்கியாக் கவுண்டருக்கும், பழனியம்மாளுக்கும் மகனாக கோவை மாவட்டத்தில் சூலூர் அருகேயுள்ள காசிக்கவுண்டபுதூர் என்ற சிற்றூரில் 27.10.1941-இல் பிறந்தார்.
இவர் தந்தைக்கு சோதிடம் தெரிந்ததால், அவர் சொன்னபடி இவரது 10-ஆவது மாதத்திலேயே தந்தையைப் பறிகொடுத்தார். இவருக்கு ஒரு அக்கா, அண்ணன் என்ற நிலையில் அண்ணனையும் 16-ஆவது வயதில் இழந்தார்.
சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமுடையவர். அரசு ஓவியக் கல்லூரியில் பயின்று, 'பாசமலர்' வெற்றிக்காவியத்தைத் தந்த தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸில் சேர்ந்து பணிபுரிந்தபோது, ஸ்ரீதரின் இயக்கத்தில் 'காதலிக்க நேரமில்லை' பட வாய்ப்பை இழந்து மனம் நொந்தார். இவரது மாமன் தயாரிப்பாளர் ரத்னம் எடுக்க இருந்த படமும் தடைபட்டது. ஏவி.எம். தயாரிப்பில் காக்கும் கரங்கள் படத்தை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் சிவகுமாரை இரண்டாவது கதாநாயகனாக 1965-இல் நடிக்க வைத்தார்.
இவர் ஓவியராகப் பிரகாசிக்க, சிவாஜி பாராட்டிய இவர் ஓவியங்களே இவருக்குச் சிபாரிசுக் கடிதங்களாக அமைந்தன.
எனக்குப் பேர் வாங்கித் தந்த 'அச்சாணி', 'சொந்தம்' என்ற நாடகங்களில் மேஜருடன் என் ஆரம்பக் காலத்து நாடகங்களில் 1970 - 72-களில் நடித்தார்.
என் படங்கள் பலவற்றில் நடித்தபோது, 1980-இல் காரைக்குடி தந்த கலைச் செல்வங்கள் என்று ஏவி.எம்., கவிஞர் கண்ணதாசன், எஸ்.பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம் உட்பட எனக்கும் சேர்த்து விழா எடுத்தார். அப்போது, ஏவி.எம்.மும் கவிஞரும் வர முடியாத நிலையில் எங்களை காரைக்குடி மண்ணில் நடிகர் முத்துராமன், படாபட் ஜெயலெட்சுமியுடன் சிவகுமார் வந்து எனக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துப் பாராட்டிப் பேசினார்.
இவர் எண்பதாண்டு நிறைவு விழாவில் காரை அனுப்பி கலைஞானம், குடும்பத்துடன் என்னையும்அழைத்துச் சென்று சூர்யா, கார்த்தி, ஜோதிகா எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் பாக்யராஜ் தலைமையில் இயங்கும் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 203 கதைகளை நான் பதிவு செய்ததற்காகத் தலைமை தாங்கிப் பாராட்டினார்.
மனதில் உள்ளதை உள்ளபடி மறைக்காமல் பேசுபவர். நலிந்த கலைஞர்களுக்கு அடுத்தவர்களுக்குத் தெரியாமல் நான் சொல்லிப் பல பேர்களுக்குப் பல லட்சங்கள் உதவியவர்.
என் மனைவி எழுத்தாளர் சங்க பாராட்டு விழாவில் கலந்துகொள்ள வரவில்லை என்று தெரிந்து, அவர் காரை அனுப்பி என் மனைவியுடன் போனில் பேசி வர வைத்தார். இன்னொரு நாள் என் மகன், மாப்பிள்ளை, பேரன்கள் அயல் நாட்டிலிருந்து வந்திருப்பது தெரிந்து, என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசி விட்டு அவர் வரைந்த ஓவியப் புத்தகங்களைப் பரிசளித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இன்னொரு நாள் என் மதிப்பிற்குரிய கே.ஆர். விஜயாவுடன் என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பேசிய ஒலி நாடாக்களைப் போட்டுக் காட்டி வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
1954-இல் சுதந்திர இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பறைசாற்றும் விதமாகத் தீட்டப்பட்ட கேன் வாஸ் ஓவியம் அமெரிக்காவில் 119 கோடிக்கு ஏலம் போனது என்பது வரலாறு. சிவகுமார் வரைந்திருக்கும் ஓவியங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் போகும் என்றால் அது அதிசயமில்லை. அது எதிர்கால வரலாறு.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.