ஆசியாவின் மிகப் பெரிய டிரக் மையமான தில்லியில் உள்ள சஞ்சய் காந்தி போக்குவரத்து நகரம் (எஸ்ஜிடிஎன்) 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
எந்த நேரத்திலும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும். தினமும் 20 ஆயிரம் லாரிகள் கடந்து செல்கின்றன. இங்குதான் இந்தியாவின் முதல் பெண் டிரக் மெக்கானிக் சாந்திதேவி பணிபுரிகின்றார்.
30 வருடங்களுக்கு முன் அவர் கணவருடன் குவாலியரிலிருந்து தில்லிக்கு பிழைப்புத் தேடி வந்தார். கணவர் ரிக்ஷா இழுத்தார். சாந்தி அருகிலேயே ஒரு டீக்கடை ஒன்றைத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் தொழிலை மாற்ற, அவர்களின் வாழ்க்கையும் மாறியது. ஆமாம், டிரக் டயர்களை பஞ்சர் ஒட்டும் வேலையை அவருடைய கணவர் செய்ய ஆரம்பித்தார். எஸ்ஜிடிஎன் அவர்களின் பணியிடமாக மாறியது. சாந்தி தனக்கென ஓர் இடம் பிடிக்கத் தீர்மானித்தார். ஆரம்பத்தில் கணவர் மற்றும் மற்ற மெக்கானிக்குகள் செய்வதைக் கூர்ந்து கவனித்தார்.
'முதலில் கருவிகளை சரியாகப் பிடிப்பது எப்படி என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால், படிப்படியாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கணவருக்கு உதவினேன். விரைவில் டிரக் மெக்கானிக் என்பது என் முழுநேரப் பணியாக மாறியது.'' என்கிறார்.
இன்று அவர் லாரி ஓட்டுநர்களுக்கு மத்தியில் 'உஸ்தாத்ஜி' என அழைக்கப்படுகிறார். ஆண் மெக்கானிக்குகளுக்குக் கிடைக்கும் மரியாதை அவருக்கும் கிடைக்கிறது.
தினமும் 10-15 டயர்களுக்கு அவரே பஞ்சர் பார்த்துச் செய்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் ஒருநாள்கூட லீவு விட்டதில்லை.
'இந்தத் தொழிலில் ஒரு பெண்மணியைப் பார்ப்பது அரிது. அவருக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே அவரிடம் வண்டியை சர்வீஸூக்கு விடுகிறேன். அவரால் முடியாதது எதுவும் இல்லை!'' என்கிறார் உத்தரபிரதேச டிரக் ஓட்டுநர் வினோத்குமார்.
ஒரு ஒற்றை லாரியின் டயர் 50 கிலோவுக்கு மேல் எடை இருக்கும். இதனைப் பழுதுபார்க்க ஒன்றுக்கு மேற்பட்டோர் தேவைப்படும். ஆனால் சாந்தி தனியாகச் செய்கிறார். இதுவரை ஆயிரக்கணக்கான டயர்களைப் பழுதுபார்த்திருக்கிறார்.
இவரை முதலில் தீதி (சகோதரி), அடுத்து பாபி (மைத்துனி), இப்போதோ தாடி (பாட்டி) என்று அழைக்கிறார்கள். ஆமாம், இன்று சாந்திதேவிக்கு 65 வயது. தனது உடற்தகுதிக்கு ஏற்ற டயர்களைத் தூக்குகிறார்.
சாந்திக்கு வயதானாலும், முதுகுவலி போன்ற பிரச்னைகள் இருந்தாலும், அவரது வேகம் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
'இன்றுவரை இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்ள வேறு எந்தப் பெண்மணியும் முன்வரவில்லை. ஒருவேளை இது மிகக் கடினம் என்றுகூட நினைக்கலாம். ஆனால், ஒரு பெண்ணுக்கு ஆர்வம் இருந்தால், எந்த வேலையையும் செய்யமுடியும் என நான் நம்புகிறேன். இப்போது இங்குள்ளஆண்களைவிட சிறந்த மெக்கானிக் என என்னை நிரூபித்துள்ளேன்!'' என்கிறார் சாந்திதேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.