'வீடுகளில், உணவுவிடுதிகளில், கல்யாண மண்டபங்களில் மிஞ்சிய உணவுகளை உரிய நேரத்தில் பசி, பட்டினியால் வாடுபவர்களுக்கு வழங்கினால் பசியைத் தணித்த புண்ணியமும் கிடைக்கும்; மிஞ்சிய உணவுகளால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதிலிருந்தும் காக்கலாம்'' என்கிறார் சென்னை பல் மருத்துவர் இஸ்ஸா ஃபாத்திமா ஜேஸ்மின்.
'ஐயமிட்டு உண்' அமைப்பை தொடங்கி, சென்னை நகரின் ஏழு முக்கிய இடங்களில் குளிரூட்டிய பெட்டிகளை வைத்து, அந்தப் பகுதி மக்கள், திருமண மண்டபங்கள், உணவுவிடுதிகளில் மிஞ்சிய உணவுவகைகளை அவை கெட்டுப் போவதற்கு முன்பாகவே அதில் வைத்து பாதுகாக்கும் முறையை 2017 வாக்கில் அறிமுகம் செய்தார்.
நல்ல நிலையில் உள்ள உடை, புத்தகங்கள், காலணி, காலுறை, பொம்மைகள் போன்ற பொருள்களை வைப்பதற்கான இட வசதியை குளிரூட்டப்பட்ட பெட்டிக்கு அருகில் வைக்கவும் ஏற்பாடு செய்தார்.
'2017-இல் ஒரு குளிர்சாதனப் பெட்டியுடன் எங்கள் பணியைத் தொடங்கினோம். இன்று நன்றாக வளர்ந்துள்ளோம். 'ஐயமிட்டு உண்' மூலம் தேவையற்ற உணவைச் சேகரித்தல், பசிக்கு நிவாரணம் அளித்தல் என்ற லட்சியப் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறோம். யாரும் பசியால் வாடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளோம்.
இந்த முயற்சியில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான உணவுகளை தேவைப்படுகிறவர்களிடத்தில் சென்றடையச் செய்திருக்கிறோம். ரூ. 9 கோடி மதிப்புள்ள உணவை வீணாவதிலிருந்து மீட்டெடுத்துள்ளோம்.
4 லட்சத்திற்கும் மேற்பட்ட சிற்றுண்டிப் பொட்டலங்கள் மற்றும் இனிப்புகளை விநியோகித்ததுடன், மாதாந்திர மளிகைப் பெட்டிகளை 3,500-க்கும் மேற்பட்ட குடும்பங்
களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறோம். சென்னை, பெங்களூரு, வேலூர் முழுவதும் 13 சமூக குளிர்சாதனப் பெட்டிகளை ஆங்காங்கே நிறுவியுள்ளோம்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து தன்னார்வத் தொண்டர்கள் எங்கள் அமைப்பிற்காக சேவை செய்கின்றனர். தற்போது சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு தீபாவளிப் பரிசாக நூறு ரூபாய் மதிப்புள்ள இனிப்புகள் கொண்ட பெட்டி ஒன்றைக் கொடுத்து வருகிறோம். இந்தச் செலவுக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் பலர் உதவியுள்ளனர்'' என்றார் இஸ்ஸா ஃபாத்திமா ஜேஸ்மின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.