
'தலை தீபாவளிக்கு பொண்ணும், மாப்பிள்ளையும் வர்றாங்க. ஒரு வாரம் லீவு சொல்லிட்டு, வீட்டை க்ளீன் பண்ணப் பாருங்க. அவளுக்கு தூசி அலர்ஜி. ஒரு துளி தூசி தும்பு இருந்தாலும், தொடர் தும்மல் காட்டிக் கொடுத்துடும். தும்மல் சத்தம் கேட்டால், பக்கத்து வீட்டு நாய்க்கு அலர்ஜியாகி, வெளியே ஓடி வந்து, தும்மினவங்களைத் தேடி வந்து கடிச்சுடும்.
தீபாவளியும் அதுவுமா, ஆஸ்பத்திரிக்கு ஓடணும். கரப்பான் பூச்சியைப் பார்த்தால், அலர்ஜியோட, அருவருப்பு பட்டுக்கிட்டு, நாள் முழுக்கச் சாப்பிடவே மாட்டாள். வீட்டில், ஒரு பூச்சி, பொட்டு இருக்கக் கூடாது. கரப்பான் பூச்சி மருந்தை ஒரு பையில் போட்டு, அதை எப்பொழுதும் தோளில் மாட்டிக்கப் பழகுங்க. சிலந்தியைப் பார்த்தாலே அலறி ஓடுவாள். வீட்டில் சிலந்தி வலை இல்லாமப் பார்த்துக்கோங்க. அது உங்க பொறுப்பு!' என்று அலர்ஜி புராணம் படித்த மனைவி, பொறுப்பு பட்டாசை என் மீது கொளுத்திப் போட்டாள்.
'கரப்பான் பூச்சியைக் கண்டாலே, அதைப் புடிச்சு, பையில் போட்டுக்கறேன். அலர்ஜி பட்டியல் அவ்வளவுதானா? இன்னும் வேறு ஏதாவது மிச்சம் மீதி இருக்கா?' என்று மருந்து உதிர்ந்த பட்டாசு என நினைத்து, கூலாக காலால் நசுக்கப் பார்த்தேன். ஆனால், அது 'பட்'டென்று வெடித்தது.
'நல்லவேளை கேட்டீங்க. ஃப்ரிஜ்ஜில், இரண்டு நாள்களுக்கு மேல் வைத்த மிச்சம் மீதியைச் சாப்பிட்டால், அலர்ஜியாகி, மாப்பிள்ளை உடனே வாந்தி எடுத்துடுவாராம். ஆகவே, தினமும் ஃபிரிஜ்ஜில் இருக்கும் ஐயிட்டங்களை சரிபார்த்து, க்ளீன் செய்ய வேண்டியது உங்க பொறுப்பு.'
'அப்ப மருந்து மாதிரி, ஒவ்வொரு ஐட்டத்தின் மீதும், எக்ஸ்பைரி தேதி எழுதி ஒட்டணும்னு சொல்றே, அப்படித்தானே?'
'புரிஞ்சுக்கிட்டா சரி. அதுக்கும் மீறி, வாந்தி எடுத்தார்னா, அதை துடைத்து க்ளீன் பண்ண வேண்டியதும் உங்க பொறுப்புதான்!'
'நீ செய்யும் தீபாவளி பலகாரங்களைச் சாப்பிட்டு, வாந்தி எடுத்தார்னா, அதற்கு நீதான் முழுப் பொறுப்பு!' என்று உதடு வரை சீறிப் பாய்ந்த சொற்கள், வம்பை வளர்க்க தைரியம் இல்லாததால், நமுத்த பட்டாசு போல், பிசுபிசுத்து, உள் வாங்கின.
'எதற்கும் உங்க பழைய பனியன், வேஷ்டிகளை எல்லாம், ரெடியா தோள் பட்டை பையில் திணிச்சு வச்சுக்கோங்க!'
'வச்சுக்கிட்டு, பழைய துணிக்கு எவர்சில்வர் பாத்திரம்னு கத்திக்கிட்டுப் போகணுமா?'
'மற்ற பொறுப்புகளையும் சொன்னால், ஒரு தள்ளுவண்டி கூட வாங்கிடுவேன்.'
'இப்படியே எடக்கு மடக்கா பேசி காலத்தைத் தள்ளுங்க. யாராவது கேட்டால், கை கொட்டி சிரிக்கப் போறாங்க.'
'என் புத்தி சாதுர்யத்தைப் பாராட்டி, ஒரு தடவையாவது கைதட்டி இருக்கியா?'
'கை தட்டல்னு சொன்னதும் ஞாபகம் வருது. மாப்பிள்ளைக்குக் கொசுன்னா அலர்ஜியாம். அவர் எதிரில் யாராவது கை தட்டினால் கூட, கொசு அடிக்கறாங்கன்னு நினைச்சுகிட்டு, மயங்கி விழுந்துடுவாராம். அவர் ராக்கெட் விடுவதைப் பார்த்துட்டு, கெக்க பிக்கென்னு கை தட்டி சிரிக்காதீங்க. எப்பவும், கையில் கொசு மருந்து ஸ்டாக் வச்சுக்கோங்க!'
'ராக்கெட் விடுவதற்கு, கம்பி மத்தாப்பு போதுமே? எதற்கு கொசு மருந்து?'
'உங்க சட்டையில் அடிச்சுக்கறதுக்குத்தான். விடிய விடிய கதை கேட்டு, வாலி படத்தில் நம்ம 'தல அஜீத்' ஒரே வேடத்தில் அமர்க்களமா நடிச்சிருக்காருங்கறா மாதிரி பேசறீங்களே.'
'தி கேட் இஸ் அவுட் ஆஃப் தி பேக். இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த அஜீத் ரசிகைங்கறதைச் சொல்லாம சொல்லிட்டே. கத்தரிக்காய் முத்தினா, கடை த்தெருவுக்கு வந்துதானே ஆகணும்.'
'கத்தரிக்காய்ன்னதும் ஞாபகம் வருது. மாப்பிள்ளைக்கு கத்தரிக்காய் அலர்ஜியாம். சமையலுக்கு கத்தரிக்காய் வாங்குவதைக் கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைய்யுங்க!'
'அதுக்கென்ன... அமெரிக்க அதிபர் டிரம்பிடம் சொல்லிடலாம், கத்தரிக்காய் விவசாயத்தையே கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கச் சொல்லி. உலகத்துக்கே ஆர்டர் போட்டுவிட்டு, அலர்ஜி போரை நிறுத்தியதற்காக, நோபல் பரிசுக்கு ஆர்டர் போடுவார்...'
'ஆர்டர்னு சொன்னதும் நினைவுக்கு வருது. ஆர்டர் போட்டால், மாப்பிள்ளைக்கு அலர்ஜியாம்.'
'இது எனக்கு நிச்சயமா புரியலை... கொஞ்சம் விளக்கமா சொல்லேன்...'
'ஆமா... மற்றதெல்லாம் புரிஞ்சா மாதிரி பேசாதீங்க? இதுவரை, நான் சொன்னதிலிருந்து கேள்வி கேட்பேன். வழக்கம்போல், திருதிருன்னு விழிக்காம, பதில் சொல்லணும்.'
'அது மட்டும் வேண்டாமே. கேள்வின்னா எனக்கு அலர்ஜி. பரிட்சையில், கேள்வித்தாளை பார்த்தவுடன் மயங்கி விழுந்துடுவேன்.'
'சரியா படிக்கலைன்னாதான், அந்த அலர்ஜி வரும். எல்லாம் என் தலையெழுத்து.'
'அந்த தலையெழுத்துக்கு என்ன குறைச்சல்? அடக்க ஒடுக்கமா ஒரு கணவன் கிடைச்சிருக்கேனே!'
'இப்படி தொணதொணன்னு பேசி, என் எண்ண பட்டாசுக் கட்டில், தண்ணீர் ஊற்றாதீங்க. நான் எங்கே விட்டேன். ஆங்... ஆர்டர் அலர்ஜிக்கு வர்றேன். உட்காருங்க... சாப்பிடுங்கன்னு ஆர்டர் மாதிரி சொல்லாமல், சைகையிலதான் சொல்லணும். இல்லைன்னா, தலை சுற்றி, மாப்பிள்ளை அழ ஆரம்பிச்சுடுவாராம்!'
இப்பொழுது எனக்கு தலை சுற்றியது. பெண்ணுக்கு மாப்பிள்ளை செலக்ட் செய்யும்போதே, 'எவ்வளவு சம்பளம் என்று கேட்பதுடன், எவ்வளவு அலர்ஜி எனக் கேட்காமல் விட்டுவிட்டோமே?' என்று நொந்து கொண்டேன். அலர்ஜிகளோடு போர் புரிவதற்கு, மனைவி போட்ட ஆர்டர்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவது புரிந்தது. ஆனால், மனப்பாடம் செய்வது என்பது, சிறு வயதிலிருந்தே எனக்கு அலர்ஜி. அப்பொழுதுதான் என் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
'அனைத்து அலர்ஜிகளுக்கும், பேக்கேஜாக ஒரு அருமருந்து எங்கேயாவது கிடைக்குமா?' என்று தேட ஆரம்பித்தேன். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? அனைத்து பிரச்னைகளுக்கும் யோசனைகளை வாரி வழங்கும், யூ டியூப், ஃபேஸ் புக் போன்ற சாதனங்கள் வெண்ணெயாகத் தெரிந்தன.
'வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைச்ச கதையா, அவங்க வர்ற டயத்தில், எதையாவது எசகு பிசகா யோசிச்சு, உங்க புத்திசாலித்தனத்தைக் காட்ட முயற்சிக்காதீங்க. நான் சொன்னதை மட்டும் செய்யுங்க. முக்கியமா, கரப்பு, கொசு, சிலந்தி ஆகிய மூன்றையும் அண்ட விட்டுடாதீங்க. அப்புறம், வீடே ரணகளம் ஆயிடும். ஆல் த பெஸ்ட்!' என்று மூன்று விரோதிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க, என்னை தளபதியாக நியமித்த நிம்மதியில் மனைவி மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
நிம்மதி இழந்து நின்ற எனக்கு, 'வேட்டையாடு விளையாடு' என்ற தலைப்பிட்ட அந்த வினோத விளம்பரம் கண்களில் பட்டது.
'கரப்பு, கொசு, சிலந்தி ஆகிய அனைத்து வகை ஜீவராசிகளையும் எதிர்க்க வல்ல, அமேசான் காடுகளில் வளர்க்கப்பட்ட ஒரே இயற்கையான சாதனம். ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம். லிமிடெட் ஸ்டாக். முந்துவோருக்கு இலவச டெலிவரி . இன்ஸ்டாலேஷன் ஃப்ரீ...' என்ற வாசகங்கள் அடங்கிய அந்த ஃபேஸ்புக் விளம்பரம், கோதுமை அல்வாவாக, என் மனத் திரையில் ஒட்டிக் கொண்டது. அதன் பின்னோட்டத்தை அலங்கரித்த, 'வீட்டை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க, இதைவிட நல்ல இயற்கை சாதனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை' என்ற நூற்றுக்கணக்கான வாசகங்கள், என் கண்களை கட்டிப் போட்டன. நான்கு செட்டுகளுக்கு ஆர்டர் செய்துவிட்டு, ஆவலோடு காத்திருந்தேன். அந்த ஆர்டரை கொடுத்தவுடன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எனக்கு எதிரிகளே தெரியவில்லை.
மனைவி நீண்ட நேரம் வெளியில் சென்றிருந்த ஒரு நல்ல நாளில், ஒரு இளைஞர் பார்சலை கொண்டு வந்தபோது, நான் எனக்குப் பிடித்த மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
'ஃப்ரீ சர்வீஸ் சார். மூலைக்கு ரெண்டு வீதம், வீட்டில் நான்கு மூலைகளிலும், நாலு ஜோடிகளை இன்ஸ்டால் செய்துவிட்டுக் கிளம்பறேன். அனுப்பியிருக்கிற லிங்கை க்ளிக் செய்து, 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துடுங்க...' என்றவரை என்னால் தடுக்க முடியவில்லை.
'ரேட்டிங் போட்டால்தான், அவுங்க வேலையை ஆரம்பிப்பாங்க!' என்றவரிடம், எண்ணெய் கையாக இருந்ததால் என்னையும் அறியாமலேயே போனை நீட்டினேன்.
'ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க. அப்புறம்தான், அவுங்க உங்க கண்ணிலே படுவாங்க!' என்ற அந்த இளைஞர் சொன்னது, எனக்குப் புரிந்தும், புரியாததும் போல் இருந்தது. ஆகவே, அப்போதைக்கு, அந்த சாதனத்தைத் தேடி அலையும் மனநிலையில் நான் இல்லை. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதால், சில மணி நேரங்கள் கண்ணயர்ந்தேன்.
ஒரே கல்லில் மூன்று எதிரிகளை வீழ்த்திய சாதனைக்காக, 'அலர்ஜி கொண்டான்' என்ற பட்டப் பெயர் வழங்கிக் கெளரவிக்கப்படும் விழாவில் கலந்து கொண்டு, கனவு உலகில், கைதட்டல்களைப் பெற்றுக் குதூகலித்துக் கொண்டிருக்கும்போதுதான், 'பகல் வேளையில் என்ன கும்பகர்ண தூக்கம். எழுந்திருந்து, வீட்டை க்ளீன் பண்ற வேலையைக் கவனியுங்க!' என்ற மனைவியின் கர்ஜனை காதுகளைத் தாக்கியது.
'நிர்மாணித்திருக்கும் சாதனத்தைப் பற்றிய தகவலை மனைவியிடம் பகிர விரும்பவில்லை. அதன் ரிசல்ட்டைப் பார்த்து, பாராட்டு பெறும்போது பெருமை அடித்துக் கொள்ளலாம்' என்ற இறுமாப்பில் மிதந்தேன்.
அடுத்த நாள், மகளும், மாப்பிள்ளையும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள். ஆட்டோ கட்டணத்தைப் பார்த்தால் அவருக்கு அலர்ஜி.
'நீங்கள் பேசி, செட்டில் பண்ணிட்டு வந்துடுங்க!' என்ற மனைவி மீது, ஒரு அலர்ஜி லுக் விட்டு, ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேச ஆரம்பித்தேன்.
'பேரம்னா எனக்கு அலர்ஜி. பேசின துட்டைக் கொடுத்துடுங்க!' என்று ஓட்டுநர் கறாராகப் பேசி, பணத்தைக் கறந்தார்.
குளித்து காபி சாப்பிட உட்கார்ந்த மகள், சீலிங் பகுதியைப் பார்த்து, அலற ஆரம்பித்தாள்.
'என்னம்மா?'
'பாம்பு...'
சீலிங் பகுதியை நோட்டம் விட்டு, 'அரணை' என்று கூவினேன்.
'வீட்டுக்குள் அரணை நுழைந்தால், அதிர்ஷ்டம் நுழையும்னு சொல்லுவாங்க!' என்று வாய் முணுமுணுத்தாலும், எனக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. சந்திராயன், நிலவில் இறங்காமல் அடம் பிடித்தபோது விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட பதட்டம், அந்த அரணை சீலிங்கில் இறங்கியபோது என்னுள் இறங்கியது.
அப்பொழுதுதான் சுடச்சுட கையில் காபியுடன் என்ட்ரி கொடுத்த மனைவி, சுவரில் ஒட்டி ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த ஜந்துவைப் பார்த்து, 'முதலைக் குட்டி' என்று அலறி, கை கால்கள் நடுங்கி, காபியை மாப்பிள்ளையின் தூய வெள்ளை டிரஸ்ஸின் மீது கொட்டி, அந்தக் காட்சியைப் பார்க்க மனமில்லாமல் கண்களை மூடிக் கொண்டாள்.
'டிரஸ்ஸில் காபி கொட்டினா, அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க!' அந்தப் பதட்டத்திலும் மனைவி சமாளித்தாள்.
'இந்த டிரஸ், அவருடைய கொள்ளு தாத்தா காலத்திலிருந்து வழிவழியா வந்தது. தலை தீபாவளிக்கு முதல் நாள் போட்டுக்கணும்கறதுதான் அவங்க குடும்ப வழக்கம். அதில், கரை படிஞ்சா, ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடும்னு பயப்படறார்!' என்று பயத்தில், மகள் கேவிகேவி அழ ஆரம்பித்தாள்.
அப்பொழுது, நடக்கக் கூடாதது நடந்து வந்தது. பீரோவின் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட பெரிய பல்லி ஒன்று, ஒய்யாராமாக, அடிமேல் அடி வைத்து, அவர்கள் எதிரில் நடந்து வந்து, ஹலோ சொல்லிவிட்டு, தன் தோழியைச் சந்திக்க, சீலிங்கை நோக்கி வேகமாக நகர்ந்தது.
'இதுதான், வீட்டை க்ளீன் செய்த லட்சணமா?' என்று என்னைப் பார்த்து முறைத்துவிட்டு, மனைவி உள்ளே போனாள்.
அப்பொழுதுதான் அந்த கூக்குரல் நாலு திக்குகளிலும் கேட்டது.
'போனை அப்படியே வீசி கடாசிட்டு உடனே இங்க வாங்க...' என்று என்னை நேருக்கு நேர் பார்க்காமலேயே, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நுகரும் சக்தி படைத்த மனைவியின் பிளிறல், சீலிங்கில் மோதி, ஒட்டியும் ஒட்டாமல் நின்ற பெயின்டை உதிரச் செய்தது. உதிர்ந்த பெயின்ட், என் தலையிலும், பிளிறல் என் காதுகளிலும் புகுந்து நர்த்தனம் ஆடத்துவங்கின.
என் அசைவு சத்தம் கேட்டதுமே, 'வெறும் கையோடு வராதீங்க. உருட்டுக் கட்டையோட வாங்க!' என்று கூலிப்படைத் தலைவன் ரேஞ்சில் மனைவி கட்டளையிட்டாள்.
'ஏன், இந்த உருட்டு உருட்டறே...என்ன ஆச்சு..?' என்று சாவகாசமாகக் கேட்டேன்.
'சாவுக்கு வான்னா, சவுண்டிக்கா வருவீங்க...' இந்த மாதிரி எக்குத் தப்பா சொலவடைகளைப் பயன்படுத்தினால், மனைவி ரொம்பப் பயந்து போயிருப்பதாக அர்த்தம்ங்கறது, எனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம்.
'என்ன ஆச்சு...வீட்டுக்குள்ள புலி பூந்துடுச்சா?'
'புலிக்கெல்லாம் பயந்தவ நான் இல்ல. ஆனா, இப்ப வந்திருக்கிறது புலி இல்ல. ப...லி...இல்ல இல்ல... ப...ல்...லி... அதுவும் மரப் ப...ல்...லி..! ஹாலில் பார்த்தவங்களோட உறவுக்காரங்க மாதிரி இருக்காங்க!' என்று பிளிறல் குழறலாக உருமாறியது.
'எதிரிக்கும் மரியாதைக் கொடுக்க வேண்டும் என்ற பண்பாடு மிக்க குடும்பத்திலிருந்து வந்தவள்' என்பதால், பல்லிக்கும் மரியாதைக் கொடுத்துப் பேசுவது போல் உணர்ந்தேன்.
'வீட்டுக்கு ஒரு மரப்பல்லி வளர்ப்போம்னு சொல்றாங்களே...'
'மரமண்டைங்கறது சரிதான். அது மரம், மரப்பல்லி இல்ல...'
'பூ...பல்லிதானா..?' குரலில் வீரத்தைக் கூட்டணி சேர்த்து, ஆவேசமாகக் கூவினாலும், எனக்கும் பல்லின்னா குலை நடுக்கம்தான்!' என்று அரணை, முதலைக் குட்டி சைஸூக்கு பல்லியைப் பார்த்த பிறகு, அந்த நடுக்கத்தின் ரிக்டர் அளவு அதிகரித்தது.
'பூ, பழம், ஊதுபத்தியெல்லாம் எதுக்கு? அதுக்கு பூஜையா பண்ணப்போறீங்க?' என்று என் குரலில் மலர்ந்த 'பூ'வை வைத்து, என்னைக் கலாய்த்தாள்.
வெளியே பிதுங்கி வழிந்து, பார்ப்பவரை மிரட்டும் உருண்டு திரண்ட கண்கள், ஒலிம்பிக் வீராங்கனைப் போல் ரப்பராக வளையும் உடல், பாம்பாகப் பயமுறுத்தும் வால் ஆகிய பல்லியாரின் சாமுத்ரிகா (அவ) லட்சணங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக என் கண் முன் ஓடி, உள் நடுக்கத்தைக் கூட்டின. வெகு தூரத்தில் பல்லி கிராஸ் செய்தாலே, மிகுந்த மரியாதையுடன் வழிவிட்டு, தடம் மாறும் என்னிடம் பல்லி விஜயத்தை பற்றிய தகவல் பரிமாற்றம் நடந்ததும், 'கட், கட், கட, கட...கட்...கட்' என, பற்கள் தந்தி பாஷை பேச ஆரம்பித்தன.
அதே சமயத்தில் பல்லியார் பற்றிய மலரும் நினைவுகள், மனத்திரையில் ஊர்ந்து ஓட ஆரம்பித்தன.
'வீட்டு ஜன்னல் கதவை லேசா திறந்து வச்சா போதும். காணும் பொங்கலுக்குக் குடும்பத்தோடு பீச்சுக்குப் போவது போல், ஒரு பல்லி குடும்பமே வீட்டுக்குள் நுழைஞ்சு, கிரிக்கெட் ஃபீல்ட் மாதிரி, மிட் ஆன், மிட் ஆஃப், க(ப)ல்லி பாயின்ட்னு வெவ்வேறு பொசிசன்களில் தங்கள் டீமை நிலை நிறுத்துங்க. கதவை நோக்கி வெளிப்புறமாக விரட்டினால், குடியுரிமை கோரி, வீட்டுக்குள் பல திசைகளில் ஓடி, ஒளிந்து போக்குக் காட்டி, ஒரு போராட்டமே நடத்துங்க. பல்லி சாரோ, சாரியோ, ஒரு தடவை ஒத்தையா வீட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டாங்கன்னா, அவங்களை வெளியேத்தறது ரொம்ப...ரொம்ப கஷ்டம். தனி ஒருவனா லேன்ட் ஆறவரு, சீக்கிரமே குடியும், குடித்தனுமுமா வீடு ஃபுல்லா உலா வர ஆரம்பிச்சுருவாரு. கொஞ்சம் பழகிட்டார்னா, 'பிரெக்ஃபாஸ்ட்டுக்கு ஒரு ப்ளேட் கரப்பு கிடைக்குமா'னு கதவு இடுக்கிலிருந்து நம்மளை உத்துப் பார்த்து, 'பச்...பச்'னு சவுண்ட் குடுப்பாரு..!
திறந்திருக்கும் ஜன்னலை காட்டி, 'வந்த வழியே போயிடுங்க'ன்னு ஸ்கேல், கம்பு போன்ற சகல மரியாதையோடு கெஞ்சினால், எதிர்க்கட்சி போல் வெளி
நடப்பு செய்யாமல் , உள் நடப்பு செய்து, சுவர் கடிகாரத்துக்குப் பின்புறம் போய் மறைஞ்சு நின்னு, பெப்பப்பே காட்டுவாரு! குச்சியை வச்சு தட்டினால், ஒரு பக்கச் சுவரிலிருந்து, எதிர் சுவருக்கு தாவி, பறக்கும் பல்லி பட்டம் வாங்கிடுவாரு. அந்த சர்க்கஸ் வித்தையின் போது, நம்ம மேல விழுந்து விளையாடுவாருங்கற பீதியில ஒரு பதட்டம் உண்டாகும் பாருங்க... அனுபவிச்சங்களுக்குத்தான் அந்தக் கொடுமை புரியும். அதற்குப் பெயர்தான் 'உதறல் மொமண்ட்.'
'கிட்ட வந்துட்டாங்க... ஒருத்தர் இல்ல... ரெண்டு பேர்... கண் கொத்திப் பாம்பு மாதிரி, என்னையே முழிச்சு முழிச்சிப் பார்க்கறாங்க... தை வெள்ளியில், முட்டை, பால் வைக்கறேன்னு வேண்டிக்கிட்டும் நகர மாட்டேங்கறாங்க... இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?' என்று விக்ரம் லேன்டர் நிலவை நெருங்கிவிட்டது போலக் கூவினாள்.
'நான் ஒண்ணும் சும்மா இல்ல பாத்துக்கோ... எதிரியின் பலம், பலவீனத்தைப் பற்றி யோசிச்சுக்கிட்டு இருக்கேனாக்கும்...'
'இப்ப அந்த ஆராய்ச்சி ரொம்ப அவசியமாக்கும்? உள்ளே வந்து, இவரை வெளியில விரட்டுங்க. இல்லைன்னா இன்னைக்குச் சாப்பாடு கிடையாது.' பயத்தில் பல்லிக்கு மரியாதைக் கொடுத்தவள், அந்த இக்கட்டில் கூட, எனக்கு தண்டனை அறிவிக்க அஞ்சவில்லை.'
தண்டனையிலிருந்து தப்ப, தகவல் களஞ்சி
யமான (?) யூ டியூபை ஓடவிட்டேன்.
'பல்லியை ஓட ஓட விரட்டுவது எப்படி?'ன்னு பல பேர், புருடா பல்(லி)லவியைப் பாடினாங்க. ஆனா, ஒண்ணு. எல்லா புருடாவும் ஒரே மாதிரி புருடாதான். 'மயில் மீது அமர்ந்திருக்கும் முருகன் படத்தை வீடு முழுவதும் மாட்டி வைங்க' போன்ற ஆன்மிக ஆலோசனைகளும் அதில் அடங்கும். எதிரியை எப்படித் தாக்கறதுன்னு வியூகம் வகுத்துக்கிட்டு இருந்தப்பதான், அந்தத் திடீர் தாக்குதல் நடந்துச்சு.
என் எண்ண ஓட்டங்களை 'பல்லிபதி' மூலம் அறிந்தது போல், அந்த ரூம் சீலிங்கில், 'ல...லா...' என்று பாடிக்கிட்டிருந்த மற்றொரு பல்லியார், என் மீது சீறிப் பாய்ந்தது போல் இருந்த சீன் வரைக்கும்தான் எனக்கு நினைவு இருந்துச்சு.
மயக்கம் தெளிஞ்சு கண் விழிச்சப்ப, என்னைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தினருக்கு, உட்கார்ந்து கொண்டே, மனைவி ரன்னிங் காமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
'என் மேல விழுந்துடக்கூடாதுன்னுட்டு, தன் மேல ஒரு கரப்பான் பூச்சியை விட்டுக்கிட்டு, பல்லியை தன் பக்கம் இழுத்த இவர் சாமர்த்தியமே சாமர்த்தியம். அதோடு நிக்கலை. மயக்கம் போட்டது போல நடிச்சு, வீட்டுக்கு வெளியில போய் உருண்டதில், பயத்தில் பல்லி, புற முதுகுக் காட்டி ஓடிடுச்சு...' என்று கரகரப்புக் குரலில் மனைவி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தது காதில் லேசாக விழுந்து, உற்சாகத்தைக் கூட்டியது. ஆனால், என் கழுத்தில் முகாமிட்டிருந்த கரப்புங்கற பிராணி பற்றி, 'இவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்' என்பது அவளுக்குத் தெரியாது. உதறல் எடுத்து, அந்த பிராணியை உடலிலிருந்து உதற நான் தன்னிச்சையாக நர்த்தனம் ஆடியபோது, பேய் விரட்டு போல், பல்லி விரட்டில் எனக்கு சாமி வந்துவிட்டதாக நினைத்து, ஏதோ சாமி குத்தம் போல'னு நினைச்சு சிலர் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
'இது ஜல்லிக் கட்டு இல்ல...பல்லிக் கட்டு'ன்னு ஒருவர் மொக்க ஜோக் அடிச்சதும், ஒரு குட்டி பல்லியையாவது அவர் மீது ஏவனுங்கற வெறியை என்னுள் கூட்டியது.
'இனிமேல, இந்த அப்பார்ட்மென்ட்டில் யார் வீட்டில 'பல்லி விரட்டு'ன்னாலும் இவரை கூப்பிட்டுக்கோங்க! அந்த சமூக சேவைக்காக இவரை நான் நேந்து விடறேன்...' என்று கோயிலுக்கு காளையை நேந்து விடற ஸ்டைலில் மனைவியின் அறிவிப்பு, என் பீதியை கூட்டியது. இதுதான் சாக்குன்னு, ஐம்பது ஃப்ளாட்காரர்கள், என்னுடைய அப்பாயின்ட்மென்ட் தேதிக்கு, மனைவியிடம் வரிசையில் நின்றனர்.
'இந்தக் காலத்து பல்லியெல்லாம், பாம்பு போல இருக்கு. அதனால, எல்லோருமா சேர்ந்து, இவருக்கு ஒரு மகுடி வாங்கிக் கொடுத்துடுங்கோ...அதோடு பல்லி விழும் பலனை சொல்ல ஒரு பஞ்சாங்கமும்...' என்று அம்மணி என்னுடைய தொழிலையே மாற்றிக் கொண்டிருந்தார்.
மயக்கம் தெளிந்து நான் எழுந்தவுடன், எனக்கு முதலில் கை கொடுத்து பாராட்டியவர் என் மாப்பிள்ளைதான் என்பதை உணர்ந்தவுடன், சற்று வெட்கமாக இருந்தது.
'உங்களுக்கு பல்லின்னா அலர்ஜி இல்லையா?' என்றேன்.
'சுற்றுச் சூழல் துறையில் டிகிரி வாங்கி இருக்கேன். பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கும் ஒவ்வொரு ஜீவ ராசி மூலமாக, மனிதர்களுக்குப் பயன் உள்ளது. தேனீக்கள் இல்லைன்னா, தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடக்காது. பல்லி போன்ற ஜீவராசிகள் இல்லைன்னா, அவை உணவாக உண்ணும், பூச்சிகள், கரப்பு, சிலந்தி போன்ற ஜீவராசிகள் பெருகிடும். அவைகளை அடியோடு அழிக்க முற்பட்டால், சமநிலை குறைஞ்சிடும். அவை, நம்ம உணவைத் தீண்டாமல், கவனமாக இருந்தாலே போதும்' என்று 'சொற்பொழிவு... சாரி பல்லி பொழிவு...' ஆற்றிய மாப்பிள்ளையை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
'என் மனைவி, உங்க மேல, பெரிய அலர்ஜி புராணமே பாடினாங்க!அதெல்லாம் என்ன கோபால்..?' என்று என்னையும் அறியாமலேயே கேள்வி பட்டாசு வெடித்துச் சிதறியது.
'வீடு நிறைய பழைய சாமான்கள் குவிந்து கிடக்கு. வேண்டாதவைகளை வெளியே தூக்கிப் போட்டு, வீட்டை சுத்தமாக வச்சிருக்க மாட்டேங்கறார்னு அத்தை கம்ப்ளெயின்ட் பண்ணாங்க! அதான், எங்க பேரைச் சொன்னாலாவது, வீடு க்ளீன் ஆகுதான்னு பார்த்தோம். அதற்கு மாற்றாக, வேற ஏதோ பண்ணிட்டீங்க போல இருக்கு. என்ன பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா, மாமா?'
'ஃபேஸ் புக்கில், பூச்சி விரட்டு சாதனம்னு விளம்பரம். ஆனா, அந்த சாதனம், நம்மூர் பல்லிதான்னு இப்ப புரியுது. வீட்டில் இருக்கிற பழைய குப்பையை எல்லாம், வெளியே தூக்கிப் போட்டாலே, பூச்சிகள் குறைந்து, பல்லியின் ஆதிக்கமும் குறையும். அதை இப்பவே செய்துடறேன் மாப்பிள்ளை...'
'அப்படியே, வெளியே தூக்கிப் போடப் போற குப்பைகளை க்ளியர் பண்ற துப்புறவுத் தொழிலாளிக்கும் புது டிரஸ் கொடுத்திடுங்க, மாமா!' என்று மாப்பிள்ளையின் ஆலோசனையைக் கட்டளையாக ஏற்றேன். அந்த சந்தோஷத்தில், அலர்ஜி தீபாவளி, அனைவருக்கும் எனர்ஜி தீபாவளியாக மாறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.