
அருள்செல்வன்
செவித்திறன் குறைபாடு உடையவர்கள், மெளனமே மொழியாக உடையவர்களுக்குச் சைகை மொழியைக் கற்றுத் தருகிறார் விஜயா பாஸ்கரன். வாய் பேச முடியாதவர்களுக்கான அனைத்து சட்ட, மருத்துவ சிக்கல்களுக்கும் இவரது சேவை உதவுகிறது. இந்தச் சேவையில் பொன்விழா கண்ட விஜயா பாஸ்கரனுடன் ஒரு சந்திப்பு:
சைகை மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
இந்த சைகை மொழி என்னுடன் அறுபது ஆண்டுகாலத் தொடர்புடையது. பொதுவாகக் குழந்தைகள் பேசத் தொடங்கும் பருவமான மூன்று வயது முதல் தொடங்கி, இன்றும் தொடர்கிறது. எனது தாய் மொழி தமிழ் மொழியில் பேசியதை விட சைகை மொழியில் பேசியது தான் அதிகம். ஏனென்றால், எங்கள் பெற்றோரின் ஆறு பிள்ளைகளில் எனது அக்கா, அண்ணன், தம்பி என்று ஒன்று விட்டு அடுத்தவர் என மூன்று பேருக்குமே பேச்சு வராது. நான் நான்காவது நபர். அவர்கள் என்னிடம் சைகையால்தான் பேசுவார்கள்.
இப்படி உடன் பிறந்தோர் பேச முடியாமல் இருப்பதற்கு ஷோடா என்று பெயர்.
அவர்களிடம் ஜாடையாகப் பேசிப் பேசி அந்த மொழியை நான் கற்றுக்கொண்டேன். என் பெற்றோரை விட அவர்களுடன்தான் நான் சைகையால் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பேன். அவர்களுக்கான அனைத்துத் தகவல் தொடர்புகளும் என் மூலமே நடந்தது. அவர்கள் இயல்பாக வெளிப்படுத்திய சைகையைப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன்.
நான் ரேடியோ கேட்கும் போதும், எங்களிடம் அப்பா இரவில் கதை சொல்லும் போதும், அது எல்லாம் என்னவென்று மறுநாள் காலை என்னிடம் கேட்பார்கள். நானும் விளக்கிச் சொல்வேன்.
அப்போதெல்லாம் அடிப்படையான சைகை மொழிதானே இருந்திருக்கும்?
அப்போது இருந்தது அடிப்படையானது தான். முறைப்படுத்தப்பட்ட கல்வி எதுவும் இல்லை. சில அடிப்படையான விஷயங்களைத்தான் பரிமாறிக் கொள்வோம். காலப்போக்கில் நம் மொழி மாறியது போல் அவர்களது மொழியும் மாறியது. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. இதில் ஏஎஸ்எல் எனப்படும் அமெரிக்கன் சைன் லாங்க்வேஜ், அதாவது அமெரிக்க சைகை மொழி; ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சைன் லாங்க்வேஜ், அதாவது இந்திய சைகை மொழி என்று இரண்டு உள்ளன.
நமது இந்திய சைகை மொழி என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னையில் முதலில் சாந்தோம் சிஎஸ்ஐ பள்ளியில் டெஃப் ஸ்கூல் இருந்தது. அது 125 ஆண்டுகள் கடந்த பள்ளி. அதில்தான் எனது அண்ணன் படித்துக் கொண்டிருந்தான். அதற்கு முன்பு அவர்களுக்காக அப்படி எந்தப் பள்ளியும் கிடையாது. அண்ணன் அங்கே கற்றுக் கொண்டதை என்னிடம் சொல்ல, 'அது அல்ல இது' என்று அவன் சில மாற்றங்களை என்னிடம் சொல்லச் சொல்ல, அவனுக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்த சைகை மொழியையும் நான் கற்றுக் கொண்டேன்.
அதற்குப் பிறகு அந்த மொழியுடனேயே வாழ ஆரம்பித்து விட்டேன். அப்போது ஆட்டோ எல்லாம் கிடையாது . நாங்கள் பஸ்ஸில் தான் சினிமாவுக்குப் போவோம். அப்போது என் அக்காவைப் பார்த்துச் சிலர் கிண்டல் செய்வார்கள். அதைப் பார்த்து நான் அவளிடம் சொல்வேன். உடனே அவள் அதைப் புரிந்து கொண்டு அவர்களை அடிக்கச் சென்று விடுவாள். அதற்குப் பிறகு பள்ளியில் விளையாட்டு விழா, கலை விழாக்களில் நான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க ஆரம்பித்தேன். என்னை விடவே மாட்டார்கள்.
இந்த சைகை மொழியில் எப்படி வளர்ந்தீர்கள்?
அப்போது சாந்தோமில் 'மெட்ராஸ் டெஃப் அசோசியேஷன்' என்ற பெயரில் செவித்திறன் இன்றிப் பேச இயலாதவர்களுக்கான சங்கம் இருந்தது. அங்குள்ள நிர்வாகிகளுக்குள் தகவல் தொடர்பு சிக்கலாக இருந்தது. அப்போது என் அண்ணன் பேச இயலாதோருக்கான பள்ளியில் படித்து வந்தான். அவன் என் தங்கை நன்றாகச் செய்வாள் என்று என்னை அழைத்துக் கொண்டு சென்றான்.
அப்படி நான் அங்கே சென்று அவர்களுக்குள் தொடர்புகளை எளிதாக்கினேன். அப்போது தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன், நீ தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அது முதல் சங்கத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் நான் உதவினேன். நன்கொடை வாங்குவதற்கு வெளியில் செல்லும் போதெல்லாம் நான் இடையில் நின்று அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று விளக்கிச் சொல்லுவேன். இதுதான் என் ஆரம்பம்.
இதில் மறக்க முடியாத, சுவாரஸ்யமான அனுபவங்கள்?
எனக்கு 12 வயது இருக்கும்போது ஒரு கேபியஸ் கார்பஸ் வழக்கு வந்தது. அதாவது ஆட்கொணர்வு வழக்கு. சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பேச்சு வராது. அப்போது நீதிபதி 'இவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. சைகை மொழி தெரிந்தவர்களை அழைத்து வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்போது சங்கத்தின் மூலம் என்னைப் போகச் சொன்னார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு 12 வயதில் நீதிமன்றம் செல்வதென்றால் பயம். அனுப்ப முடியாது என்று மறுத்தார்கள்.
பிறகு இது முக்கியமான வழக்கு என்று சமரசம் செய்து, என்னை அழைத்துக் கொண்டு சென்றார்கள். நீதிபதி விசாரணையில் அவள் சைகையில் சொல்வதை நான் கூறினேன். அப்போது நீதிபதி என் வயதைக் கேட்டு வியந்து விட்டார். ஒரு சின்ன பெண் சொல்வது சரியாக இருக்குமா? மாற்றிச் சொல்கிறாளா? என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது.
நான் சொன்னதை அப்படியே எழுதி வாய் பேசாத அவளிடம் காண்பித்தார்கள். அவளுக்கு எழுதப்படிக்கத் தெரியும். எனவே நான் சொன்னது சரிதான் கூறி அவள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள். இதுதான் நான் முதலில் நீதிமன்றம் சென்ற வழக்கு. அதற்குப் பிறகு இதுவரை 800 வழக்குகளிலாவது நான் இப்படிச் சென்றிருப்பேன்.
கற்பழிப்பு, திருட்டு, விவாகரத்து வழக்குகளில் அவர்கள் கருத்தை அறிவதற்கு இப்போதும் என்னை அழைக்கிறார்கள். தி நகர் காவல் நிலையத்தில் இருந்து அடிக்கடி அழைப்பு வரும். அங்கே இப்படிப் பேச முடியாதவர்கள் திருடுவது பற்றிய வழக்குகள் அடிக்கடி வரும். அப்போது என்னை அழைப்பார்கள். அவர்கள் விசாரிக்கும்போது எதுவுமே சொல்ல மாட்டார்கள். ஆனால் சிசிடிவி கேமராவில் இருக்கிறது என்பார்கள். அப்போது நான் அவர்களிடம் பேசிப் பேசி உண்மையை வரவழைப்பேன். தாங்கள் வறுமைக்காக இப்படித் திருடியதாகச் சொல்வார்கள்.
'எங்கள் வீட்டில் மேலே ஒரு அட்டைப்பெட்டி உள்ளது. அதில் ஒரு டப்பாவில் நகையை ஒளித்து வைத்திருக்கிறேன்' என்று சொல்வார்கள். திருடிய பொருட்களையும் கூறிவிடுவார்கள். ஏன் இப்படிச் செய்தாய் என்றால், என் இரண்டு பிள்ளைகள் பசியால் அழுவதைப் பார்த்து தாங்க முடியவில்லை. அதனால் திருடினேன் என்பார்கள். இதற்குத் தண்டனை என்ன தெரியுமா என்றால், 'தெரியும்... என்ன ஒரு ஆறு மாதம் உள்ளே போடுவார்கள். அங்கே எனக்கு வேளைக்குச் சாப்பாடு கிடைக்கும் . ஆறு மாதத்தில் வெளியே வந்து விடுவேன்' என்று சொல்வார்கள்.
வேறு என்ன வகையில் உதவி வருகிறீர்கள்?
பேசமுடியாதவர்களுக்கு கொரோனா காலத்தில் மருத்துவர் நேரடியாகப் பார்க்காமல் சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது . இவர்கள் பேசுவது அவர்களுக்குத் தெரியாது. அப்போது பல இடங்களுக்கு சென்று நான் உதவினேன். அப்போதெல்லாம் எனக்கு இரவு பகலாக போன் வந்து கொண்டே இருக்கும்.
அப்போது வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தபோது சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்பட்டார்கள். சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் உணவுகளை எங்கே பெற்றுக் கொள்வது போன்ற விவரங்களை நாங்கள் தான் சொல்ல வேண்டி இருந்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி கடற்கரை ஓரம் பேச இயலாதவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். சுனாமி காலத்தில் அவர்களுக்கான தேவைகள் நிறைவேற உதவி செய்தது மறக்க முடியாதது.
இது சார்ந்த கல்வி அனுபவம் எப்படி?
பாடத்திட்டம் என்று இருக்கிறபோது ஏபிசிடி முதல் எண்களில் 1, 2, 3 வரை எல்லாமே சைகையில் உண்டு. எல்லா வார்த்தைகளுக்கும் சைகை உண்டு. இது பற்றி படங்களுடன் நாங்கள் புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிட்டோம். தமிழிலும் கொண்டு வந்துள்ளோம். தமிழில் எழுத்துகள் நிறைய இருப்பதால் கற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சைகை மொழியில் ஒரு கையை மட்டும் வைத்துச் செய்யும் மொழி ஒன்று, இரண்டு கைகளாலும் செய்வது இன்னொன்று உண்டு. இதில்அமெரிக்கன், இந்தியன் சைன் லாங்க்வேஜ் என்று இரண்டு உண்டு. நாம் பயன்படுத்துவது இந்தியன் சைன் லாங்க்வேஜ்.
காலமாற்றத்தில் இப்போது அமெரிக்க சைகை மொழியை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது செய்வதற்குச் சுலபமாக, சுருக்கமாக இருக்கிறது. எப்படி என்றால், அதில் இலக்கணம் இருக்காது. பார்த்தேன், வந்தேன், செய்தேன் இப்படித்தான் சுருக்கமாக இருக்கும்.
வேறு யாரெல்லாம் இந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
இந்த மொழியை எத்தனை நாட்களில் கற்றுக் கொள்ள முடியும்? என்று கேட்கிறார்கள். அடிப்படை என்றால் 10 நாட்களில் கற்றுக் கொள்ளலாம். இதிலேயே நிறைய நிலைகள் உள்ளன. அனைவருக்கும் இது பற்றிய அடிப்படைகள் தெரிந்திருந்தால் பிறருக்கு உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.
இப்போது முதியோர் இல்லங்களுக்கெல்லாம் நான் செல்கிறேன். அங்கே வயதாகிவிட்டதால் அவர்களுக்குக் காது கேட்பதில்லை . என்ன சொல்வது யாருக்குப் புரியப்போகிறது என்று அவர்கள் பேசாமலேயே இருந்து விடுகிறார்கள். படுக்கையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் சைகை மூலமாக ஏதாவது பேசட்டும் என்று என்னிடம் இந்த மொழியைச் சொல்லித்தரக் கேட்கிறார்கள்.
எனவே அங்கே சென்று அடிப்படையான விஷயங்களைச் சொல்லித் தருகிறேன். அவர்களுக்கான பிரச்னைகள் என்றால், கழிப்பறை செல்ல வேண்டும், வாந்தி வருகிறது, தண்ணீர் குடிக்க வேண்டும், இந்த இடத்தில் வலிக்கிறது, இந்த இடத்தில் ஏதோ செய்கிறது போன்று தேவை என்னவோ, அதை மட்டும் சைகையில் சொல்வதற்குக் கற்றுக் கொடுக்கிறேன். காவல்துறையினர், மருத்துவர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர் ஆகியோருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.
போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்வார்கள். போலீஸ் விசாரிக்கும்போது, 'எங்களுக்கு மட்டும்தான் காது கேட்கவில்லையா? இயர் பட்ஸ், ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் விதிகளை மதிக்கிறார்களா?' என்று வாதம் செய்கிறார்கள். எங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் 50% ஆவது காது கேட்க வேண்டும் என்கிறார்கள். இப்படி ஒரு விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. வெளிநாடு செல்பவர்கள் பார்க்கிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டு வந்து இங்கேயும் அப்படியே கேட்கிறார்கள். பின்னால் வருவதைக் கண்ணாடியில் நாங்கள் பார்த்துக் கொண்டு ஓட்டுகிறோம் என்கிறார்கள்.
உங்கள் செயல்பாடுகளில் குடும்பத்தினர் ஒத்துழைப்பு எப்படி?
இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததால் என்னைத் திருமணம் செய்து கொள்ளவே பலரும் தயங்கினார்கள். பெரிய சவாலாக இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் நான் திருமணம் செய்து கொண்டேன். என் கணவர் பெயர் பாஸ்கரன். அவர் மீன்வளத்துறையில் பணியாற்றினார். எனக்கு ரூபா என்கிற மகளும் ,லோகேஷ் என்கிற மகனும் உள்ளனர். அவர்கள் என் பணிக்குத் தடை சொல்வதில்லை.
திரைப்படத்தில் உங்களது பங்களிப்பு எப்படி?
நான் 36 படங்களில் பணியாற்றி இருக்கிறேன். முதல் முதலில் 'சுப்சுப் கே' ஹிந்திப் படத்தில் பணிபுரிந்தேன். ஷாஹித் கபூர், கரீனா கபூர் நடித்த படம் அது.
பிறகு தமிழில் ஜோதிகா நடித்த 'மொழி', பிரபுதேவா நடித்த 'மெர்க்குரி', ஜெயம் ரவி நடித்த 'சைரன்' என்று பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். விஷால் நடித்த 'லத்தி சார்ஜ்' படத்தில் சொல்லியும் கொடுத்திருக்கிறேன், நானும் நடித்திருக்கிறேன். இப்போது 'ஈகை' என்ற படத்தில் பணியாற்றி வருகிறேன். திரைப்படங்களில் இப்படி வாய் பேச முடியாதவர்கள் பாத்திரம் வரும்போது அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சி, துன்பம், கோபம், வருத்தம் வரும்போது அவர்களது முகபாவனை எப்படி இருக்கும் உடல் மொழி எப்படி இருக்கும் என்பதை நடிப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.
அந்தக் காலத்தில் சினிமா பார்த்து விட்டு வரும்போது என் அக்கா எம்ஜிஆர் மாதிரி, சிவாஜி மாதிரி அப்படியே நடித்துக் காட்டுவாள். அப்போதிலிருந்து எங்களுக்குள் நடிப்பு வர ஆரம்பித்துவிட்டது. நாங்கள் நாலு பேருமே ஒரு நாடகம் போல் நடிப்போம்.
இப்போது இதில் ஏராளமான தொழில்நுட்ப மாற்றங்கள் வந்துவிட்டன. ஏ.ஐ. கூட வந்து விட்டது. நான் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 12 ஆண்டுகளாக சைகை மொழிபெயர்ப்பாளராக இருக்கிறேன். இதுபோல மேடைப்பேச்சு, கட்சி கூட்டம் போன்றவற்றிற்கும் செய்தி மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வருகிறேன்.
பேச்சு மாற்றுத் திறனாளிகள் தங்கள் உரிமைகளாக என்ன எதிர்பார்க்கிறார்கள்?
சமூகத்தில் தங்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்கிறார்கள். சில பள்ளிகளில் உதட்டசைவு கொண்டு பேசுவதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். அது தவறானது என்றும் சைகை மொழி தான் தங்களுக்கு வேண்டுமென்று இவர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனை, ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் செய்தி மொழிபெயர்ப்பாளர்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது தானே? தொலைக்காட்சிகளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நேரலை நிகழ்ச்சிகளுக்கும் ஒரு பக்கம் சைகை மொழி தேவை என்று அவர்கள் கேட்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் தாங்களும் பங்கு பெறுகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.