
உலகின் பல நாடுகளில் போர்மேகம் சூழ்ந்து உயிரிழப்பையும் பெருத்தச் சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. டிரோனை நற்காரியங்களுங்காகப் பயன்படுத்துவதற்குப் பதில் போருக்குப் பயன்படுத்தி, பெருத்தச் சேதங்களை ஏற்படுத்துகின்றனர். இருப்பினும் சில நாடுகள், 'யுத்தமா? அப்படியென்றால் என்ன?' என கேட்கும் அளவில் உள்ளன.
அவை:
சுவிட்சர்லாந்து
உலகில் ராணுவக் கொள்கையில் எப்போதும் நடுநிலை வகித்து வரும் நாடு. இதுவரை எந்த வெளிநாட்டுடனும் சண்டையிட்டதில்லை.
1815இல் அருகாமை நாடுகள் போர்ச்சூழலில் இருந்தபோது பாரிஸில் அனைவரையும் அழைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதன்மூலம் அந்தப் பகுதியில் நிரந்தர அமைதிக்கு வழி ஏற்பட்டது.
இப்போதும் உலகில் எந்த பகுதியில் சண்டை நடந்தாலும் அங்கு அமைதி திரும்ப முயற்சிக்கிறது. எந்த உலக ராணுவக் கூட்டணியிலும் உறுப்பினராக இல்லை. அதேபோல், யாருக்கும் துருப்புகளோ ஆயுதங்களோ அனுப்புவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளது.
ஐஸ்லாந்து
இந்த நாட்டில் தனியாக ராணுவம் கிடையாது. ராணுவத்துக்கு அமெரிக்காவை நம்பியுள்ளது. உதவிக்கு நேட்டோ உறவு இருக்கிறது.
ஒருமுறை 'ஜப்பான் உள்ளே புகுந்து விடுமோ?' என பிரிட்டிஷ் படையுடன் வந்து அமர்ந்தது. பின்னர், அமெரிக்கா. இப்போது அமெரிக்கப் படைகளும் திருப்பி அனுப்பப் பட்டுவிட்டன. ஐஸ்லாந்து ஒருபோதும் போரில் ஈடுபட்டதில்லை.அந்த நாட்டின் அரசியல் அமைப்பில் போரை அறிவிக்க எந்த வழிமுறையும் இல்லை.இங்கு தற்போது கடலோர காவற்படை மட்டுமே உள்ளது.
கோஸ்டாரிகா
1948இல் ராணுவத்தைக் கலைத்து முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. அதற்கு செலவிட்ட பணத்தை அமைதிக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தியது. 'அனைத்து நாடுகளும் அமைதியாக வாழ வேண்டும்' என விரும்பும் இந்த நாடு, அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு உதவுகிறது.
வாடிகன்
இன்று வரை போர் இல்லை. யுத்தம் என்ற நிலை வந்தால் இத்தாலி உதவும். வாடிகனில் ராணுவம் என்பது ஸ்விஸ் கார்டுகள்தான். இவர்கள் போப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாவலர்கள்.
சான் மரினோ
எப்போதுமே நடுநிலை வகிக்கும் நாடு. இருந்தும் இரண்டாம் உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்டது. முதலில் கூட்டுப் படையும் அடுத்து ஜெர்மனியும் இதனை ஆக்கிரமித்தன. இரண்டாம் உலக யுத்தத்தால், ஒருலட்சம் இத்தாலியர்கள் வந்தபோது, அகதிகளாக ஏற்றுக் கொண்டது. 'போரைவிட சமாதானமே சிறந்தது' என முடிவெடுத்து, கூட்டுசேரா நாடாக இயங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.