தமிழ் ரசிகர்களுக்கு நன்றி மமிதா பைஜூ!
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டூட்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெள்ளியன்று ரிலீஸாகியுள்ளது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் 'டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகிணி, சரத்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் விளம்பர நிகழ்வில் மமிதா பைஜூ பேசியது:
'மிகப் பெரிய அன்பு கொடுத்து ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு நன்றி. உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி. பிரதீப்புக்கும் நன்றி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நான் படப்பிடிப்பில் அமைதியாக இருந்தால் சரத்குமார் வந்து, 'ஏன் என்னாச்சு உனக்கு?' என்று கேட்பார். யாரும் அதை கவனித்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர் கவனித்து என்னிடம் கேட்பார். அந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார். ஏற்கெனவே நான் சாய் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கை கூடவில்லை. இந்த முறை அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி' என்றார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் பிரியங்கா மோகன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2021இல் வெளியான 'டாக்டர்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா மோகன், அண்மையில் வெளியான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுடன் நடித்திருந்தார்.
இவ்வாறிருக்க, பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் என சில படங்கள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. 'அவை ஏ. ஐ.யால் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள்' என பிரியங்கா மோகன் மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரியங்கா மோகன், 'என்னைத் தவறாக சித்தரிக்கும் வகையில் ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன. தயவு செய்து அந்தப் போலி புகைப்படங்களை ஷேர் செய்வதையோ, பரப்புவதையோ நிறுத்துங்கள்.
ஏ.ஐ.யை படைப்பாற்றலுக்குப் பயன்படுத்த வேண்டும். தவறான செயல்களுக்கு அல்ல. நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன ஷேர் செய்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம்' என்று தனது ட்வீட்டில் வலியுறுத்தியிருக்கிறார்.
மன மாற்றங்களை விவரிக்கும் நிறம்!
கிராபிக்ஸ், அனிமேஷன் இயக்குநரும், தொலைக்காட்சி இயக்குநருமான கிருஷ்ண பலராம் 'நிறம்' படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகம் ஆகிறார். கே. ஸ்கொயர் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப் முதன்மை வேடங்களில் நடிக்க, நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்மேகா, ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, திருநாவுக்கரசு, கஜராஜ், அன்பு மயில்சாமி, சிநேகா குப்தா, கோபால் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர்.
இயக்குநர் பேசும்போது, 'ஒரு குற்ற வழக்கில் தொடர்புபடுத்தப்படும் நாயகன் சதி வலைகளை தகர்த்தெறிந்து திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணர்வதே திரைக்கதை. பச்சோந்தி போல் மாறும் மனிதர்களின் பல்வேறு நிறங்களைக் குறிக்கும் வகையில் இந்தப் படத்துக்கு 'நிறம்' என்று பெயரிட்டிருக்கிறோம். ஒரு சிறிய திரைப்படமாக தொடங்கி இன்று பெரிய பட்ஜெட்டில் நிறைவடைந்துள்ளது.
இதன் கதை அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் என்பதால் பன்மொழிப் படமாக அகில இந்திய அளவில் உருவாக்கி இருக்கிறோம். அனைத்து மொழி ரசிகர்களும் இப்படத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
டி. இமான் 'நிறம்' திரைப்படத்துக்கு இசையமைக்க, சான்டானியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்ய, வி.ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். விவேகா, பா. விஜய் பாடல்களை இயற்றியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.