தீபாவளி வெடிச்சத்தம், காற்று மாசு, மழையினால் ஏற்படப்போகும் தொற்று உபாதைகள், தேர்தல் பிரசார ஒலி போன்றவை தமிழகத்தை உலுக்க இருக்கும் நிலையினால் உணர்வு உறுப்புகளின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகிறது. இதற்கான ஆயுர்வேத பரிந்துரைகள் என்ன?
மாணிக்கம், கும்பகோணம்.
இன்றைய நகர வாழ்க்கையில் தீபாவளி மழை மற்றும் தேர்தல் பிரசார வாகனங்கள், பெரும் ஒலி அமைப்புகள், வாகனப் புகை, தூசு மற்றும் காற்று மாசு ஆகிய அனைத்தும் நமது உணர்வு உறுப்புகளாகிய காது, கண் மற்றும் மூக்கு ஆகியவற்றின் நலத்தை நேரடியாகப் பாதிக்கின்றன.
தீபாவளிப் பட்டாசுகள், வெடிகுண்டுகள் மற்றும் தேர்தல் பிரசார வாகனங்களில் இருந்து வரும் பெரும் சத்தம் நமது காதின் நரம்பு அமைப்பில் வாத தோஷ சீற்றத்தின் காரணங்களாகிய வறட்சி, லேசு, நுண்ணியத் தன்மை, உந்துதல் போன்றவற்றால் காதில் எந்நேரமும் ஓசை, செவியின் ஒலியிழப்பு, தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கக்கூடும். கார்ப்பாஸாஸ்த்யாதி, க்ஷீரபலா, வசாலசுனாதி போன்ற மூலிகைத் தைலங்களில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி இளஞ்
சூடாகக் காதில் விட்டு வைத்திருந்து, வடித்தெடுத்த பிறகு துடைத்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் வாத தோஷத்தின் சீற்றத்தைத் தவிர்க்கலாம்.
தீபாவளிப் பட்டாசு மற்றும் வெடிகுண்டுகளில் இருந்து வெளிப்படும் கார்பன், சல்பர், நைட்ரேட் துகள்கள் நமது மூக்கினில் நுழைந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், வெளியிடுதல் போன்ற இயற்கையான செயல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் சளி, தும்மல், மூக்கடைப்பு, கண்களில் எரிச்சல், நீர்த்துளி வடிதல், மூச்சுக்குழாயில் தொற்று, இருமல், நுண்ணுயிர்த் தொற்றுகள் ஏற்படக் காரணமாகின்றன.
கபம் மற்றும் வாத தோஷ சீற்றத்தினால் ஏற்படும் இந்த உபாதைகளை 'நஸ்யம்' என்னும் மூக்கினில் மருந்தைவிட்டுச் சுத்தப்படுத்தும் சிகிச்சை முறையும் 'தூம பானம்' எனும் மூலிகைப் புகைகளை உட்செலுத்தும் சிகிச்சைகளால் குணப்படுத்தலாம். அணுதைலம், ஊமத்தம் இலை போன்றவை இதற்குப் பயன்படும்.
தொடர்ச்சியான பெரும் ஒலி, புகை, மழை, கூட்ட நெரிசல் போன்றவை மனதை பல இடங்களுக்கு உடலில் எடுத்துச் செல்லும் குழாய்களிலும் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, மன அழுத்தம், கோபம், எரிச்சல், கவனச் சிதைவு, தூக்கமின்மை ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கும். மனமும் உணர்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருதப்படுகிறது.
தினசரி பிராணாயாமம் (நாடி சுத்தி) ஒலி அதிர்வுகளால் ஏற்படும் நரம்பு சிதைவைக் குறைக்கும். தியானம் மன அமைதியை வழங்கி மனதை ஏந்திச் செல்லும் குழாய்களைச் சுத்தமாக வைத்திருக்கும். இரவில் மஞ்சள் தூள் கலந்த சூடான பால் சாப்பிடுவது உடல், மனநலம் இரண்டிற்கும் ஏற்றது.
காற்று மாசு நேரங்களில் துளசி,மஞ்சள்,சுக்கு, மிளகு, சீரகம், தனியா பட்டை சேர்த்த உணவுகள் சிறந்தவை. பழைய எண்ணெய், சோடா கலந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும். வாத தோஷத்தின் சமநிலைக்கு உருக்கிய நெய்யை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்.
தலை சார்ந்த உபாதைகளுக்கு திரிபலா சூரணம் தினமும் இரவில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். மேலும் காலையில் எழுந்ததும் திரிபலா கஷாயத்தால் கண் கழுவுதல், கண்ணின் சோர்வை நீக்கி, பிரகாசத்தை அளிக்கும். துளசி, வேப்பிலை, மஞ்சள், யூகலிப்டஸ் சேர்த்த நீராவியை மூக்கினுள் உறிஞ்சுவதும் காற்று மாசு விளைவுகளைக் குறைக்கும்.
துளசி, மிளகு, மஞ்சள், அதிமதுரம், திப்பிலி கசாயம் இவை மூச்சுத் திணறல், தொண்டைச் சளி அடைப்பு போன்றவற்றிற்குச் சிறந்த பாதுகாப்பு. மாலை வேளைகளில் இதை இளஞ்சூடாகப் பருகினால் இரவில் கபத்தின் தொல்லை இல்லாமல் நன்கு உறங்கலாம்.
தீபாவளிக் கொண்டாட்டமும் தேர்தல் உற்சாகமும் மகிழ்ச்சியைத் தருகின்றன. ஆனால் அவற்றின் மறுபக்கமான ஒலி மற்றும் காற்று மாசுகள் நம் உடல், மன உணர்வு நலத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. அவற்றால் ஏற்படும் வாத, கபச்சீற்றம் குறைய நாம் தினசரி நஸ்யம், காதினுள் இளஞ்சூடாக எண்ணெய் விடுதல், தியானம், சத்தான உணவு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்.இது நமது உணர்வு உறுப்புகளின் சுகநிலை, மனநிலை, நீண்ட ஆயுள் ஆகியவற்றை உறுதி செய்யும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.