சென்னை, மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் அருகே ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல மையத்தின் 'அகத்தியர் மூலிகைத் தோட்டம்' அமைந்துள்ளது. இங்குள்ள குறுங்காட்டில் ஏராளமான மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. அதை உருவாக்கியதோடு, பராமரிப்பதிலும் 'அத்திக்குழு' என்னும் இயற்கைச் சார்ந்த தன்னார்வ அமைப்பு அக்கறை காட்டி வருகிறது.
'விதைகளே பேராயுதம்' என்னும் வாசகத்தை முன்னிலைப்படுத்தி இயங்கிவரும் இந்த அமைப்பு, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும், பசுமைச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கில் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இக்குழுவின் நிறுவனரான வானவன், எழுத்தாளர் மற்றும் இயற்கை ஆர்வலர். மரபுக் காய்கறிகளின் விதைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். அத்திக்குழுவினரின் ஏற்பாட்டின்பேரில் எளிய மூலிகைகளை அடையாளம் காணும்விதமாக, மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று 'மூலிகை அறிதல்' என்னும் தலைப்பில் மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அகத்தியர் மூலிகைத் தோட்டத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள், அத்திக்குழுவினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அத்திக்குழுவின் உறுப்பினரும், மூலிகை ஆராய்ச்சியாளருமான எம்.மரிய பெல்சின், அங்குள்ள சுமார் 50 மூலிகைகளை இனம் கண்டு அவற்றின் மருத்துவ குணங்களை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கினார். அவர் பேசியதிலிருந்து:
'எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல். அங்குள்ள தாமிரவருணி மற்றும் அதையொட்டிய பகுதியில் நிறைய மூலிகைகள் உள்ளன. சிறு வயதில் எனது அப்பாவுடன் ஆற்றின் தென் பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றுவரும்போது அப்பா சில மூலிகைகளை மருந்துக்காக எடுத்து வருவதைப் பார்த்திருக்கிறேன். இதனால் எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது.
மூலிகைகள் சக்தி வாய்ந்தவை. ஆனால், வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களில் வளரும் பல மூலிகைகளின் மருத்துவ குணம் பற்றி மக்களுக்குச் சரிவரத் தெரியாததால், அதை எடுத்துச் சொல்லும் பணியைக் கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். அந்த வகையில் நான் வசிக்கும் பகுதியில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மூலிகைகளைப் பொதுமக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மருத்துவ குணம் பற்றி விளக்கினேன். மக்கள் அதை ஆர்வத்துடன் கவனித்து, குறிப்புகளும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
இப்பகுதியில் பனை மரங்கள் நிறைய காணப்படுகின்றன. அதனால்தான் இங்கு நீர்வளம் நிறைந்துள்ளது. நிலத்தடி நீரைச் சேமித்து வைப்பதில் பனை மரங்களின் பங்கு மகத்தானது. அதன் அனைத்துப் பாகங்களுமே பலன்தரக்கூடியது.
இந்நிலையில், அண்மைக்காலமாக பனை மரத்தின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கிறது. பனை மரத்தின் அழிவிலிருந்து மனித இனத்தின் அழிவு ஆரம்பமாகிறது என்று சொல்வார்கள். அதனால் பனை விதைகளை நடுவது நாட்டுக்கு நாம் செய்யும் பெரிய தொண்டு. அதை குழுவாக இணைந்து சேகரித்து, பரவலாக எல்லா இடங்களிலும் நடவேண்டும். குறிப்பாக அத்திக்குழு பனை விதைகளை சேகரித்து நடவு செய்வதுடன், இயற்கை சார்ந்த மற்ற அமைப்புகளுக்கும் பனைவிதைகளை அனுப்பி வருகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.