டி.ஏ.மதுரம் - நான் சந்தித்த பிரபலங்கள் - 28

டி.ஏ.மதுரம் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
டி.ஏ.மதுரம் - நான் சந்தித்த பிரபலங்கள் - 28
Published on
Updated on
2 min read

டி.ஏ.மதுரம் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளி, நூற்றாண்டு கொண்டாடிய சிறப்புடையது. 1957-இல் நான் அந்தப் பள்ளி மாணவன். அப்போது, சிவாஜி, பானுமதி நடித்து ஏ.எல்.எஸ். தயாரித்த 'அம்பிகாபதி' படம் வெளியிட வேண்டிய நிலையில், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மறைந்தார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரு நகைச்சுவை நடிகருக்காக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட வரலாறு எங்கேயாவது உண்டா? உலக மகா கலைஞன் சார்லி சாப்ளினுக்கு இணையான என்.எஸ். கிருஷ்ணனின் சிரிப்பு கலந்த சிந்தனைக்காக, ரஷிய நாட்டுக்கு அவர் நேரில் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நாகர்கோவிலில் டென்னிஸ் மைதானத்தில் ஒரு ரூபாய் சம்பளத்துக்குத் தினமும் பந்து சேகரித்து அளித்தவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். 'திரையுலகில் தான் சம்பாதித்ததை எல்லாம் பிறருக்குக் கொடுத்த கொடை வள்ளல், கலியுகக் கர்ணன்...' என்று திரையுலகில் சாதனைகளை நிகழ்த்தியவர்.

தயாரிப்பாளர் ஒருவரின் படம் வெளியாகி, ஓடவில்லை என்று தெரிந்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டார். உடனே அந்தப் படத்தில் இரண்டே நாள்களில் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து, ஓடாத படத்தை ஓட வைத்ததோடு, தனக்கென பணம் எதுவும் இல்லாமல் அந்த லாபத்தை எல்லாம் அந்தத் தயாரிப்பாளருக்கே அளித்து வாழ வைத்த சந்தன மரம்தான் என்.எஸ்.கிருஷ்ணன்.

இவர் மறைவுற்றபோது, புற்றுநோய் சிகிச்சையில் இருந்த முதல்வர் அண்ணாவை மருத்துவர்கள் தடுத்தும், 'என் உயிர் போனால் போகட்டும்' என்று சொல்லி, இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றார்.

1948இல் 'நல்லதம்பி' படத்தில் அண்ணாவைக் கதாசிரியராக அறிமுகம் செய்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். அதுமட்டுமா? பத்மினி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி போன்ற பிரபலங்களை அறிமுகம் செய்ததும் இவர்தான்.

இப்படிப்பட்ட மாமனிதரை, ஸ்ரீரங்கத்தில் 1918இல் பிறந்து, 'திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட்' புணேயில் எடுத்த படமான 'ரத்னாவளி'யில் 1936-இல் நடித்து அறிமுகமான டி.ஏ. மதுரம் காதலித்தார். எம். ஜி. ஆர். நடித்த 'பைத்தியக்காரன்' படத்தில் அவருக்குக் காதலியாக நடித்தவர். அதன்பின்னர், மதுரத்தை கதாநாயகியாக நடிக்கச் சொல்லி ராஜா சாண்டோ வலியுறுத்தியும் மறுத்து, கலைவாணருடன் மட்டுமே நடித்தார்.

மகாத்மா காந்திக்குச் சிலையை கல்கி அமைத்தபோது, அவரை வீட்டுக்கு அழைத்து நன்கொடை அளித்தவர் என்.எஸ். கிருஷ்ணன். அவர் கல்கியிடம், 'காபியா?, டீயா?' என்று கேட்டார். அப்போது கல்கியோ, 'டி.ஏ. மதுரம்' என்றார். காளி என். ரத்னம், சி.டி. ராஜகாந்தத்துக்குப் பிறகு இவர்கள் திரையுலகில் சிறந்து விளங்கினர்.

நியூடோன் ஸ்டூடியோவில் பீம்சிங்கிடம் உதவியாளராக நான் பணிபுரிந்தபோது, 1967இல் 'என். எஸ். கிருஷ்ணன்' என்ற பல தொகுப்பை ஒரே படமாக வெளியிட்டனர்.

அந்தக் காலத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற பிரபலமான இடம் சாந்தோமில் இருந்த ஓஷியானிக் ஹோட்டல். அந்த உரிமையாளர் எம்.எஸ்.ஆர். எம். வீட்டுத் திருமணத்துக்காக டி.ஏ. மதுரம் காரைக்குடிக்கு வந்தபோது, அவரிடம் எல்லோரும் ஆட்டோகிராப் கேட்டனர்.

அப்போது நான் ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்துக் கேட்டேன். உடனே அவர், 'தம்பி, ரூபாய் நோட்டுலேயும், மருத்துவர் சீட்டுலேயும் நான் கையெழுத்துப் போடக் கூடாது' என்று சிரித்தபடி சொன்னார். அவர் பின்னால் ரூபாய் நோட்டுடன் சென்று பார்த்தேன். அவர் சிரித்தபடி காரில் ஏறிப் போய் விட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் நாடக ஆசிரியராக அறிமுகமான நிலையில், ஒருநாள் இரவு மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் 'ராஜகுமாரி' தியேட்டர் அருகே அவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நான் ஓடிச்சென்று காரைக்குடியில் சந்தித்ததைச் சொன்னேன்.

அப்போது அவரிடம் நான், 'எனக்கு நாடகம், திரைப்படம் எழுத வாய்ப்பு வாங்கித் தாருங்கள்!' என்று கேட்டேன். அவர் விரக்தியாகச் சிரித்தபடி, 'நான் 'அபலை அஞ்சகம்' படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் நடித்துவிட்டு இனிமேல் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன். நான் சொல்லி யாரும் கேட்க மாட்டார்கள்' என்றார்.

அவர் என்னிடம், 'ஒரு டாக்ஸி கொண்டு வாருங்கள்' என்றார். நான் ஓடிச் சென்று டாக்ஸியை அழைத்து வந்தேன். அதில் ஏறிக்கொண்டு, 'தம்பி நான் ராயப்பேட்டை போறேன். நீங்க போற வழியிலே எங்கேயாவது போகணும்னா ஏறிக்கொள்ளுங்கள்' என்றார்.

நான் வழி தெரியாத நிலையில் எந்த வழி போவது? 'நீங்க போங்கம்மா?' என்றேன். அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். 'திரைத்துறையில் உள்ளவர்கள் தூங்கும்போது காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லாவிடில் செத்து விட்டான் என்று தூக்கிவிடுவார்கள்' என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை. கலைவாணர் அரங்கத்தைப் பார்க்கும் போதெல்லாம், இது கடற்கரையில் எதிரொலிக்கிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com