'ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் பெறுவதே இலக்கு. எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் கோச்சிங் அகாதெமியைத் தொடங்குவதே லட்சியம்' என்கிறார் பதினோறு வயதான அவ்னி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கணபதி ஜெயஸ்ரீ தம்பதியின் மகளான இவர், ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தனது பெற்றோருடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உள்பட்ட ஷீரடியில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் தங்கப் பதக்கத்தை அவ்னி வென்றுள்ளார். 350 சிறுமிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஜிம்னாஸ்டிக்ஸின் நான்கு வெவ்வேறு போட்டிகளில் அவ்னி பங்கேற்று, மூன்றாமிடம் பெற்று, வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். அவரிடம் பேசியபோது:
'யூடியூப், டி.வி.க்களைப் பார்த்து கால்களை ஸ்ட்ரெட்ச் செய்தல், கர்ணம் அடித்தல் போன்றவற்றில் ஈடுபாடு காட்டினேன். என் ஆர்வத்தைப் பார்த்து அப்பா என்னை வார விடுமுறை நாள்களில் பயிற்சி அளிக்கும் ஒரு நிலையத்தில் சேர்த்துவிட்டார். ஏழு வயது முதல் பத்து வயது வரை தினமும் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டேன்.
ஐந்தாம் வகுப்பில் படிக்கிறேன். எனது ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கு உறுதுணையாக நான் பயிலும் சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகம் இருக்கிறது. இரண்டு வகுப்புகள் முடிந்தவுடன்தான் பள்ளிக்குச் செல்வேன். விட்டுப் போன பாடங்களைக் கொடுத்தனுப்புவார்கள். பள்ளி முடிந்ததும் மீண்டும் பயிற்சிக்குப் போவேன். வந்ததும் தூங்கி விடுவேன். விடுமுறை நாள்களில் படித்து ஈடு செய்வேன்.
பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஸ்கேட்டிங், ரிலே ரேஸ், கிரிக்கெட் என்று பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஏராளமான சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகளைப் பெற்று ஒரு அறை முழுக்க வைத்திருக்கிறேன்.
கர்நாடக மாநில அளவில் 2024இல் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 2ஆம் இடம் பெற்றேன். அகில இந்திய அளவில் ஷீரடியில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பிடமும் பெற்றேன்.
தினமும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கு அழைத்துச் சென்று, பயிற்சி முடிந்து அழைத்து வருதல், பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றில் எனது பெற்றோர் சிரமம் பார்க்காமல் மேற்கொள்கின்றனர். உணவியல் நிபுணர் வழிகாட்டுதலின்பேரில், கூடுதல் புரோட்டின் சமைத்தும் தருகின்றனர்.
பாட்டுப் பாடுதல், நீச்சல், புதிர்ப் போட்டிகள், ஸ்கேட்டிங், போட்டோகிராபி போன்றவற்றிலும் ஆர்வம் உண்டு. ஓய்வு நேரங்களில் ஆங்கில நூல்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களைப் படிப்பேன்' என்கிறார் அவ்னி.
அவ்னியின் தாய் ஜெயஸ்ரீ கூறுகையில், 'கிரந்திவீர் ஜிம்னாஸ்டிக்ஸ் அகாதெமி'யின் பயிற்சியாளர் பசவராஜ், தேசிய அளவில் பல பதக்கங்களைப் பெற்றவர். திறமையுள்ள ஏழைகளிடம் பணம் வாங்காமலே பயிற்சி அளிப்பார். ஜிம்னாஸ்டிக்ஸில் இதுவரை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா 4ஆவது இடம்தான் பெற்றுள்ளது. 'எப்படியும் பதக்கம் கிடைக்க வைப்பதுதான் லட்சியம்' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்' என்கிறார் ஜெயஸ்ரீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.