வள்ளலாக மாறிய மூதாட்டி!

காரைக்குடி தந்த கொடைவள்ளல் அழகப்ப செட்டியார். இவர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ரயில் கடந்து செல்வதற்காக வழியில் கேட் மூடப்பட்டிருந்தது.
வள்ளலாக மாறிய மூதாட்டி!
Published on
Updated on
1 min read

காரைக்குடி தந்த கொடைவள்ளல் அழகப்ப செட்டியார். இவர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ரயில் கடந்து செல்வதற்காக வழியில் கேட் மூடப்பட்டிருந்தது. அதன் அருகில் அழகப்பரின் கார் வந்து நின்றது. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அவரது கார் அருகே மூதாட்டி வந்து நின்றார். அவரது இடுப்பிலிருந்த கூடையில் வெள்ளரிப் பிஞ்சுகள் நிரம்பியிருந்தன.

காரின் கதவைத் தட்டி, 'ஐயா, உங்களுக்கு வெள்ளரிப்பிஞ்சு வேணுமா? தேன் மாதிரி இனிக்கிற வெள்ளரிப்பிஞ்சு, தரவாய்யா? சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும். இன்னைக்கு விற்பனையும் நன்றாக இல்லை. காலணாவுக்காவது வாங்குனா என்னோட மனசு சந்தோஷப்படும்!' என்றார்.

காருக்குள் இருந்த இரக்கக் குணம் நிறைந்த அழகப்பருக்கோ, மூதாட்டியின் பேச்சு ஈர்த்தது. காரின் கண்ணாடியை இறக்கி, வெள்ளரிப்பிஞ்சுகளை வாங்கிக் கொண்டது அவரது கரம். நூறு ரூபாயை மூதாட்டியின் கைகளில் திணித்தார் அழகப்பர்.

'ஐயா, காலணாதான் வெள்ளரிப்பிஞ்சு. இப்படி நூறு ரூபாயைக் கொடுத்தா என்கிட்ட சில்லறை இல்லையேப்பா!' என்றார் மூதாட்டி.

'நீங்களே வச்சுக்கோங்கம்மா! சில்லறையெல்லாம் வேணாம்மா! ' என்ற அழகப்பரின் வார்த்தைகளைக் கேட்டதுமே மூதாட்டியின் முகம் பூரிப்படைந்தது.

வந்திருப்பது வள்ளல் அழகப்ப செட்டியார் தான் என்பதைத் தெரிந்து கொண்ட மூதாட்டியும் காரில் இருந்த அழகப்பரின் கரங்களைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டார். அதோடு மட்டும் நின்று விடவில்லை. உடனடியாக அதே ரயில்வே கேட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கூவிக்கூவி அழைத்து, கூடையிலிருந்த அத்தனை வெள்ளரிப் பிஞ்சுகளையும் வாரி வாரி வழங்கினார் மூதாட்டி.

'அட! என்னம்மா நீங்க... கூடையிலிருந்த அத்தனை வெள்ளரிப்பிஞ்சுகளையும் இப்படி இலவசமாகவே கொடுத்துட்டீங்களே?' என்றார் அழகப்பர்.

'வள்ளல் கையிலிருந்த காசு என்கிட்ட வந்ததுமே எனக்கும் வள்ளல் தன்மை வந்துருச்சுய்யா... உங்கள் கை பட்டதுமே நானும் நாலு பேருக்கு நல்லது செய்யணும்னு எண்ணம் வந்துருச்சுய்யா!' என்று சிரித்துக்கொண்டே சொன்னார் மூதாட்டி.

ரயில்வே கேட் திறக்கப்பட்டது. அழகப்பரும் மூதாட்டியைப் பார்த்து கரம் கூப்பி, கும்பிட்டுக் கொண்டே புன்னகையுடன் கடந்து சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com