

'கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக, என்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியே வெகுவாகப் பாராட்டினார். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கடராமன், முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். அவசரநிலை பிரகடனத்தின்போது, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை இந்திரா காந்தி எவ்வாறு தலைகீழாக மாற்றி நாட்டை அடிமையாக்கினார் என்பதை பற்றிய ஒரு நூலை நான் எழுதினேன்.
அந்த நூலை 1992-இல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வெளியிட்டு, என்னைப் பாராட்டினார். அம்பேத்கர் பித்தனான நான், 'அம்பேத்கர் எவ்வாறு அரசியல் சாசனத்தை உருவாக்கினார்' என்பதைப் பற்றிய ஆங்கில நூலை எழுதினேன். அதை எல். கே. அத்வானி வெளியிட்டார்.
98 வயதிலும் நான் பல்வேறு பழைய விஷயங்கள், உண்மைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். முக்கியப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், நாட்டை வெகுவிரைவில் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு உறுதுணையாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்'' என்கிறார் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே.
'வாழும் வரலாறு' எனச் சிலரைத்தான் குறிப்பிட முடியும். சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே மக்கள் பணியை ஆற்றி வருகிறார் ஹெச்.வி.ஹண்டே. சுதந்திரப் போராட்ட வீரர், மருத்துவர், பழம்பெரும் அரசியல் தலைவர் எனப் பன்முகத் தன்மைகளைக் கொண்ட அவர் தனது 98-ஆவது வயதிலும் மக்கள் சேவையை ஆற்றி வருகிறார்.
'வாழ்க்கையில் சாதித்ததும், சாதிக்க நினைத்ததும் என்ன?' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:
'1927 நவம்பர் 28-இல் கோவையில் பிறந்தேன். எனது தந்தை மருத்துவர் ஹெச்.எம்.ஹண்டே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் ஜி.டி.நாயுடு, ஆர்.எஸ்.முதலியார் ஆகியோருக்கு குடும்ப மருத்துவராகவும் இருந்தார்.
சுதந்திரப் போராட்டத்தில், மருத்துவராக...
1942-இல் மகாத்மா காந்தியின் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் நான் பங்கேற்று, காவல் துறையினரின் தடியடியைச் சுவைத்தேன். 1950-இல் சென்னை ஷெனாய் நகரில் சிறிய மருத்துவப் பரிசோதனை மையத்தைத் தொடங்கி, பணம் இல்லாதவர்களுக்கும் தரமான மருத்துவச் சேவையை வழங்கினேன்.
அரசியல் களத்தில்...
1964-இல் சட்ட மேலவையில் சென்னை மாநகரத்தின் பட்டதாரித் தொகுதி வாக்காளராக இணைவதற்கான வழிமுறை குறித்து செய்தித்தாள்களில் விளம்பரம் வந்தது. வாக்காளராகச் சேர்வதற்கான விண்ணப்பத்தை அதிக அளவில் அச்சடித்து, விநியோகித்தேன். பாதிக்கும் மேற்பட்டோர் என் மூலம் இணைந்தவர்களே. சுயேச்சையாகப் போட்டியிட்ட நான் 2,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வைப்புத் தொகையை இழந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக மு.பக்தவச்சலம், அவைத் தலைவராக மாணிக்கவேல் நாயக்கரும் இருந்தனர். மூதறிஞர் ராஜாஜியின் அழைப்பின்பேரில், நான் சுதந்திரா கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றினேன்.
1967-இல் மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அண்ணா தலைமையிலான திமுகவும், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. வடசென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பணிக்காக அண்ணாவை நான் அழைத்துச் சென்றிருந்தேன். எனது கடுமையான உழைப்பை பார்த்து அவர் வியந்தார். எனது பதவிக்காலம் நிறைவடைய 3 ஆண்டுகள் இருந்தன. 'பூங்கா நகர் காங்கிரஸ் கோட்டை என்பதால், அங்கு ஹண்டேவை சுதந்திரா கட்சி வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம்'' என ராஜாஜியிடம் அண்ணா தெரிவித்தார். நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
எனது வெற்றியைக் கேட்ட காமராஜர், 'எப்போது பூங்கா நகர் தொகுதி காங்கிரஸூக்கு வரவில்லையோ, இனி தமிழ்நாடும் காங்கிரஸூக்கு வராது!'' என்று கூறி, தில்லி புறப்பட்டார்.
1969-இல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. 1971-இல் திமுகவும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸூம் கூட்டணி அமைத்தது. மறுபுறம் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸூடன் சேர்ந்து ராஜாஜியுடன் கைகோர்த்தார். 1971-இல் பூங்கா நகரில் ஏ.வி.பி. ஆசைத்தம்பி என்ற, தோல்வியே அறியாத திமுக வேட்பாளரை எதிர்த்து நின்று நான் வெற்றி பெற்றேன்.
அப்போது, நாடு முழுக்க இந்திரா காந்தியின் ஆட்சி இருந்தது. தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உழைப்பால், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது. நான் சுதந்திரா கட்சி சார்பாக சட்டப் பேரவையில் திமுகவை கடுமையாக எதிர்த்தேன்.
இதற்கிடையே கருணாநிதி, எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1972-இல் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக உருவானது. எம்ஜிஆரை ராஜாஜி மனதார வாழ்த்தினார். பின்னர் ராஜாஜி மறைவுக்குப் பிறகு, திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்றது.
என்னை எம்ஜிஆர் அணுகி, 'நீங்கள் தன்னந்தனியாக திமுகவை எதிர்ப்பதற்குப் பதிலாக என்னுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களுடைய அரசியல் ஞானம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.
1973-இல் அதிமுகவில் இணைய தலைமை நிலையச் செயலராக நியமிக்கப்பட்டேன். அப்போது கோவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்
செ.அரங்கநாயகம் போட்டியிட, தேர்தல் பொறுப்பாளராக நான் இருந்தேன். 'ஹெச்.வி.ஹண்டேவின் உழைப்பு இல்லாமல் இருந்தால் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்திருக்கும்' எனக் கூறி எம்ஜிஆர் என்னை வெகுவாகப் பாராட்டினார். அதற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களுக்கும் என்னையே பொறுப்பாளராக எம்ஜிஆர் நியமிக்க, நானும் சிறப்பாகப் பணியாற்றி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தேன்.
மருத்துவர் பி.சி.ராய் விருது:
சுகாதாரத் துறை அமைச்சராக நான் இருந்த காலகட்டத்தில், தமிழகத்தில் தொழுநோய் அதிகளவில் காணப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு சோதனைகள் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் முற்றியவர்களுக்கு பலமருந்து சிகிச்சை முறைப்படி (எம்.டி.ஆர்.) சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த எம்.டி.ஆர். முறை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் பின்பற்றப்பட்டது. அதன்பிறகு தான் மற்ற மாநிலங்களிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே இருந்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், ஒரு ஒன்றியத்துக்கு 2 அல்லது 3 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைவிட கிளை சுகாதார நிலையங்கள்தான் மிகவும் முக்கியமானவை.
நான் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது, தமிழகம் முழுவதும் 2,600 கிளை சுகாதார நிலையங்கள் மட்டுமே இருந்தன. அடுத்த 5 ஆண்டுக்குள் 8,600 கிளை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன. கரோனா காலத்தில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கிளை நிலையங்களின் மூலமே சிகிச்சை வழங்கப்பட்டது.
போலியோ, தட்டம்மை பாதிப்பு அதிகளவில் இருந்தது. அதை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு போலியோவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றோம். ஒரே நாளில் அனைத்துப் பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டமும் தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமைச்சராக அரசு மருத்துவமனைகளுக்குத் தொடர் ஆய்வு மேற்கொள்வேன். ஆட்சியர்களையும் ஆய்வு செய்யும்படி வலியுறுத்துவது என எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இதனால் அகில இந்திய அளவில் சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை எந்த சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கிடைக்காத 'மருத்துவர் பி.சி.ராய் விருது' எனக்கு வழங்கப்பட்டது.
மருத்துவமனையில் எம்ஜிஆர்:
எம்ஜிஆருக்கு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல அவரது உடல் பயணத்துக்கு ஏற்புடையதாக இல்லை. வெளிநாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்களைக் கொண்டு, விமானத்தைப் பறக்கும் மருத்துவமனையாக நான் மாற்றினேன். எம்ஜிஆரை பத்திரமாக அமெரிக்காவில் நியூயார்க் புரூக்ளினில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தேன். அங்கு அவர் குணம் அடைந்து வந்தார்.
இதற்கிடையே மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களில் எம்ஜிஆர் அமோக வெற்றி பெற்றார். அவர் மீண்டும் முதல்வரானார். நான் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றேன்.
அதிமுக பிளவின்போது...:
1986-இல் அதிமுகவின் பொதுச்செயலராக எம்ஜிஆர் பொறுப்பேற்றவுடன் என்னையும், எஸ்.ராகவானந்தத்தையும் துணைப் பொதுச்செயலர்களாக நியமித்தார்.
1987-இல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. நான் ஜெயலலிதாவின் அணியிலும், எஸ்.ராகவானந்தம் ஜானகி அணியிலும் இணைந்தோம். இரு துணைப் பொதுச்செயலர்களும் இரண்டு அணிகளில் இருந்ததால், அதிமுக சமமாக உடைந்ததாக மத்திய தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
ஜெயலலிதா அணிக்கு 'சேவல்' சின்னமும், ஜானகி அணிக்கு 'இரட்டைப்புறா' சின்னமும் ஒதுக்கப்பட்டது.
1989-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா அணியில் 27 எம்எல்ஏக்களும், ஜானகி அணியில் ஒரு எம்எல்ஏவும் வெற்றி பெற்றனர். 'வரும் காலங்களில் எம்ஜிஆர் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்றால், அது ஜெயலலிதாவால்தான் முடியும்' என்பதைப் புரிந்துகொண்டு ஜானகி அம்மாள் தனது அணியை ஜெயலலிதா அணியோடு இணைத்தார்.
மத்திய தேர்தல் ஆணையமும் இதை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது. அதற்கான உத்தரவு என்னிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அதை ஜெயலலிதாவிடம் நான் ஒப்படைத்தேன். இதன்பின்னர், மருங்காபுரி, மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வேட்பாளர்கள் நியமனம் செய்வது குறித்த உயர்மட்ட கூட்டத்தில், மருங்காபுரியில் 'ஜெ' அணியில் போட்டியிட்ட பேராசிரியர் பொன்னுசாமிக்கும், மதுரையில் 'ஜா'
அணியில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ராதாவுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என நான் யோசனை கூறினேன். அதை அனைவரும் ஏற்றனர்.
இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. அதிமுகவில் இருந்து விலகி, சில ஆண்டுகள் கழித்து பாஜகவில் இணைந்தேன். தற்போது 28 ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வருகிறேன்'' என்கிறார் ஹண்டே.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.