

மாரியின் பாராட்டு - அனுபமா!
மாரி செல்வராஜின் 'பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்திருக்கிறது.
படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.
படம் குறித்து அனுபமா பரமேஸ்வரன் பேசுகையில், 'இது என்னுடைய கரியரில் முக்கியமான ஒரு திரைப்படம். இதுவரை நான் நடித்த படங்களில் இந்தப் படம் ரொம்பவே வித்தியாசமானது.
இந்தப் படத்தின் மூலமாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். சவால்களும் இருந்தன. மாரி செல்வராஜ் நேர்த்தியான நடிப்பை எதிர்பார்ப்பார். ஆனால், இப்படியான கடின சூழலில் என்னுடன் துருவும், ரஜிஷாவும் இருந்தார்கள். தொடக்கத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. நானும் ரஜிஷாவும் ஒரு ஷாட்டில் 52 டேக் எடுத்தோம்.
நான் மாரி செல்வராஜ் சாரின் படத்தின் மிகப் பெரிய ரசிகை. அவருடைய படத்தில் நாம் ரசித்துப் பார்த்த அவுட்புட்டை கொண்டு வருவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது புரிந்தது. இந்த விஷயங்கள் ஒரு முழுமையான திருப்தி உணர்வையும் தந்தன என்று சொல்லலாம்.
அவர் டேக் ஓ.கே. சொன்னாலே எங்களுக்கு விருது கிடைத்த மாதிரியான உணர்வு வரும். படத்தின் எடிட் நடந்து கொண்டிருக்கும்போது மாரி சார், 'உனக்கு ஏன் இப்படியான படங்கள் வரவில்லை? உன்னை யாரும் சரியாகப் பயன்படுத்தவில்லை' என்று சொன்னது மிகப் பெரிய பாராட்டு'' என்று தெரிவித்திருக்கிறார்.
ஆவணப் படத்துக்கு அரவிந்த்சாமி குரல்!
கல்யாண் வர்மா இயக்கத்தில், நேச்சர் இன் ஃபோகஸூம், தமிழ்நாடு அரசு வனத்துறையும் இணைந்து வனவிலங்கு குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆச்சர்யமூட்டும் சுற்றுச்சூழல் செழுமையை இந்த ஆவணப் படம் அழகியலுடன் வெளிப்படுத்துகிறது. வன மகத்துவத்தை உணரச் செய்வதோடு, வனப் பகுதிகளையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதற்கான அக்கறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 'வைல்டு தமிழ்நாடு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஆச்சர்யப்பட வைக்கும் பல்லுயிர் சூழலைக் காட்சிப்படுத்தும் புத்தம் புதிய இயற்கை வரலாற்று ஆவணப் படமாகும்.
தமிழ்நாட்டிலுள்ள மழைக்காடுகள், பவளப் பாறைகள், வறண்ட பகுதிகள் ஒன்றிணைந்து, பூமியின் தனித்துவமிக்க சுற்றுச்சூழலைக் கொண்டிருக்கும் ஓர் அற்புதமான நிலப்பரப்பை உருவாக்கியுள்ளன.
இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, பார்வையாளர்கள் தமிழ்நாட்டின் அற்புதமான நிலப்பரப்புகளில் பயணிப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தென் இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் குழுவுடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், நிலப்பரப்புகளை விளக்கும் நடிகர் அரவிந்த் சுவாமியின் பின்னணிக் குரல் இந்தக் கதையை உயிர்ப்பிக்கச் செய்கிறது.
விருதை குப்பைத் தொட்டியில் போடுவேன் - விஷால்!
விஷால் நடித்து வரும் 'மகுடம்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெறுகிறது. 'அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்' என அந்தப் படத்தின் இயக்குநர் ரவி அரசு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் நடிகர் விஷால் தன்னுடைய திரைத்துறை வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்து வருகிறார்.
விஷால் பேசுகையில் , 'எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விருதுகளெல்லாம் பைத்தியக்காரத்தனம். நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு 7 கோடி மக்களுக்குப் பிடித்த விஷயங்களைச் சொல்வதற்கு அவர்கள் என்ன மேதாவிகளா? நான் தேசிய விருதையும் சேர்த்துதான் சொல்கிறேன். தேசிய விருதுகளுக்கு கமிட்டி இருக்கிறது. ஆனால், மக்கள் சர்வே எடுக்க வேண்டும்.
நான் விருது வாங்கவில்லை என்பதனால் இதைச் சொல்லவில்லை. எனக்கு விருது கொடுப்பதாக அறிவித்தால், நான் அந்த விருதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன். ஒரு வேளை அது தங்கமாக இருந்தால், அதை விற்று அன்னதானத்துக்குக் கொடுத்துவிடுவேன். எனக்கு விருது கொடுத்துவிடாதீர்கள். அதற்குத் தகுதியான மற்ற சிறந்த கலைஞர்களுக்குக் கொடுங்கள் எனச் சொல்லிவிடுவேன்'' எனக் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.