ஸ்ரீகாந்த் - நான் சந்தித்த பிரபலங்கள் - 29

ஸ்ரீகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
ஸ்ரீகாந்த் - நான் சந்தித்த பிரபலங்கள் - 29
Published on
Updated on
2 min read

ஈரோட்டில் 1940, மார்ச் 19-இல் பிறந்தவர் ராஜா வெங்கட்ராமன். ஸ்ரீகாந்த் ராஜா, ஸ்ரீ என்றெல்லாம் அழைக்கப்பட்ட அவர், தன்னை ஒரு நடிகராகக் காட்டிக்கொள்ளாமல் சராசரி மனிதரைப் போல இயல்பாக வாழ்ந்தார்.

இவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' எனும் படத்தில், ஜெயலலிதா

வுடன் கதாநாயகனாக அறிமுகமானார். அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்ததால் அங்கு புதிதாக வந்திருக்கும் புத்தகங்களைப் படித்து, நல்ல கதைகளைச் சொல்லுவார்.

அடிக்கடி மேஜர் சுந்தரராஜன் வீட்டுக்கு வருவார். மேஜரை 'சுந்தா' என்பார். என்னை 'காரைக்குடி' என்பார். கே. பாலசந்தர் இவரை , 'டேய் ஸ்ரீ' என்பதைக் கேட்டு நானும், 'ஸ்ரீ' என்று கூப்பிட ஆரம்பித்தேன். இவர் எனக்குச் சொன்ன, 'சார் என்னைத் தெரியுதா?'' என்ற ஐடியாதான் நான் எழுதிய 'வெளிச்சம்' நாடகம். அது 'அவன்தான் மனிதன்' என்ற படத்தின் சாயலாக வெற்றி பெற்றது.

நான் ஸ்ரீகாந்த் வீட்டில் இரவில் தங்கிவிட்டால், அடுத்த நாள் அவருடைய வேட்டி, சட்டையுடன்தான் படப்பிடிப்புக்குப் போவேன்.

எனக்குத் திருமணமானதும் என்னையும் என் மனைவியையும் அழைத்து அவர் தனது வீட்டில் முதல் விருந்து கொடுத்தார். இருநூறு படங்களுக்கு மேல் நடித்தவர். சிவாஜியின் பல வெற்றிப் படங்களில் இணையான கதாபாத்திரங்களில் நடித்தார்.

நான் எழுதிய ராஜாஜியின் 'திக்கற்ற பார்வதி'யில் ஒரு குடிகார விவசாயியாக இயல்பாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது பெற்றது. ரஜினி கதாநாயகனாக முதலில் நடித்த 'பைரவி'யில் போட்டியாக நடித்தார்.

ஸ்ரீகாந்த் வீட்டுக்கு பிரபல நாவலாசிரியர் ஜெயகாந்தன் அடிக்கடி வருவார். ஜெயகாந்தனின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நான், ஸ்ரீகாந்த், மல்லியம் ராஜகோபால், கே.விஜயன், காமெடி வீரப்பன் ஆகியோர் அடிக்கடி சந்தித்து, தமிழ்ப் படங்கள் குறித்துப் பேசி ரசிகர்களின் மன நிலையை மாற்றும் கதைகளைப் பற்றி விவாதிப்போம்.

ஒருநாள் நான் ஜெயகாந்தனிடம், 'உங்களிடம் கார் இருக்கின்றபோது ஏன் பஸ்ஸில் போகிறீர்கள்?'' என்று கேட்டேன்.

'காரில் போனால் ட்ராபிக் போலீஸைத்தான் பார்க்க முடியும். பஸ்ஸில் போனால் பயணிகளைச் சந்திக்கலாம்!'' என்றார். அதைக் கேட்ட நான் பல ஆண்டுகள் பஸ்ஸில் பயணித்தேன்.

பீம்சிங் இயக்கத்தில் ஜெயகாந்தன், ஸ்ரீகாந்த், லட்சுமி கூட்டணியில் தேசிய விருது பெற்ற 'சில நேரங்களில் சில மனிதர்கள்',' ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' எனத் தமிழ்த் திரை உலகில் பேசப்பட்ட படங்களை யாராலும் மறக்க முடியுமா?

சில நேரங்களில் காரணம் இல்லாமல் கோபப்படுவார். நான் எழுதி இயக்கிய 'மீனாட்சி குங்குமம்' படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்றபோது, முதல் நாளே கோபப்பட்டுச் சொல்லாமலேயே சென்னைக்குச் சென்றுவிட்டார். அதே ஸ்ரீகாந்த் எனது 'அச்சாணி' படத்தில் நடித்தபோது, அட்வான்ஸ் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.

இதே கோபத்தால்தான் கே. பாலசந்தருடன் இருந்த நட்பு சிதறியது. இல்லாவிடில், ஸ்ரீகாந்த்துக்குப் பதில் ரஜினிகாந்த் என்ற நடிகரை பாலசந்தர் கண்டு பிடித்திருக்க மாட்டார் என்பதும் சிலருக்கு மட்டும்தான் தெரியும்.

என்னுடன் பல ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்தவர், முதுமை அடைந்த நிலையில் கைப்பேசியில் பேசுவார். சிலரது பெயரைச் சொல்லி, அவர்களது கைப்பேசி எண்ணைக் கேட்பார். அவர் கேட்டவர்களெல்லாம், 'உயிருடன் இல்லை'' என்று கூறுவேன். அடுத்த நாளே ஞாபக மறதியால் மீண்டும் அவர்களைப் பற்றிக் கேட்பார்.

வாழ்க்கையை விளையாட்டாக நினைத்தவரின் மரணம் 2021, அக்டோபர் 12-இல் நிகழ்ந்தது. அவரது இறப்பு திரையுலகில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல், சில மணி நேரங்களில் இறுதி யாத்திரை முடிந்தது. அவருடன் பழகியவர்களின் கண்ணீரில் கரைந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com