பாட்டிகள் படிக்கும் பள்ளி

பள்ளி என்றால் சிறுவர், சிறுமிகள்தான் படிப்பார்கள் என்பதில்லை.
பாட்டிகள் படிக்கும் பள்ளி
Published on
Updated on
2 min read

பள்ளி என்றால் சிறுவர், சிறுமிகள்தான் படிப்பார்கள் என்பதில்லை. இளம்வயதில் படிக்க வாய்ப்புக் கிடைக்காத 'கை நாட்டு'ப் பெண்களும், மூதாட்டிகளும் முறைசாரா பள்ளியில் சேர்ந்து படிக்கலாம்.

மகாராஷ்டிராவில் 'பங்கானே' கிராமத்தில் வயதான பெண்களுக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. பிற்பகல் மூன்றரை மணிக்கு அவர்கள் பாடப் புத்தகங்கள் அடங்கிய பைகளை எடுத்துக் கொண்டு சக 'தோழி'களுடன் பேசிக்கொண்டே பள்ளி செல்லும் அழகே அழகு!

'ஆஜிபாய்ச்சி ஷாலா' அல்லது 'பாட்டி பள்ளி' என அழைக்கப்படும் இந்த முதியோர் பள்ளி தனித்துவமானது. மராத்தியில் 'ஆஜிபாய்' என்றால் பாட்டி என்று பொருள். இங்கு மூதாட்டிகள் படிக்க, எழுத, அடிப்படை எண் கணிதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 'பாட்டி பள்ளி'யை நடத்துபவர், கிராமத்தின் தொடக்கப்பள்ளியின் ஆசிரியரான யோகேந்திர பங்கர். மோதிராம் தலால் அறக்கட்டளையின் ஆதரவுடன் இது செயல்படுகிறது.

பாட்டி பள்ளி குறித்து யோகேந்திர பங்கர் சொல்வது:

'முதியோர் பள்ளி என்றாலும் பள்ளிக்குச் சீருடை உள்ளது. பிரகாசமான இளஞ்சிவப்பு நிறப் புடவைதான் சீருடை. அதை அணிந்து வயதான பெண்கள் அடங்கிய குழு ஒவ்வொரு நாளும் மாமரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகையில் கூடுகின்றனர். வகுப்பு நேரம் பிற்பகல் 4 மணி முதல் மாலை 6 மணி வரை. இங்கு எண்பது வயதான சிலரும் உள்ளனர்.

இந்தக் கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு தங்கள் பெயரை எழுதத் தெரியும். கையொப்பம் போட வரும். இங்குள்ள வயோதிகப் பெண்களுக்கு அதெல்லாம் தெரியாது. இளம் பருவத்தில் முறையான கல்வியைத் தவறவிட்ட இவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்தப் 'பாட்டி பள்ளி' அமைந்துள்ளது. வகுப்பறையில் விரிக்கப்பட்டிருக்கும் கம்பளத்தில் அமர்ந்து படிக்க வேண்டும். வகுப்பில் மராத்தி எழுத்துகள், எண்கள், தங்கள் பெயர்களை எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

'பாட்டி பள்ளி'யில் படிப்பவர்கள் வயது அறுபதுக்கும் மேல் இருந்தாலும், பள்ளியின் வயது '9' தான். 2016 -இல் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-இல் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், நல்ல மனம் கொண்ட உள்ளூர் ஆசிரியரின் வீட்டில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், பள்ளியில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஊரில் பொது இடத்திலுள்ள பெரிய மாமரத்தின் கீழ், கொட்டகை உருவாக்கப்பட்டது. இப்போது சுமார் 30 பெண்கள் வாரத்தில் ஆறு நாள்கள் மதியம் இரண்டு மணி நேரம் பள்ளிக்கு வந்து படிக்கிறார்கள்.

பெண்கள் முதுமையிலும் வீட்டு வேலைகளைப் பார்க்கிறார்கள். வீட்டை நிர்வகிக்கிறார்கள். பேரக்குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள். சமைக்கிறார்கள். வீட்டில் கால்நடைகள் இருந்தால் அவற்றையும் பராமரிக்கிறார்கள். இருந்தாலும், மதியம் வீட்டில் ஓய்வு எடுக்காமல், குட்டித் தூக்கம் போடாமல் வகுப்புகளில் கலந்து கொள்ள மதியம் ஆர்வத்துடன் வந்துவிடுகிறார்கள். தோழிகளுடன் பள்ளி வந்து போவது அவர்களுக்கு உற்சாகமாக அமைகிறது.

கல்வியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள நேரத்தில், கல்வியறிவு இல்லாத முதிய பெண்களுக்குக் கல்வி கற்பிப்பது தேவையான முயற்சிதான். குறிப்பாக கிராமப்புறங்களில் நடக்கும் குறைந்த வயதில் நடக்கும் திருமணங்கள் பள்ளி, மேல் படிப்புகளுக்குத் தடையாகின்றன. கல்வி இடைவெளியை முதுமையில் 'பாட்டி பள்ளி' நிவர்த்தி செய்கிறது. நீண்ட காலமாக மறுக்கப்பட்ட திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இப்போது கிராமத்தில் 9-ஆம் வகுப்பு வரை படித்த ஷீதல் மோர் என்பவர் 'பாட்டிகளை' படிப்புக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். பள்ளியில் படிக்கும் பாட்டிகளில் ஷீத்தலின் மாமியாரும் ஒருவர். பாட்டிகளைக் கையாள்வதற்கு மிகுந்த பொறுமை தேவை. அவர்களின் கற்றல், புரிதல் மற்றும் கிரகிக்கும் வேகம் மெதுவாக இருக்கும். சில நேரங்களில் அவர்கள் முந்தைய வகுப்பில் கற்றுக்கொடுத்த பாடங்களைக்கூட மறந்துவிடுகிறார்கள். முதியவர்களிடம், கண்டிப்பாக இருக்க முடியாது. இவர்களைக்கென்று சில பிரச்னைகள் இருந்தபோதிலும், தவறாமல் வகுப்புகளுக்கு வந்துவிடுகின்றனர்.'' என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com